தொடர்கள்
தொடர்கள்
சந்திப்போம் பிரிவோம் 11 - பொன் ஐஸ்வர்யா

20240429184716701.jpg

அமெரிக்கவாழ் இந்தியர்களின் சமூக வாழ்க்கை:

புளோரிடா மாகாணத்தில் ஏறத்தாழ வருடம் முழுவதும் பகலில் நல்ல சூரியஒளி கிடைப்பதாலும் பசுமையான நிலப்பரப்பும் அழகிய வெண்மணல் கடற்கரைகள் நிறைந்திருப்பதாலும் ஓய்வு கால வாழ்க்கைக்கு (Retirement Living) மிகவும் ஏதுவான இடமாக அமெரிக்க மக்கள் இதனைக் கருதுகின்றனர்.

நகரத்தை விட்டு பத்து மைல் வெளியே சென்றால் நிறைய விவசாயப் பண்ணைகள் உள்ளன. ஐம்பது ஏக்கர் நூறு ஏக்கர் என்று பரந்து விரிந்த பண்ணைகளில் வெள்ளைக்கார விவசாயிகளைப் பார்க்கலாம். நவீனமயமான ஆரஞ்சுத் தோட்டங்கள், செக்கச் செவேல் ஸ்ட்ராபெரி தோட்டங்கள் என வகைவகையான பழத்தோட்டங்கள். குதிரை, பசுக்கள் போன்ற கால்நடைப் பண்ணைகள், பூச்செடிகள் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நர்சரிகள் என்று நிறைய உள்ளன.

ஓரிரு வார கடைசி நாட்களில் பொது மக்களை பழத்தோட்டங்களில் அனுமதிக்கின்றனர். கார்டன் பிரஷாக பழங்களை நாமே தேவைக்கு தேர்ந்தெடுத்து பறித்து எடுத்து, பணம் கொடுத்து வாங்கி வரலாம். (தோட்டத்திற்குள் சாப்பிடுவது எல்லாம் இலவசம்தான்!) வாரக்கடைசியில் குடும்பத்துடன் ஒரு பிக்னிக் போன மாதிரியும் ஆகும், பிரஷ்ஷாக நம் கையாலேயே பழங்களை பறித்து எடுத்த திருப்தியும் இருக்கும்.

20240429184829453.jpg

இந்திய வம்சாவளி மக்கள் ஹோலி, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகைகளை அவரவர்கள் கம்யூனிட்டி மைதானங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடுவது வழக்கம். அம்மாதிரியான விழாக்களில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் விதவிதமான உணவுப் பண்டங்களை சமைத்துக் கொண்டு வந்து எல்லோருமாய் பகிர்ந்து பரிமாறி உண்ணுவது ஆகச் சிறப்பான அம்சம். இந்த வகையான உணவு பரிமாற்றத்தை பாட்லக் பந்தி (Potluck party) என்கிறார்கள்.

20240429184902366.jpg

நம் இந்தியக் குழந்தைகள் இங்கே பேசுவது என்னவோ நுனி நாக்கு ஆங்கிலம்தான். நாம் கல்லூரியில் படித்த காலத்தில் சிரமப்பட்டு கற்றுக்கொண்ட “இங்கிலீஷ் வெகாபுலரி” எல்லாம் மழலை மாறாத குழந்தைகள் போகிற போக்கில் பேசுவதைப் பார்த்தால் மூக்கில் விரல் வைக்கத் தோன்றுகிறது.

ஆனாலும் நம்மவர்கள் தமிழ் மொழியை மறந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் வாரக் கடைசி மாலை நேரங்களில் தமிழ் தெரிந்த தன்னார்வலர்களைக் கொண்டு சிறப்பு தமிழ் வகுப்புகளை நடத்துகிறார்கள். கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களின் குடும்ப வாரிசு திரு சிவசுப்ரமணியம் அவர்கள் தமிழ் மொழியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, டாம்பா நகரில் பல தமிழ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை சிறப்புற செய்து கொண்டிருக்கின்றார். அவரையும் அவரது குடும்பத்தாரையும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது.

20240429184948157.jpg

டாம்பா நகரத்திலிருந்து சுமார் 10 மைல் தூரத்தில் புளோரிடா இந்து கோவில் அமைந்துள்ளது. இதன் மூலவர் அருள்மிகு வெங்கடாஜலபதி ஆவார். சுமார் முப்பது ஆண்டுகளாய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இக்கோவிலில் பிள்ளையார், சிவன், முருகன் ஆகிய சன்னதிகளும் உள்ளன. ஆட்டோமேட்டிக் அர்ச்சனை சீட்டு வழங்கும் மெஷின் இங்கு இருக்கிறது. பெயர் நட்சத்திரம் ‘எண்டர்’ செய்து பதினோரு டாலர் கார்டு ‘ஸ்வைப்’ பண்ணினால் அர்ச்சனை சீட்டு வெளிவருகிறது.

வேறொரு பகுதியில் பதினெட்டு படிகளோடு அருள்மிகு ஐயப்பன் கோவிலும் உள்ளது. சுற்றுப்பகுதியில் வாழும் தென்னிந்திய பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலையணிந்து நாற்பத்தெட்டு நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை வழிபடுகின்றனர். இன்வர்னெஸ் என்கிற இடத்தில் அமைந்துள்ள ஷிரிடி சாய் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஒவ்வொரு சனிக் கிழமையும் இங்கு வரும் பக்தர்களுக்கு மதிய உணவு பிரசாதமாக வழங்கப் படுவது சிறப்பு.

20240429185046117.jpg

அமெரிக்கா கட்டுப்பாட்டு வரையரைகளுக்குப் பெயர் பெற்றது. மனிதர்கள் மட்டுமல்ல, புல்வெளிகள் செடி கொடி மரங்கள் எல்லாம் நறுக்கி பழக்கி கட்டுக்குள் வளர்க்கப் படுகின்றன.

பொது இடங்களில் சுவர்கள் பாலங்கள் தெரு கேபினெட்டுகள் கம்பங்கள் அனைத்தும் நம்மூரில் விளம்பர போஸ்டர் ஒட்டுவதற்கும் விளம்பரம் எழுதுவதற்கும் உரிமையாய் எடுத்துக் கொள்வது சகஜம். இதனால் சுற்றுச்சூழல் வீணாகிறது. இந்த வேலையெல்லாம் அமெரிக்காவில் நடக்காது. அனுமதி இல்லாமல் கண்ட இடங்களில் விளம்பர போஸ்டர் ஒட்ட முடியாது. சாலையருகிலுள்ள புல்வெளியில் விளம்பர செய்தி தாங்கிய தகடுகளை தற்காலிகமாய் பொருத்தி பின்னர் அவற்றை அப்புறப் படுத்தி விட வேண்டும். இது தவிர முறையான ஹோர்டிங் தூண்கள் சாலையோரம் உயரமான இடங்களில் விளம்பர கம்பனிகளால் முறையாக நிர்வகிக்கப்படுவது தனி.

20240429185130716.jpg

சாலைகளில் CCTV காமிராக்களை இந்தியாவிலும் பார்க்கிறோம். அவை பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் பொருத்தப் பட்டிருக்கும். அவற்றின் இணைப்பு கேபிள்கள் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது வாடிக்கை. விபத்து திருட்டு பேன்ற அசம்பாவிதங்களை கண்காணிக்க வேண்டிய பாதுகாப்பு கருவிகளுக்கே போதிய பாதுகாப்பு இருக்காது.

ஆனல் இங்கே அப்படி இல்லை. CCTV காமிரா மற்றும் இணைப்புகள் எந்தவித நாசவேலை அழிவுகளுக்கு அப்பாற்பட்டு மிகுந்த உறுதியாகவும் திடமாகவும் அமைக்கப் பட்டுள்ளன. காமிராக்கள் சக்திவாய்ந்த PTZ வகையிலானது. சுமார் ஐம்பது அறுபது அடி உயர பெரிய இரும்புத் துண்களில் அவை பொருத்தப் பட்டு சாலைகளை, சுற்றுபுறங்களைக் கண்காணிக்கின்றன.

பயணம் தொடரும் ….