தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு    நற்றிணை 21 -மரியா சிவானந்தம் 

20250127221630344.jpg

விண்மீன்கள் சூழ ,வெண்மதி ஒளிவலம் வரும் இரவு நேரம்.

அக்காதலி கண்ணுறக்கம் இன்றி தவித்துக் கொண்டு இருந்தாள்.

பணி நிமித்தம் அயலூர் சென்று வருவதாக சொல்லிச் சென்ற காதல் கணவன் திரும்பி வரும் அறிகுறி எதுவும் இல்லை.

அவன் எந்த நாட்டில் ,எந்த ஊரில் இருக்கிறான் என்ற தெளிவும் அவளுக்கு இல்லை.

அந்த கடற்புறத்து நங்கை வெளியில் வருகிறாள்.

விண்ணில் உலா வரும் வெண்ணிலா அவள் கண்ணில் தெரிகிறது.

அந்நிலவிடம் தன் கவலையைக் கூறுகிறாள்.

"உயரத்தில் இருந்து உலகைப் பார்க்கும் நிலவே, நீ போகும் வழியில் என் கணவனைக் கண்டாயா?

நிச்சயமாக நீ அவனைப் பார்த்திருப்பாய்.

'நான் அவனை பார்க்கவில்லை' என்று நீ சொன்னால், நீ பொய்யுரைப்பதாகவே பொருள்.

அவ்வாறு பொய்யுரைத்தால் , நீ தேய்ந்துதான் போவாய் " என்று நிலவைக் கடிந்துக் கொள்கிறாள்.

இந்த நற்றிணை நாயகியின் கோபக் கூற்று இது.

"பளிங்குக் கற்கள் விரவிக் கிடப்பதைப் போல விண் மீன்கள் சுடர்விடும் வானத்தில் .பாலை முகர்ந்து வைத்தது போல ஒளிவிடும் வெண்மதியே!

உன் குளிர் ஒளியால் என்னை மயக்கி துன்புறுத்துவதை நீ அறியாய்.

உன் மேன்மையும் , செம்மையையும் தெரிந்த நான் உன்னை ஒன்று கேட்கட்டுமா?

நீ உயரத்தில் உலா வருவதால்,உன் கண் பார்வையிலிருந்து உலகில் எதுவும் தப்ப முடியாது.

எனக்குத் தெரியாமல் எங்கோ மறைந்து வாழும் என் காதலன் இருக்கும் இடத்தை நீ எனக்கு காட்டு.

நான் இத்தனை பணிவாக கேட்கும் போது , "எனக்கு அவன் இருக்கும் இடம் தெரியாது' என்று நீ சொல்வாய் என்றால், நீ பொய் சொல்பவன் ஆகிறாய்.

இவ்வாறு பொய்யாக சாட்சி சொல்லும் நீ தேய்ந்து போவாய்.கணவன் இன்றி மெலிந்த என் தோளைப் போல நீ தினமும் தேய்ந்துதான் போவாய். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நீ ஒருநாள் மறைந்து போவாய். " என்று கோபத்துடன் பேசுகிறாள் அப்பெண்.

அந்த அழகிய பாடல் இது.

பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே

(நற்றிணை -196)

இப்பாடலை எழுதியவர் வெள்ளைக்குடி நாகனார்.

நிலவு தேய்வதும் , பின் வளர்வதும் இயற்கை நிகழ்வு . அவ்வுண்மையை உணர்ந்த போதும் , "என் காதலனைப் பற்றி உண்மையை நீ சொல்லாததால் தேய்வாய்" என்று கடித்துக் கொள்வது நாகனாரின் கவி அழகு.

மேலும் ஒரு நல்ல நற்றிணைப் பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

தொடரும்..