தொடர்கள்
மருத்துவம்
சர்க்கரை நோய் முடிவுக்கு வருகிறதா ?? - மரியா சிவானந்தம்

20240431205526572.jpg

நீரழிவு நோய் குணமாக்க முடியாத நோய் என்றும், அதைக் கட்டுக்குள் வைக்கவே முடியும் என்பதே நம் நம்பிக்கையாக இன்று வரை இருக்கிறது.

அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் புதிய சிகிச்சை முறையை சீனா உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது .

பரம்பரை மரபணுக்கள் வழியாக நீரழிவு நோய் கடத்தப்படுவது மட்டும் அன்றி, நாம் வாழும் முறையாலும் (Life style ) நம்மை இவ்வியாதி தாக்குகிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது இன்சுலின் என்னும் ஹார்மோன் . அது கணையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கணையம் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யாத போதும் , அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் உடலின் செயல்பாட்டுக்கு பயன்படாத போதும் ஏற்படும் குறைபாட்டை நீரழிவு என்று சொல்கிறோம் . இதைக் கட்டுக்குள் வைத்திருக்க போதிய உடற்பயிற்சி , நடை ,, உணவுக்கட்டுப்பாடு இவற்றுடன் மருந்துகள் எடுக்க வேண்டி உள்ளது . ஊசி வழியாக இன்சுலின் எடுக்கும் நிலையும் ஏற்படுகிறது .

It is not a disease ,it is a disorder என்று நீரழிவைச் சொல்வது உண்டு .ஆனால் எந்த நோயையும் விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள் உறுப்புகளை சேதப்படுத்தும் கொடுமையை செய்கிறது எனவே இது ஒரு உயிர்க் கொல்லி நோயாகவே கருதப்படுகிறது .இதை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்று இதுவரை மருத்துவ உலகம் நம்பி வந்தது . ஆனால் இப்போது சீனாவில்கண்டறிந்த புதிய மருத்துவ சிகிச்சை மூலம் இந்நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்கள் .

ஒரு புதுமையான செல் தெரபி வழியாக சீன மருத்துவர்கள் ஒரு தீர்வு கண்டுள்ளனர். ஷாங்காய் சாங்ஜெங் மருத்துவமனை(Changzheng Hospital ) யின் ஆராய்ச்சி கழகத்தைச் சார்ந்த மாலிக்கியூல் செல் சயின்ஸ் சிறப்பு மையம் மற்றும் ரெஞ்சி மருத்துவமனை இணைந்து இந்த புதிய சிகிச்சை முறை உருவாக்கப்பட்டுள்ளது.

தினமும் இன்சுலின் ஊசிகள் போட்டுக் கொண்டு இருந்த Type 2 நீரிழிவால் பாதிக்கப்பட்ட சீன நோயாளி ஒருவருக்கு இந்த செல் தெரபி செய்யப்பட்டது . கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யக்கூடிய "ஐலெட் "(Islet )எனப்படும் திசுக்களை செயற்கை முறையில் ஆய்வகத்தில் உற்பத்தி செய்து அதை இந்த நோயாளிக்கு 2021 ஆம் ஆண்டு உயிரணு மாற்றம் ( Cell Transplant ) செய்தனர் .

இந்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ,பதினோரு வாரங்களில் அவர் இன்சுலின் போடுவதை நிறுத்தி விட்டார்.தொடர்ந்து ஒரு வருடத்தில் வாய் வழி எடுக்கும் மருந்துகளையும் படிப்படியாக குறைத்து விட்டார் .33 மாதங்களுக்குப் பின்னர் அவர் எல்லா மருந்துகளையும் நிறுத்தி விட்டு நீரழிவில் இருந்து பூர்ணமாக விடுதலை பெற்றார் . மேனாட்டு மருத்துவர்கள் பலர் இந்த சிகிச்சை முறையை பாராட்டுகின்றனர்.

இது ஒரு மருத்துவ அற்புதம். நீரழிவு சிகிச்சையில் ஒரு மைல்கல் . பாகற்காயும் ,கோதுமை சாதமும் உட்கொண்டு ,வாழ்நாள் முழுவதும் மருந்துகளின் துணையோடு ஆயுளை நீட்டிக்கும் பேர்வழிகளுக்கு இந்த உயிரணு மாற்ற சிகிச்சை ஒரு வரப்பிரசாதம் . இது எல்லாருக்கும் உகந்த சிகிச்சை என்று நிரூபிக்கப்பட்டால் உலகில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் . பாதிக்கப்ட்டவர்கள் முழுமையாக குணம் அடைய வாய்ப்பு உண்டு.

இந்தியாவுக்கு இந்த சிகிச்சை முறை அறிமுகப்படுத்தும் முன் அதற்கான அங்கீகாரம் பெற வேண்டும் . இந்த அதி நவீன State of the art சிகிச்சை மென் மேலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட தாமதம் ஆகலாம்.

இன்னொரு கோணத்தில் இந்த உலக பொருளாதாரத்தை நகர்த்திச் செல்வது மருத்துவ நிறுவனங்கள் தான்.

நீரழிவு தான் அவர்களுக்கு பணம் கொட்டும் மரம். 110 இருந்த அளவை 80க்கு மாற்றியதே அவர்களின் உட்டாலங்கடியால் என்று வாதாடும் ஒரு குழு இருக்கிறது.

இது போக பில்லியன் டாலர்களை கொட்டோ கொட்டு என்று கொட்டும் ஒரு விஷயத்தில் அவ்வளவு சீக்கிரம் தீர்வு காண விட மாட்டார்கள் எதாவது கட்டையைப் போடுவார்கள் என்றும் அந்த குழு ஆணித்தரமாக சொல்கிறது.

கோவிட் சமயத்தில் தான் இந்த மருத்துவ மாஃபியாக்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பார்த்தோமே ??

இந்த வினாடி சர்க்கரை நோய் தீர்ந்த பாடில்லை. ஆனாலும்......

நம்பிக்கை தானே வாழ்க்கை. !! நம்புவோம் தீர்வு விரைவில் வரும் என்று. !!!