சென்னை: டிசம்பர் மாத மிக்ஜம் புயல் சென்னையில் பல இடங்களை பதம் பார்த்து விட்டு சென்றது. அதன் சூறாவளித்தனத்தில் சிக்கிய ஒரு பகுதி எண்ணூர். இங்குள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பாக்டரியில் இருந்து எண்ணெய் கழிவுகள் புயலின் தாக்கத்தால் எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்துவிட்டது. இந்த எண்ணெய் கசிவு கிட்டத்தட்ட பதினோரு கிலோமீட்டர் பயணித்து முகத்துவாரம் தாண்டி வங்க கடலிலும் கலந்து விட்டது.
புயல் அடித்த நேரம் குளிர் காலமாகும் அந்த சமயத்தில்தான் வட மாநிலத்தின் உரை பனி நிலையை தவிர்த்து பல பறவைகள் தென்புலம் நோக்கி வலசை வரும். இவ்வாறு வலசை வந்த பத்து கூழைக்கடாக்கள் (Spot-billed pelicans) எண்ணெய் கசிவில் சிக்கிக் கொண்டன.
மாநில வனத்துறையும் பறவையியலாளர்களும் கூட்டாக சேர்ந்து எண்ணெய் கசிவில் சிக்கிய கூழைக் கடாக்களை டிசம்பர் மாதம் பத்திரமாக பிடித்து அவற்றை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு எடுத்து வந்தனர். வைல்ட் லைப் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் மருத்துவ குழு டாக்டர் என் வீ கே அஷ்ரப் தலைமையில் பிடிக்கப்பட்ட பறவைகளின் உடலில் இருந்தும் அவைகளின் இறக்கைகளில் இருந்தும் எண்ணெய் திட்டுக்களை சுத்தம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
மாநில வன செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில் எண்ணெய் கசிவின் தாக்கத்தை அளவிட முற்பட்ட போது அதில் கூழைக்கடாக்களும் சிக்கி உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். ஆனால், இந்த மாதிரியான எண்ணெய் கசிவுகளில் சிக்கிய பறவைகளை மீட்டு அவற்றின் மீதுள்ள எண்ணெய் பசைகளை சுத்தப்படுத்த முடியும் என்றும் அஷ்ரப் கூறினார். இதற்காக வெளிநாட்டில் இருந்து பாத்திரங்கள் சுத்தம் செய்ய பயன்படும் சோப்பினை வரவழைத்து அதை அந்த பறவைகளின் உடம்பிலும் இறக்கைகளிலும் தேய்த்து சுத்தம் செய்தால் அவை தங்களின் பழைய நிறத்தை பெற்று பறக்கவும், நீந்தவும் வசதியாக இருக்கும் என அவர் தெரிவித்ததோடு அதற்காக உதவுவதாக உறுதியளித்தார்.
அஷ்ரப் கூறுகையில் பிடிக்கப்பட்ட பத்து பறவைகளையும் ஒவ்வொன்றாக பிடித்து அவற்றின் இறக்கைகள் மற்றும் உடலில் தினமும் சோப்பை தேய்த்து பிறகு அந்த பறவைகள் மீது நீரை பீய்ச்சி அடிப்போம். இவ்வாறு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இந்த வேலையே மேற்கொண்டோம். மெதுவாக எண்ணெய் பசைகள் பறவைகளின் உடம்பிலிருந்தும், இறக்கைகளில் இருந்து வெளியேற தொடங்கியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. எண்ணெய் கசிவுகள் இறக்கைகளின் ஊடே சென்று தங்கி விட்டதால் அந்த அழுக்குகளை அவ்வளவு சுலபமாக நீக்க முடியாது. அதனால் பறவைகள் தங்கள் அலகுகளால் சிறகின் உட்புறம் தங்கியிருக்கும் அந்த அழுக்குகளை நீக்க முயற்சிக்கும். எங்களது சுத்தம் செய்யும் பணி நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது என்றார் அவர்.
பிறகு அவற்றின் நீந்தும் திறனை கண்டறிந்து அவை சரியாக நீந்தும் பட்சத்தில் மீண்டும் எண்ணூர் முகத்துவாரத்தில் அவைகளை விட்டு விடுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெரியதொரு தொட்டியினை வெளிநாட்டில் இருந்து வரவழைத்தோம், என்றார் சுப்ரியா சாஹு. இந்த தொட்டியின் நீர் கொள்ளளவு 2,600 லிட்டர். தொட்டியை பறவைகள் இருந்த கூண்டிலே வைத்து தண்ணீரையும் நிரப்பி வைத்தனர் வனத்துறை ஊழியர்கள்.
சென்னை வன உயிரின காப்பாளர் ஈ பிரசாந்த் கூறுகையில் முதல் நாள் பெலிக்கன்கள் அந்த தொட்டியின் பக்கமாய் செல்லவே இல்லை. நாங்களும் புதிதாக உள்ள ஒரு தொட்டியினை கண்டு பயந்து இந்த பறவைகள் அருகிலே வரவில்லை. சில நாட்கள் சென்ற பின்பு அவை தானாக தொட்டியில் உள்ள நீரில் இறங்கி நீந்த தொடங்கும் என எண்ணிணோம். ஆனால் அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. பெலிக்கன்கள் கடைசி வரை அந்த தொட்டியின் உள்ளே இறங்கி நீந்தவே இல்லை.
கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் சென்ற நிலையில் அந்த பறவைகளை மீண்டும் எண்ணூர் முகத்துவாரத்திலே திரும்ப விட்டு விடுவது என முடிவு செய்யப்பட்டு, கடந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று பெலிக்கன்கள் அவைகளுக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மரக் கூண்டுகளில் வைக்கோல் கொண்டு ஏற்படுத்தப்பட்ட சிறிய மெத்தைகளில் அமர வைக்கப்பட்டு சிறுவர் பூங்காவில் இருந்து எண்ணூர் முகத்துவாரத்திற்கு எடுத்து வரப்பட்டன.
பத்து பறவைகளும் முகத்துவாரத்தில் உள்ள ஒரு மணல் திட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அவை ஒவ்வொன்றாக கூண்டிலிருந்து திறந்து விடப்பட்டன. அனைத்து பறவைகளும் சுதந்திர காற்றை சுவாசிக்க வேகமாக கூண்டிலிருந்து வெளியேறின. கூண்டு திறந்த பத்து நிமிடத்திற்குள் அவை இரண்டு குழுக்களாக பிரிந்து, நீரில் நீந்த ஆரம்பித்துவிட்டன. தங்கள் சொந்த இடர்த்திகே வந்துவிட்ட மகிழ்ச்சியில் ஐந்து பெலிக்கன்கள் ஒரு சிறிய மரக் கிளையின் மீது ஏறி ஒய்யாரமாக அமர்ந்து கொண்டன. இரண்டாவது குழு உல்லாசமாக நீரில் நீந்தி இரை தேடும் பணியை தொடங்கின.
சுப்ரியா சாஹு கூறுகையில் நாட்டிலேயே எண்ணெய் கசிவுகளில் சிக்கிய பெலிக்கன் பறவைகளை மீட்டு, எண்ணெய் கழிவுகளை சுத்தம் செய்து மீண்டும் இந்த பறவைகள் எந்த இடத்தில் பிடிக்கப்பட்டனவோ அதே இடத்தில் பத்திரமாக விடப்பட்டது இதுவே முதன்முறையாகும் . இது வனத்துறை மற்றும் வைல்ட் லைஃப் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் கூட்டு முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கூறினார்.
PROTECT FOREST, WILDLIFE AND ENVIRONMENT FOR POSTERITY
Leave a comment
Upload