கனவுகள் விரிக்கும் மாயக்கம்பளம் எல்லோரிடமும் இருக்கிறது. ஜிவ்வென்று ஏறி பறக்க அவர்களிடம் லகானும் இருக்கிறது. தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும், எல்லோரின் அழுக்குகளைத் துவைக்கவும், அழற்சியும், உழற்சியும் என்று ஒரு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்பவர்கள் எல்லோரிடமும் கனவுகள் உண்டு தானே? அந்தக் கனவுகளை நனவாக்கும் கலன்களும், ஆசையும் அவர்களிடம் இருக்கத்தானே செய்கிறது. அந்த கனவுக்குமிழ்களைத் திறவு குமிழ்களாய் மாற்ற, எல்லோருக்கும் திறக்கும் தானே கதவுகள்? திண்மையுறக்கட்டவும், அதற்கு ஏது செய்யவும் ஒரு மணற்துகளோ அல்லது துளி நீரோ அல்லது ஒரு சூரியக்கதிரின் துனுக்கொளியோவாகவோ இருந்து விட எனக்கு சம்மதமே!
திருமுக்குளத்திற்கு
பொதி அழுக்குச்சுமையுடன்
தீப்பெட்டி ஒட்டும் தோழிகளுடன்
வருவாள் வனஜா மதினி
அவளை நீச்சலில் மிஞ்ச ஆளில்லை அப்போது
துவைப்பதற்கு திருமுக்குளம் என்பது சாக்கு
மூட்டைகளை படியிலேயே விட்டுவிட்டு
தூக்கிக் கட்டிய பாவாடையுடன்
படிமுகப்பிலிருந்து ஒரு மீனாய் நழுவுவாள்
அரசமரப்படிக்கட்டிலிருந்து
மையமண்டபத்தை தொட்டுவிட்டு வருவாள்
தூக்கி எறியும் சில்லறைக்காசை
துல்லியமாய் அறிந்து எடுத்துவருவாள்
மூச்சைப்பிடித்துக் கொண்டு
முங்கு நீச்சலில் முக்கால் தூரம் கடப்பாள்
நீர் பெருமயக்கத்தில் நீந்திக் களைப்பாள்
சலிப்பின் விரல்களில் அவிழும் மூட்டைகள்
துணிகளை துவைக்க தொடங்குவாள்
கதைகளும் பொறனிகளும் நுரைத்துப் பொங்கும்
சோப்புக்குமிழ்களில்,
தேங்கி உடையும் வண்ணச்சித்திரங்கள்
தப்பிய சோப்புக்குமிழ்
குளத்தின் மைய மண்டபத்தை
நோக்கி நகர்ந்து பின் மாயும்.
சலனமற்று கிடக்கும்
குளத்தில் வட்டலைகள்
Leave a comment
Upload