தொடர்கள்
அனுபவம்
பெண் எனப்படுபவள் யாதெனில்...-சத்யபாமா ஒப்பிலி

பெண் எனப்படுபவள் யாதெனில்...ஒரு
வெள்ளித்திரை கண்ணோட்டம்.

அறிவாளி என்னும் ஒரு படம். சிவாஜி கணேசன் அவர்களும் பானுமதி அம்மாவும் நடித்தது. ஷேக்ஸ்பியரின் Taming of the Shrew அடிப்படையாகக் கொண்டு பின்னப் பட்டிருக்கும் கதை. குழந்தையாக இருக்கும் போது ரசித்துப் பார்த்த படம். இரண்டு வருடங்களுக்கு முன்னால் மறுபடியும் பார்த்தேன். என்னுள் இருந்த பெண்ணியவாதி கொதித்துத் தான் போனாள். கணவனுக்கு அடங்கிய மனைவி. அவன் கூப்பிட்டால், எங்கிருந்தாலும் ஓடி வர வேண்டும், பின் தூங்கி முன் எழுந்தால் அவள் பத்தினி. அந்தந்த காலகட்டம் அந்தந்த சிந்தனையோட்டம். பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று தமிழ் திரை உலகம் ஒரு அகராதியே போட்டிருக்கிறது. நாம் கொண்டாடப் படும் ஹீரோக்கள் இதை மிக சிரத்தையாக செய்து குடுத்திருக்கிறார்கள். மன்னன் என்னும் திரைப்படம். திறமையான தைரியமான கொஞ்சம் அகங்காரம் கொண்ட ஒரு பெண். ஒரு கம்பனியின் முதலாளி. அவள் அகங்காரம் தணிந்து ஒரு முழு நேர குடும்ப தலைவியாக ஆவது தான் கதையின் climax. தலைவரின் விசிறியாக கொண்டாடத்தான் செய்தோம் அந்தப் படத்தை. இப்பொழுது கோவம் வருகிறது. எப்படி கொண்டாடினோம் என்று தோன்றுகிறது. அதற்கு சில வருடங்கள் கழித்து வந்த படையப்பா, சிங்காரவேலன் போன்ற படங்களிலும் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது. ஒரு பெண் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பது முதற்கொண்டு திரைப்படங்கள் கருத்தாய், தீர்மானமாய் முன் வைக்கின்றன. அந்தந்த காலகட்டத்தில் பிரதானமாக இருக்கும் சிந்தனை ஓட்டம் என்னும் prism வழியாகப் பார்த்தால் எதையும் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தற்போதைய காலம், கேள்வி கேட்கும் காலம். Age of questioning. சமூக வலைத்தளத்தின் ஒரு பெரிய நன்மை என்பது, தற்போது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதன் வெவ்வேறு கோணங்கள் அலசப்படுகின்றன. இது சில சமயம் தேவையில்லாத சர்ச்சை ஏற்படுத்தினாலும், எதோ ஒரு சிந்தனை அலையைத் தூண்டத் தான் செய்கிறது. இதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்பட்டு அங்கங்கே சிறு சிறு ஆரோக்கியமான வாதங்கள், விவாதங்கள் நடக்கின்றன.
சினிமா என்பது வெறும் பொழுது போக்கு அம்சம் என்பதை கடந்து வெகு காலம் ஆகிவிட்டது. இதனால் உலகிற்கு சொல்வது யாதெனில் என்று கதையின் இறுதியில் moral சொல்லுவதைத் தாண்டி, உலகத்தை இதன் மூலம் சொல்கிறோம் என்ற நிலை எடுத்துக்கொண்ட பின்னும், பெரும்பாலும் திரை உலகத்தில் ஒரு பெண் சித்தரிக்கப்படுவது இன்னும் விவாதத்திற்கு ஒன்றாகவே இருக்கிறது. ஒரு பெண் ஒழுங்காக சித்தரிக்கப் படுகிறாளா என்பதை கணிக்க சில அளவுகோல்கள் இருக்கின்றன. மிகவும் சுவாரஸ்யமானவை.
சினிமா ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு 90 வருடம் கழித்து வந்த முதல் டெஸ்ட் - பெக்டெல் டெஸ்ட்( Bechdel test) 1985 ஆம் வருடம்.
ஒரு படம் இந்த மூன்று கேள்விகளுக்கும் ஆம் என்ற பதில் சொன்னால், அப்படத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் ஒழுங்காக கையாளப் பட்டிருக்கிறது என்று அர்த்தமாம்.
1. படத்தில் குறைந்தது இரு பெண் பாத்திரங்கள் இருக்க வேண்டும்
2. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவேண்டும்
3. அது ஒரு ஆணைத் தவிர எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
இவை கூட இல்லாமல் படங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இது போதுமான அளவுகோல் அல்ல என்பதை சினிமா வல்லுனர்கள் புரிந்து கொண்டனர். அதனால் அதைத் தொடர்ந்து வேறு சில அளவுகோல்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.
2013 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, Sexy Lamp Test( தமிழில் மொழி பெயர்க்கத் தோன்றவில்லை) இது கூறுவதெல்லாம், படத்தில் வரும் பெண் கதா பாத்திரங்களை எடுத்துவிட்டு அந்தற்கு பதில் ஒரு sexy lamp வைத்தாலும், கதை ஓட்டம் மாறாமல் இருந்தால், சந்தேகமில்லாமல் பெண்களின் சித்தரிப்பு சரியாக இல்லை என்று புரிந்து கொள்ளலாம். அதே வருடம் மற்றொரு அளவுகோலும் முன் நிறுத்தப் பட்டது- மக்கோ மொரி டெஸ்ட் (Mako Mori test) . இதில் சொல்லப்படும் விதிகள்:
1. குறைந்தது ஒரு பெண் கதாபாத்திரமாவது இருக்க வேண்டும்
2. அந்தப் பெண்ணுக்கென்று ஒரு குணாதிசயம் இருத்தல் வேண்டும்
3. அந்தப் பாத்திரம் ஒரு ஆணை சார்ந்தோ அல்லது ஆணுக்காகவோ பின்னப்பட்டிருத்தல் கூடாது.
2015 இல் வந்த Furiosa Test, இன்னும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு படத்தை பெண் வெறுப்பாளர்கள் (misogynist) அங்கீகரிக்கவில்லை என்றால் அந்த படம் பெண்ணியத்தை கொண்டாடுகிறது என்று அவர்கள் கருதினால், அந்த படம் இந்த டெஸ்டில் பாஸ் செய்து விட்டது என்று அர்த்தமாம்.
இந்த அளவுகோல்கள் எல்லாம் பொதுவாக மேலை நாட்டு படங்களையே மையமாக கொண்டு அமைக்கப் பட்டிருப்பதாக தோன்றுகிறது. அதனால் இந்தியப் படங்களுக்காகவே உருவாக்கப்பட்ட டெஸ்ட் தான் - FITMUS டெஸ்ட். 2017 ஆம் வருடம் உமா வாங்கல் என்னும் ஆராய்ச்சியாளரால் அறிமுகம் செய்யப்பட்டது. இது மேல் கூறிய அத்தனை அளவுகோல்களையும் இணைத்து சில விதி முறைகளை முன் வைக்கிறது.
1. ஒரு திரைப்படத்தில் வரும் பெண் கதாப்பாத்திரம் ஒரு நிலைத்தன்மை கொண்டிருக்க வேண்டும்(Consistency)
2. ஒரு ஆணின் தேவைக்கான கதாப் பாத்திரமாக அந்தப் பெண் இருக்கக் கூடாது.
3. பெண்கள் பாத்திரம் cultural sensitivity (கலாச்சார உணர்திறன்?) உடன் கையாளப்பட வேண்டும்.
இந்த அளவுகோல்கள் பெண்ணை மையமாக கொண்டு எடுக்கப்படும் படங்களுக்காக அல்ல. ஆணை மையமாகக் கொண்ட படங்களுக்காக கருத்தில் கொள்ளவேண்டிய கோட்பாடுகள். ஒரு திரைப்படம் என்பது கல்லூரி பாடதிட்டத்தின் ஒரு அங்கமாக ஆகிவிட்டது. இத்தனை ஆராய்ச்சிகளும் நாம் சினிமா என்ற ஊடகத்தை எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும் கண்ணாடிகள். கட்டாயமாக பெண்களை சித்தரிப்பது மாறி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இருந்தாலும் சில படங்களைப் பார்க்கும் பொழுது, சில வசனங்களை கேட்கும் பொழுது இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில் விகடகவியில் தி.குலசேகர் எழுதிய திரைநாயகிகள் என்ற 30 வாரங்கள் வெளிவந்த பெருந்தொடர் ஒவ்வொரு சினிமாவிலும் எப்படி நாயகிகளை சித்தரித்திருந்தார்கள் என்பதை நினைவு கூறத்தான் தோன்றுகிறது.