சென்ற வாரக் கதைக்கும் இலக்கணத்திற்கும் உள்ள சம்பந்தத்தை விவரிக்க ஆரம்பிக்கிறார் நமது பரணீதரன்.
புறப்பொருள் என்பது ஒருவரின் வெளிப்படையான தன்மையை பற்றிக் கூறுவது. அதாவது ஒருவரது கல்வி, கேள்வி, ஒழுக்கம், வீரம், கொடை போன்ற விஷயங்களைக் கூறுவது.
இந்த புறப்பொருளினைப் பற்றிய செய்திகளைக் கூறுவது புறத்திணை ஆகும். புறத்திணை கணக்கு பல்வேறு காலக்கட்டங்களில் மாறியுள்ளது.
இப்போதைய காலக்கட்டத்தில் புறத்திணை பன்னிரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவை :
- வெட்சித் திணை
- கரந்தைத் திணை
- வஞ்சித் திணை
- காஞ்சித் திணை
- உழிஞைத் திணை
- நொச்சித் திணை
- தும்பைத் திணை
- வாகைத் திணை
- பாடாண் திணை
- பொதுவியல்
- கைக்கிளை
- பெருந்திணை
மேலே உள்ள படத்தில் உள்ள எட்டுப் பூக்களை வைத்து உருவாக்கப் பட்டதே முதல் எட்டு திணைகள்.
இந்த திணைகளுக்குரிய விளக்கங்களை இதோ என்கிறார் தொடர்ந்து..
வெட்சித் திணை - ஒரு மன்னன் எதிரி மன்னனின் பசுக்கூட்டங்களை கவர்ந்து வருவது. அப்போது வீரர்கள் வெட்சிப் பூவை சூடிச் செல்வர்.
கரந்தைத் திணை - கவர்ந்த பசுக்கூட்டங்களை மீட்டு வருவது. அப்போது வீரர்கள் கரந்தைப் பூவை சூடிச் செல்வர்.
வஞ்சித் திணை - அந்த மன்னன் எதிரி மன்னன் மீது படையெடுத்துச் செல்வது. அப்போது வீரர்கள் வஞ்சிப் பூவை சூடிச் செல்வர்.
காஞ்சித்திணை - படையெடுத்து வரும் படையை தடுத்து நிறுத்துவது. அப்போது வீரர்கள் காஞ்சிப் பூவை சூடிச் செல்வர்.
உழிஞை திணை - கோட்டை சுவரை முற்றுகை இடுதல். அப்போது வீரர்கள் உழிஞை பூவை சூடிச் செல்வர்.
நொச்சித் திணை - கோட்டையை காப்பாற்றுதல். அப்போது வீரர்கள் நொச்சிப் பூவை சூடிச் செல்வர்.
தும்பைத் திணை - போர்க்களத்தில் இரண்டு படைவீரர்களும் சண்டை போடுதல். அப்போது வீரர்கள் தும்பைப் பூவை சூடிச் செல்வர்.
வாகைத்திணை - வெற்றிபெற்ற மன்னர்களும் அவர்கள் படையும் கொண்டாடுதல். அப்போது வீரர்கள் வாகைப் பூவை சூடிச் செல்வர்.
பாடாண் திணை - வெற்றிபெற்ற மன்னரையும் அவர்களது படையையும் புலவர்கள் பாடுதல். பாடப்படும் ஆண் மகனது ஒழுக்கம், வீரம், கல்வி, கொடை போன்றவற்றை பற்றி கூறும் திணையாகும்
பொதுவியல் - இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் கூறப்படாத செய்திகளை கூறுவது.
கைக்கிளை - ஒருதலைக் காதல்.
பெருந்திணை - ஒத்த வயது இல்லாத மிகவும் வயது வித்தியாசம் உள்ள இருவர் கல்யாணம் செய்வது.
எதற்காக இந்த வகையான பூக்களை சூடிச் சென்றார்கள் என்றால் ஒரு படையையும் இன்னொரு படையையும் வித்தியாசம் காணுவதற்காக தான்.
அந்த காலம் முதலே நமது பாரத நாட்டில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி குழந்தைகளாக இருந்தாலும் சரி பூச்சூடிக் கொள்ளும் வழக்கம் அனைவரிடமும் இருந்தது.
பொதுவாக அனைவரும் தைக்கப்படாத உடைகளையே அணிவார்கள். அது மட்டும் இல்லாமல் உடைகளில் உள்ள நிறங்களும் இயற்கையை பொருட்களில் உள்ள சாயங்களாகவே இருக்கும். அதனால் பொதுவாக அனைவரது உடையும் ஒன்று போலவே இருக்கும். இப்படி இரண்டு படைகளின் உடைகளும் ஒன்று போல இருப்பதால் தங்களை பிரித்துக் காட்டுவதற்காக பல்வேறு விதமான மலர்களை அணிந்து தங்கள் செயல்களை செய்வார்கள்.
பரந்து விரிந்த மணலும் மணல் சார்ந்து இடமுமாக இருக்கக்கூடிய போர்க்களத்தில் மட்டுமே இரண்டு படைகளும் தும்பை பூவை சூடி போர் புரிவர். அதற்கு காரணம் போர்க்களத்தில் இரண்டு படைகளையும் வித்தியாசம் பிரித்துக் காட்டுவதற்கு அவர்களின் கொடி, முரசு இலட்சினை போன்ற பல்வேறு விதமான விஷயங்கள் இருக்கும். அதனால் இரண்டு படை வீரர்களையும் அடையாளம் காண்பது மிகவும் சுலபம். மற்ற நேரங்களில் அனைவரும் ஒன்று போலவே இருப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு புறத்திணைக்கும் ஒரு அகத்திணையும் மறைந்தே வருகிறது. எவ்வாறு என்றால் ஆநிரைகளை கவரும் வெற்றித் திணை நடப்பது நடு இரவான யாமத்தில். அதை செய்வது எல்லையில் உள்ள மலைக்கோட்டை வீரர்கள். இவை இரண்டும் குறிஞ்சி நிலத்தை சாரும். இந்த ஆநிரைகளை மீட்பதும் நடுநிசியிலையே நடக்கிறது. அதை மீட்பவர்களும் மலை கோட்டை வீரர்களே. அதனால் கரந்தையும் குறிஞ்சி திணையை ஒத்தே வருகிறது.
ஒரு நாட்டினை பிடிப்பதற்காக கிளம்பும் படை வஞ்சிப் பூவை சூட்டிக்கொண்டு மாலை வேளையில் காட்டுப்பகுதிக்கு வரும் என்று போன வாரம் சொன்னோமல்லவா. மாலை நேரம் மற்றும் காடு ஆகிய இரண்டும் முல்லை நிலத்திற்கு உரியவை. அதனால் வஞ்சி மற்றும் காஞ்சி இரண்டும் முல்லையை சார்ந்திருக்கும்.
நாட்டின் நடுவில் உள்ள கோட்டையை வைகறை முதல் மாலை வரை முற்றுகையிட்டும் அவற்றை காற்றும் இரண்டு படைகளும் மோதும் என்று போனவாரம் பார்த்திருந்தோம். நாட்டின் நடுவில் எப்பொழுதும் வயல்வெளிகள் நிறைந்திருக்கும் அதேபோல ஆறு சிறுபொழுதுகளும் மருத நிலத்திற்கு உண்டு. அதனால் தான் வைகறை முதல் எற்பாடு வரை வரை படைகள் சண்டை போடுகின்றன. ஆகவே உழிஞையும், நொச்சியும் மருத நிலத்திற்குரியவை.
ஒரு போர்க்களம் என்பது வெட்ட வெளிப் பிரதேசமாக மணல் நிறைந்து இருக்கும். பொதுவாக கடலுக்கு அருகிலும் சில இடங்களில் மணல் கடல் இருக்கும். ஒவ்வொரு நாட்டின் வேறு பக்க எல்லையில் கடற்கரைகளே இருக்கும். மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதால் அங்கேயே போர்கள் நடக்கும். சில நேரங்களில் தரைப்படை மட்டுமல்லாமல் கப்பல் படையும் சேர்ந்து போர் செய்யும். ஒரு போர் என்பது வைகறையில் ஆரம்பித்து எற்பாடில் முடியும் என்று பார்த்திருந்தோம். அதனால் தும்பை திணை நெய்தல் திணைக்குரியது.
போரில் வென்றவர் மற்றும் தோற்றவர் ஆகியவர்கள் நண்பகல் வேளையில் தங்களது வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்வர். பல்வேறு வீரர்கள் இறந்தும், பல வீரர்களுக்கு உடல் உறுப்புகள் அறுந்தும், பல உயிரினங்கள் அழிந்தும் போர்க்களம் மிகவும் கோரமாக உயிர்கள் அற்று அனைத்தும் அழிந்து பாலையைப் போல இருப்பதால் வாகைத் திணை பாலை திணையை சார்ந்திருக்கும்.
தொல்காப்பிய காலத்தில் காஞ்சித் திணையை உலகத்தின் நிலையாமையை உணர்த்துவதற்காக எழுந்த ஒரு திணையாகவே கருதப்பட்டது. அதாவது போர் செய்வதால் ஏற்படப் போகின்ற தீமை அதனால் உயிர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு இரண்டு மன்னர்களின் ஆசையால் அழியப் போகும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிர் ஆகியவற்றை பற்றி மிகத் தெளிவாக மிகவும் ஆழமாக கூறக்கூடிய ஒரு திணை தான் காஞ்சித் திணையாகும்.
இந்த திணையைப் பற்றிய பாடல்கள் நிறைய நமது இலக்கியங்களில் இருந்தாலும் ஒரு பாடல் மிகவும் முக்கியமான ஒரு பாடல் ஆகும்.
அந்தப் பாடலின் முதல் வரியை சில காலமாக நாம் தவறாகவே பயன்படுத்தி வருகிறோம். அந்தப் பாடலை நாம் வரும் வாரத்தில் பார்ப்போம் என்று விடை பெறுகிறார் பரணீதரன்.
தொடரும்...
Leave a comment
Upload