தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக்கலை -14 - ரேணு மீரா

20240005110849259.jpg

அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின் தக்க கருவிகளுடன் காலமும் அறிந்து செயலை செய்தால் ஒருவர்க்கு முடியாத செயலே இல்லை.

483 வது குறள், இதில் திருவள்ளுவர் பல குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் காலம் நேரம் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இருப்பதை பார்க்கிறோம்.

நேரத்தின் இயல்பையும் பண்பையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் முதலில் தங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரப் பயன்பாடு பற்றி புரிய வைப்பது அவசியம்.

முதலில் இதன் பயன்களை பார்ப்போம் :

அறிவை வளர்க்கும்

ஆற்றலை உணர்த்தும்

திறமையை வளர்க்கும்

உறவை வலுப்படுத்தும்

உடல் நலம் பேணும்

பொருளாதாரத்தை உயர்த்தும்

மனநிறைவு தரும்.

இதை முதலில் நீங்கள் ஒரு சார்ட் வொர்க் போல செய்து அதை நீங்களும் பின்பற்றி குழந்தைகளையும் ஊக்கப்படுத்துங்கள்.

“ கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதிப்பது ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்” என்கிறார் அறிஞர் ஸ்வேட்டர்.

“ ஓர் அங்குல நேரம் ஓர் அங்குல தங்கம்” என்கிறது சீனப் பழமொழி.

அனைவருக்கும் பொதுவாகவும் இலவசமாகவும் கிடைக்கும் இந்த நேரத்தை கொண்டு தான் பலர் பலவித சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள் என்பதை குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கி நேரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும், பெற்றோர்கள் முன் உதாரணமாக இருத்தல் அவசியம்.

கண்மூடித்தனமாக” நேரத்திற்கு ஒரு இடத்தை சென்று சேர வேண்டும்” “ தாமதமாக எங்கும் செல்லக்கூடாது” என்று கூறுவதை விடுத்து பல பெரியவர்களின் வாழ்க்கையில் நேரம் தவறாமல் எப்படி எல்லாம் உதவி இருக்கிறது என்று எடுத்துரைக்க வேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெஞ்சமின் பிராங்கிளின் கூறுகிறார் “ நீ வாழ்க்கையை நேசிக்கிறாயா?அப்படியானால் நேரத்தை வீணாக்காதே, உனது இந்த வாழ்க்கை நேரத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறது”.

நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் கண்ட முன்னோடிகள் பலர் உள்ளனர் நேரத்தை வீணாக்காமல் திறமையோடு பயன்படுத்தியவர்களே பல சாதனைகளை புரிந்து இருக்கிறார்கள் இவர்களை வரலாறு இன்னும் நினைவு கூறுகிறது. நம் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் Dr அப்துல் கலாம் அவர்கள் இதற்கு சிறந்த முன்னோடி அவருடைய வாழ்வில் தொடர்ந்து வெற்றிப்படிகளை அவர் எப்படி பிடிக்க முடிந்தது என்றால் அவர் திறமையோடு அக்கறையோடும் தனக்கு வழங்கப்பட்ட நேரத்தையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தியதால் தான் என்று இப்படிப்பட்ட விஷயங்களை குழந்தைகளிடம் அன்றாட பேச வேண்டும் அவர்களை உட்கார வைத்து இது போன்ற விஷயங்களை சொன்னால், அவர்களுக்கு அது பிடிக்காது ஆகையால் ஒரு சின்ன கதை போலவோ அல்லது சுவாரஸ்யம் கலந்து இப்படிப்பட்ட விஷயங்களை சொல்வதன் மூலம் அவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க முடியும்.

குழந்தைகளிடம் பல தலைவர்களின் வாழ்க்கையை பற்றிய காணொளிகளை அவர்களுடன் பார்ப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், வாரத்திற்கு ஒரு அரை மணி நேரம் இதற்காக ஒதுக்குங்கள், நேரத்தின் முக்கியத்துவம் நேர விரையம் என்றால் என்ன மற்றும் ஒரு பாடத்தை அதிக நேரம் படிப்பதை விட முழு கவனத்துடன் அரைமணி நேரத்திலும் சிறப்பாக படிக்க முடியும் என்பதை அவர்களுக்கு உட்காந்து அதை செய்து காட்டுங்கள் குழந்தைகள் கேட்டு புரிந்து கொள்வதை விட பார்த்து பழகுவதையே அதிகம் புரிந்து கொள்வார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் நேரம் பற்றிய ஒரு புரிதலை தன் மகன் இருவருக்கும் சார்ட் வொர்க் செய்து விவரமாக புரிதலை ஏற்படுத்தி இருந்தார். நேரம் என்பதை யாரால் எளிதாக கூற முடியும்? பிறர் நேரத்தை பற்றி பேசும்போது புரிந்து கொள்கிறோம் ஆனால் நேரம் என்றால் என்னவென்று யாராவது கேட்டால் அவ்வளவு எளிதில் பதில் கூற முடியாது பல தத்துவ ஞானிகளும் பௌதிக அறிஞர்களும் இதைப்பற்றி உறுதியாக எதுவும் கூறவில்லை.

நேரம் பற்றி பலர் எழுதிய புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அவற்றில் சிலவற்றை வாங்கி தானும் படித்து அவர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் படம் வரைந்தும் உதாரணங்கள் சொல்லியும் குழந்தைகளுக்கு ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி இருந்தார் அந்த நண்பர். Stephen Hawkings எழுதிய A Brief History of Time, Seam Carroll எழுதிய From Eternity to Here, Craig Callender எழுதிய Time a Graphic Guide போன்ற புத்தகங்களை பற்றி நேரம் கிடைக்கும் போது குழந்தைகளுக்கு ஒரு கதை போல் சொல்லி கூகுளில் சில படங்களை உதாரணம் காட்டி குழந்தைகளுக்கு ஒரு வித ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இவை அனைத்தும் அறிவியலும், ஆராய்ச்சியும், வரலாற்றையும் மையப்படுத்தி எழுதிய புத்தகங்கள்.

ஆரம்பத்தில் குழந்தைகள் ஏதோ ஒரு சுவாரஸ்யமான மர்மமான விஷயம் என்று ஆர்வம் காட்ட துவங்கியதாகவும் பிறகு மெல்ல புத்தகப் படிப்பில் ஆர்வம் காட்டியதாகவும் பிறகு இது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உற்சாகம் குழந்தைகளுக்குள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்,பிறகு மெல்ல மெல்ல எளிய முறையில் நேரம் பற்றிய ஒரு விழிப்புணர்வையும் சொல்லும் போது குழந்தைகள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள் என்று மிகவும் மகிழ்ச்சியுடனும்,பெருமிதத்துடனும்,நம்பிக்கையுடனும் என்னிடம் சொன்னார். இவற்றிற்கு அவர் பொறுமையாக நேரம் எடுத்துக்கொண்டு செய்தமையால் பாராட்டினேன்.

“சின்ன மீனை போட்டு பெரிய மீன் பிடிப்பது” பழமொழி

“பெரிய மீனை போட்டு பின் சின்ன மீன்களை பிடிப்பதே புது வழி”

நேரம் பற்றி தொடர்ந்து பேசுவோம்….