சனாதன தர்மத்தின் மீதுள்ள குற்றச் சாட்டுகளில் ஒன்று அதில் அதிகமான சடங்குகள் உள்ளன என்பது. அது சரியல்ல, என்பதை மிகவும் விரிவாக ஒன்பது தொகுதிகளில் பார்த்தோம். அவை பெரும்பான்மை தனிமனித ஆரோக்கியம் மற்றும் ஒழுக்கம் சார்ந்தவையாகவும், விழிப்புணர்வு சார்ந்தவையாகவும் இருக்கின்றன என்று உணர்ந்தோம். மோட்சம் என்ற நிலையை அடைய உள்ள சடங்குகள் மிகக் குறைவே என்றும் பார்த்தோம்.
அடுத்த குற்றச் சாட்டு வர்ணாஶ்ரமம் என்பதாகும். இதில் ஒரு அடிப்படைத் தவறு உள்ளது. வர்ணம் என்பதும் ஆசிரமம் என்பதும் வெவ்வேறாகும். ஆசிரமம் என்பது மனிதனின் ஆயுளை நான்காகப் பிரித்து அதில் ஒவ்வொன்றினுடைய சிறப்பை குறிக்கோளை வலியுறுத்துவதாகும்.
இதற்கு முந்தைய இதழ்களில் இதை விரிவாகப் பார்த்தோம்.
இதற்கு எந்த வித மறுப்பும் தவறும் சொல்வதற்கில்லை, ஏனென்றால் மனிதனுக்கு வயது கூடி வருவதும், அந்தந்த வயதில் செய்ய வேண்டியவையும் இயற்கை, அவை தவிர்க்க முடியாதவை.
இங்கே தொக்கி நிற்பது வர்ண தர்மம் எனும் கோட்பாடு. மனுஸ்மிருதி என்ற ஒரு நூலை மட்டும், அதிலும் அதிலுள்ள சில செய்யுள்களை மட்டும் தனிமைப் படுத்தி மாறான கருத்துக்களை மக்களிடையே பரப்பித் திணித்து இந்த வர்ண தர்மம் கொடுமையான கருத்தாகச் சித்தரிக்கப் பட்டு விட்டது. ஆதலால் இதைச் சிறிது விரிவாகவே காண்போம்.
வர்ணம் என்ற சொல்லுக்கு வடமொழியில் பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்று இந்த நால்வகைப் பிரிவுகள் என்பதாகும். ‘வர்ணோ த்விஜாதௌ சுக்லாதௌ ஸ்துதௌ வர்ணம் து வா அக்ஷரே - வர்ணம் என்ற சொல் அந்தணர் முதலியவரையும், வெண்மை முதலியவற்றையும், துதியையும், எழுத்துக்களையும் (குறிக்கும்)’ என்று அமரகோசம் சொல்லும். (இயற்றியவர் ஒரு ஜைனர்!) ஆதலால் அது நிறத்தையோ எழுத்தையோ ஒட்டி எழுந்தது அல்ல என்பதை அறியலாம்.
சநாதன தர்மத்தில் நான்கு வர்ணங்கள் குறிப்பிடப் படுகின்றன.
இவை யாவை, எந்த அடிப்படையில் இவை அமைந்தன, இன்றைய சமுதாய அமைப்பில் இவற்றிற்கு இடம் உண்டா என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றிற்கான விடையை விரிவாகக் காணும் முன், இன்றய சமுதாய அமைப்பைச் சிறிது அலசுவோம்.
எல்லா நாகரீக நாடுகளிலும் காணப்படும் சில பொதுவான அமைப்புகளைப் பார்ப்போம்.
கல்வியாளார்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று ஒரு பிரிவு இருக்கும். அவர்கள் கல்வி கற்றலும் கற்பித்தலும் என்று முழு நேரமும் அதில் ஈடுபட்டு இருப்பர். அதேபோல் விஞ்ஞானம், மருத்துவம், தொழில் நுட்பம், மேலாண்மை, கலை, இலக்கியம் என்று பல துறைகளில் ஆராய்ச்சியிலேயே தமது வாழ்வைச் செலவு செய்பவர்கள் உண்டு. இவர்கள் அறிவு பூர்வமாக செயல்படுவர், பெரும் பொருளை ஈட்டும் வாய்ப்பை விட்டு அறிவின் மேன்மையை மட்டுமே பின்தொடர்ந்து செல்வர். தாம் கற்றதை, அறிந்ததை மற்றவர்க்குக் கற்பிப்பதை பெருமையாக நினைப்பவர். ஆனால் அதனைக் கற்க வருபவர்க்கு அடிப்படைத் தகுதி வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பர்.
சட்டம் இயற்றுவோர், சட்டத்தை அமல் படுத்துவோர், அரசு அதிகாரிகள், ராணுவத்தினர் என்று ஒரு பிரிவு இருக்கும். இவர்கள் நாட்டின் முக்கியமான பெருவாரியான அதிகாரங்களைத் தம்வசம் வைத்திருப்பர். இவர்கள் இயற்றியதே சட்டம், இவர்கள் பிறப்பிப்பதே ஆணை, இவர்கள் சொல்லே செல்வாக்கு. இன்றைய ஜனநாயக அமைப்பில், சட்டம் இயற்றும் குழு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறினாலும், அவர்கள் செயல்படும் விதம் மாறுவதில்லை. ஜனநாயக அமைப்பின்படி இவர்களுக்குள் சட்டமன்றம், நீதித் துறை, நிர்வாகம் என்ற உட்பிரிவு இருந்தாலும், அதிகாரம் என்பது இம்மூவரின் கையிலேயே இருக்கிறது. இவர்களை மீறி அந்த நாட்டில் எந்த ஒரு செயலும் மாற்றமும் நிகழாது.
மூன்றாவதாக தொழில் முனைவோர், வணிகர்கள், விவசாயிகள், பற்பல கலைஞர்கள் போன்றவர் வருகிறார்கள். இவர்கள் தமது சக்தி, திறன், முதலீடு, நிலம் மற்றும் அசையும் சொத்து முதலியவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு பொருள்கள் மற்றும் சேவைகளை அளித்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டுகின்றனர். தமது பொருள் மற்றும் சேவைகளுக்கு விலையை அவற்றின் உற்பத்திச் செலவு மற்றும் அவர்களின் லாபம் முதலியவற்றின் அடிப்படையில் அவர்களே முடிவு செய்கின்றனர். சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அவர்களது வருமானமும் ஏறி இறங்கி இருக்கிறது.
அடுத்ததாக இந்த மூன்று பிரிவினரிடமும் வேலை செய்யும் தொழிலாளிகள் வருகின்றார்கள். மருத்துவம் தொழில் நுட்பம் கணினி முதலிய துறையில் தேர்ச்சி பெற்றவர் முதல் சுமை தூக்கி, வயலில் இறங்கி வேலை செய்து, துப்புரவுத் தொழில் செய்பவர் வரை ஒருவரிடம் வேலை செய்து அதற்கான கூலியை, சம்பளத்தை, ஊதியத்தைப் பெறுகிறார்கள். ஒரு தனி நபரிடமோ, சிறிய நிறுவனத்திடமோ, பெரும் குழுமத்திலோ, அரசுப் பணியிலோ இருந்து தனது வேலைக்காக ஊதியம் பெறுகிறார்கள் இவர்கள். தன்னிச்சையாகத் தமது திறமையைக் காட்டி அதை முதலீடாக்கி வருமானம் ஈட்ட முயலாதவர்கள் இவர்கள்.
வளர்ந்த நாகரீகமான நாட்டில் இந்த நான்கு பிரிவிர்னருக்கும் வெவ்வேறு அடையாளங்கள், மதிப்பீடுகள், எதிர்பார்ப்புகள், பெருமைகள், சலுகைகள் என்று பலவிதத்திலும் வேறுபாடுகள் காணப் படுகின்றன.
‘எல்லாரும் இன்னாட்டு மன்னரே’ என்று மேடைகள் போட்டு என்னதான் முழங்கினாலும், இந்தப் பிரிவினர்க்கிடையே பற்பல வேற்றுமைகள் நம் கண்ணெதிரே தினமும் வந்து போகின்றன. சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்று சட்டம்போட்டுச் சொன்னாலும், சட்டமே இந்த நான்கு பிரிவினர்க்கும் வேறு வேறாக இருப்பதையும், சட்டத்தை விளக்குபவர்கள் வேறுவேறாக விளக்குவதையும் கண்கூடாகக் காண்கிறோம்.
இதில் முதல் பிரிவினர் தமது ஊதியமாகச் செல்வத்தைப் பெறுவதை விடப் பெருமையையும், அங்கீகாரத்தையும், மதிப்பையும், மரியாதையையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது பங்களிப்பு இந்த சமுதாயத்தில் பலன் தருவதற்கு சில பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அந்த பங்களிப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் ஏற்படாது.
இரண்டாவது பிரிவினர் நாட்டின் அமைதியையும், பாதுகாப்பையும், கட்டுப் பாட்டையும், சமூகக் கட்டமைப்பையும் உருவாக்குகிறார்கள். இவர்கள் பங்களிப்பும் பலன் தருவதற்குக் காலம் தேவைப்படும். இவர்களுடைய செயல்பாடு ஒரு நாட்டின் நோக்கத்தை, திசையை, முன்னேற்றத்தை முடிவு செய்கிறது.
மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவினர் நாட்டின், மக்களின் தேவைகளை நிறைவு செய்கிறார்கள். முதல் மற்றும் இரண்டாம் பிரிவினரின் கோட்பாடுகள் மற்றும் முடிவுகள் செயல்களாக மாறி மக்களுக்குப் பயன் தருவதற்கு இந்த இரண்டு பிரிவினரே காரணிகளாக இருக்கிறார்கள்.
மேலே பார்த்த நான்கு பிரிவுகளும் அவர்களின் தொழில் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் எழுந்தன. இது சமூகக் கட்டமைப்பிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கண்ணோட்டம். படிப்பு, செல்வம், நாகரீகம், என்ற கோணங்களில் சமூகத்தைப் பிரிப்பது பொருளாதார அலசலுக்கு மட்டுமே பயன்படும்.
நான்கு பிரிவு என்ற கோட்பாட்டை இன்னும் விரிவாக, வரும் வாரங்களில் காணலாம்.
தொடரும்......
Leave a comment
Upload