மார்ச் 4,2024 அன்று, பெங்களூரில் உள்ள அல்சூரில், ஓடகத்தூர் மடத்தில், திரிச்சூர் சகோதரர்களின் கச்சேரி. மஹாசிவராத்ரியை ஒட்டி நடந்த நிகழ்வு இது.
அவர்களுடன் வயலில் வித்வான் எச். என். பாஸ்கர், மிருதங்கத்தில் அவர்களின் தந்தை திரிச்சூர் மோகன் மற்றும் கடத்தில் கோவை சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சூர் சகோதரர்களைப் பற்றி எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களுடன் ஒன்றாக இருப்பார்கள். இன்றும், அதே வழியில், கச்சேரியின் ஆரம்பம் ஸ்ரீ ராகத்தில் சாமி நின்னே கோரி என்ற பத வர்ணத்துடன் தொடங்கியது. இதை பொன்னையப்பிள்ளை எழுதியுள்ளார். அவர் முத்துசாமி தீக்ஷிதரின் தலைமை மாணவர்களில் ஒருவர்.
அடுத்து, ஹம்ஸத்வனி ராகத்தில் வாரணமுகவா என்று தொடங்கும் பாட்டு. இந்தப் பாடலை கோடீஸ்வர ஐயர் எழுதியுள்ளார். அவர் 72 மேளகர்த்தா ராகங்களில் கந்தா கானாமிர்தம் என்ற பாடலை எழுதினார். அதற்கு முன்பு, பிள்ளையாரை வணங்கும் விதத்தில் அவர் எழுதிய பாடல் இது என்று நான் நம்புகிறேன்.
அடுத்தது அந்தோலிகா ராகத்தில் உள்ள தியாகராஜர் பாடல் ராக சுதா ரஸ . இது முதன்முதலில் மாபெரும் வித்துவான் ஜீ என் பீ யால் பிரபலப்படுத்தப்பட்டது. அடுத்து, பிரபல வாக்கேயகாரர் லலிதா தாசரின் ஹம்ஸாநந்தி ராகத்தில், இந்த பாடல் பாவனா குரு பரம புரா என்று தொடங்குகிறது . செம்பை வைத்யநாத பாகவதர் இதைப் பாடத் தொடங்கி, பிறகு ஜேசுதாஸ் இதை மிகவும் பிரபலப்படுத்தினார்.
கச்சேரியின் முக்கிய ராகம் தோடி. சகோதரர்கள் இருவரும் கார்த்திகேய காங்கேய என்று தொடங்கும் பாபநாசம் சிவன் அவர்களின் பாடலை மிகவும் அழகாகப் பாடினர். எச். என். பாஸ்கரன் வயலின் வாசிப்பும் மிகவும் இனிமையாக இருந்தது. ஸ்வரங்கள் ஒரு பெரு மழை போல் பெய்தது.
அடுத்தது ஸ்ரீ மோகன் மற்றும் ஸ்ரீ சுரேஷ் ஆகியோரின் தனி ஆவர்த்தனம். இதற்குப் பிறகு, சகோதரர்கள் அயோத்திக்கு தங்கள் பயணத்தைப் பற்றி எங்களிடம் தெரிவித்தனர். அயோத்தி பயணத்தைப் பற்றி கேள்விப்பட்ட நாங்கள் எல்லா ரசிகர்களும் உண்மையில் உணர்ச்சி வசப்பட்டுவிட்டோம். எனக்கு உடனடியாக அங்கு செல்ல ஆர்வம் வந்துவிட்டது.
தொடர்ந்து சகோதரர்கள் சிந்து பைரவி, கர்ண ரஞ்சனி மற்றும் பிற ராகங்களில் பாடல்களைப் பாடினர். மிஸ்ரசிவரஞ்சனியில் மஹாராஜபுரம் சந்தானம் இயற்றிய தில்லானாவை பாடிய பின்னர், புரந்தரதாசரின் அழகான பாடல் பாக்யதா லட்சுமி பாரம்மா என்ற மத்யமாவதி வாடி ராக பாட்டை பாடி, மங்களத்துடன் கச்சேரியை முடித்துக்கொண்டனர்.
இந்த கச்சேரியின் இரண்டு அற்புதமான அம்சங்கள் என்னவென்றால், தனி அவர்த்தனத்தின் போது ரசிகர்கள் அனைவரையும் தாளம் போட வைத்து, ராமபிரானை பற்றி ஒரு பஜனை பாடி, எங்கள் அனைவரையும் பாட வைத்தனர். நான் முன்பு கூறியது போல், ஒவ்வொரு கச்சேரியிலும் இதே போல் ரசிகர்களை உற்சாகத்துடன் பங்கேற்க வைத்து விடுகிறார்கள் நம் திரிச்சூர் சகோதரர்கள்.
இது போன்ற ஒரு அனுபவத்தைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் இருவரும் தொடர்ந்து அழகாகப் பல காலம் பாட வேண்டும், நம் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு, ரசிகர்களின் மிகவும் ஆக்ரோஷமான கைதட்டலுக்குப் பிறகு ஒரு மிக்க மன நிறைவோடு கிளம்பினேன்.
இதோ பெங்களூரில் இசைத் திரு விழா ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம்.
சென்னையில் மார்கழியில் இசை விழா எனில், இங்கோ ராம நவமி ஒட்டி முன்னும் பின்னும் சீசனில் இசைக் கச்சேரிகள் களை கட்டத் தொடங்கிவிடும்.
த தரி நா…….
Leave a comment
Upload