தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் - 14- பத்மா அமர்நாத்

20240205125045606.jpg

பெண்கள் சுய நிர்ணய உரிமை பெற்றுச் செயல்பட, கல்வி மற்றும் பொருளாதாரத்தின் அவசியத்தைப் பார்த்தோம். இனி அடுத்து நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய திறன்…

பெண்களின் உணர்வு நுண்ணறிவு : Emotional Intelligence :

“A wise man is the master of his emotions and the fool is their slave” - Epictetus.

மனிதனின் அடிப்படைத் தன்மையே, உணர்வுகள் தான். சிந்தித்துச் செயலாற்றுவது, அறிவு சார்ந்த மூளையின் செயல்பாடு. உணர்வு வசப்பட்டுச் செயல்படுவது என்பது, உணர்வுகள் சார்ந்த மூளையின் செயல்பாடு. ‘இருபதையும் ஐந்தையும் கூட்டினால் எவ்வளவு? ‘ என்று கேட்டால், உடனே யோசித்து, சட்டென்று இருபத்தைந்து என்று சொல்லிவிடுவோம். எவ்வித உணர்வுக்கும் அங்கே இடம் இல்லை.

ஆனால், ஒரு கோப்பையில் திருநெல்வேலி அல்வாவை வைத்தால், ஒவ்வொரு அணுவிலும் உங்கள் உணர்வுகள் மாறும். அதை சாப்பிடத் தூண்டப்படுவீர்கள். இது தான் உணர்வு ரீதியான, மூளையின் செயல்பாடு. இந்த உணர்வு ரீதியான செயல்பாடு, உணவில், அன்பில், காதலில், நாம் எதிர்கொள்ளும் வேலையில், உடற்பயிற்சியில் (போகலாமா.. வேண்டாமா என்று), ஜாதி மத விவாதங்கள், போன்ற பல இடங்களில் வெளிப்படும். முக்கியமாக, தேர்தல் சமயத்தில். உணர்வு ரீதியான முறையில் தான், அதிக வாக்காளர்கள் செயல்படுகிறார்கள்.

20240205125614126.jpg

உணர்வு உங்கள் எதிரியாக மாறக்கூடும், உங்கள் உணர்வுகளுக்கு நீங்கள் வசப்பட்டால், நீங்கள் உங்களை இழக்கிறீர்கள். பலர், வெற்றி அடையாமல் போவதற்கு, இதுவே காரணம். ஒரு சிலர் மட்டுமே, தன் உணர்வுகளையும் கட்டுப்படுத்தி, அடுத்தவரின் உணர்வுகளையும் ஆராய்ந்து பார்ப்பார்கள். இவர்கள் தான் உலகை ஆள்பவர்கள். இந்த உணர்வுகளை, எல்லா இடங்களிலும் தோன்றியபடி, அப்படியே வெளிப்படுத்தாமல், ஒரு கணம் சிந்தித்து, சமயோசிதமாக செயல்படுவது தான், emotional intelligence, உணர்வு நுண்ணறிவு.

20240205125730656.jpg

பெண்கள் உணர்வு சார்ந்து செயல்படுவார்கள். ஆண்கள் அறிவு சார்ந்து இயங்குவார்கள். எந்த ஒரு உறவிலும், பெண்கள் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதற்கு இது தான் காரணம். உடனே, ‘பெண்களுக்கு அறிவு இல்லையா’ என்று என் மீது பாய வேண்டாம்! எது மேலோங்கி இருக்கிறது என்பதைத் தான் பார்க்கிறோம்.

உணர்வு ரீதியாக பெண்கள் செயல்பட்டாலும், அவர்களிடம் உணர்வு நுண்ணறிவு (emotional intelligence) அதிகப்படியாகவே காணப்படும். கருணை மற்றும் புரிதல், பெண்களிடம் மேலோங்கி இருக்கும். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் தேவை அறிந்து செயல்படும் ஆற்றல், பெண்களிடம் உண்டு. இதுவும் உணர்வு நுண்ணறிவு தான். எளிமையான உதாரணம் நம் குடும்பம். வீட்டில் உள்ளவர்களின் தேவைகள் அறிந்து செயல்படுவது, நிச்சயம் அந்த வீட்டின் பெண்ணாகத் தான் இருக்கும்.

ஆனால், அந்த உணர்வுகளுக்கு அடிபணிந்து போகாமல், வீட்டிலும், வெளி உலகிலும், சமயோசித சிந்தனையுடன், பெண்கள் செயல்பட வேண்டும். இது தான் நான் சொல்ல விரும்பும் கருத்தாகும்.

Emotion can be the enemy, if you give into your emotion, you lose yourself. You must be one with your emotions, because the body always follows the mind.” - Bruce Lee.

இங்கே புரூஸ் லீ, ‘You must be one with your emotion’ என்கிறார். அப்படியென்றால், நமது எண்ணமும் உணர்வுகளும், நம் உடல் நலனில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். உணர்வுகள் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக இருக்கலாம். உணர்வுகளைக் கையாள்வதும், மனத் தெளிவைப் பேணுவதும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

20240205125848438.jpg

காரணம், உங்கள் மனம் தான், வெளிப்புறச் சூழலை, வலியாக, துன்பமாக, அல்லது மகிழ்ச்சியாக மாற்றுகிறது. ஒரு சமுராய் (வீரன்) ஒரு துறவியிடம் சென்று, “சொர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன?” என்று கேட்டார். அந்தத் துறவி, மெல்லக் கண்களைத் திறந்து, “உன்னைப் போன்ற ஒரு இழிவான, கேவலமான, அவநம்பிக்கை கொண்டவனுக்கு, நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? உன்னைப் போன்ற ஒரு புழுவுடன் நான் பேச வேண்டும் என்று நினைக்கிறாயா? முட்டாள்தனமான கேள்விகளுக்கு எனக்கு நேரமில்லை.” என்றாராம்.

20240205130022699.jpg

வந்ததே சமுராய்க்குக் கோபம்…

பின் நடந்ததென்ன?

அடுத்த கட்டுரையில் பார்போம்.

இணைந்திருங்கள்....