தமிழ்நாட்டில் குன்றத்தூர் முருகன் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னையின் புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில் அமைந்துள்ளது. இங்குச் சுப்பிரமணியர் என்ற பெயரில் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். தமிழ் மக்களின் முதற்பெரும் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு நிறையப் பெயர்கள் இருந்தாலும் 'சுப்பிரமணியர்' என்ற பெயருக்குத் தனிப்பட்ட பொருள் இருக்கிறது. அதாவது ஞானத்தைத் தனது அடியார்களுக்கு அருள்கின்றவன் என்று அர்த்தமாகும். சுப்பிரமணியர் வடதிசையில் தணிகையை நோக்கி அமர்ந்திருப்பதால் இத்தலம் தென் தணிகை என்றும் அழைக்கப்படுகிறது.
'பதியெங்கிலும் இருந்து விளையாடிப் பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே' என்று அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று குன்றத்தூர் முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார். முருகப்பெருமானின் தீவிர பக்தரான கிருபானந்த வாரியார், இறைவனைப் போற்றிப் பல சொற்பொழிவுகளை இங்கு வழங்கியுள்ளார்.
பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் அவதரித்தது இந்தத் தலத்தில்தான். இவர் தினமும் குன்றத்தூர் குமரனை வழிபடுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். அதை நினைவுகூரும் வகையில், மலையடிவாரத்தில் சேக்கிழாருக்குத் தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சேக்கிழார் குருபூஜையின்போது, முருகப் பெருமான் சேக்கிழார் சந்நிதிக்கு மலையிலிருந்து எழுந்தருளி, அவருக்குத் தரிசனம் கொடுப்பது தொன்றுதொட்டு மரபாக இருந்து வருகிறது.
ஸ்தல புராணம்:
ஒருமுறை தாரகாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். முருகப் பெருமான் படையுடன் வந்து திருப்போரூர் திருத்தலத்தில் அவனுடன் போரிட்டார். இறுதியாகப் போரில் தாரகாசுரனை முருகன் வதம் செய்தார். திருப்போரூரில் அசுரனுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், மனம் அமைதி பெறத் திருத்தணி நோக்கிப் புறப்பட்டார். திருத்தணி செல்லும் வழியில் குன்றத்தூர் மலையைக் கண்டு அங்கேயே சில நாட்கள் தங்கினார். அவர் மலையில் தங்கியிருந்தபோது ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். கந்தன் (முருகன்) சிவனை வழிபட்டதால் கந்தழீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சில நாட்களுக்குப் பிறகு முருகன் இங்கிருந்து புறப்பட்டு திருத்தணியை அடைந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியைக் குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்குக் கோயில் கட்டப்பட்டது. முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் "கந்தழீஸ்வரர்' என்ற பெயரில் தனிக்கோயில் கொண்டு அருளுகிறார்.
ஸ்தல வரலாறு:
குன்றத்தூர் முருகன் கோயில் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளாகப் பக்தர்களால் வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் 1726 ஆம் ஆண்டில் மதுரை நாயக்கரால் மேம்படுத்தப்பட்டது. இக்கோயில் சோழர்கள் ஆட்சிக் காலத்தின் மற்றொரு அற்புதமான கட்டுமானமாகும். நூறு தூண்கள் கொண்ட மண்டபம் கோயிலின் தனித்துவமான அம்சமாகும்.
ஸ்தல அமைப்பு:
குன்றத்தூர் என்பது பெயருக்கு ஏற்றாற்போல் மலைகளால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். முருகன் கோவில் ஒரு சிறிய மலையின் உச்சியில் 84 படிகள் கொண்டு அமைந்துள்ளது. மேலும் மலை ஏறி நடக்க முடியாதவர்கள் கோயிலுக்கு செல்ல வாகன பாதை வசதி உள்ளது. மலையடிவாரத்தில் பதினாறு கால் மண்டபத்தைக் கடந்து படிகளில் செல்லும் போது, வழியில் "வலஞ்சுழி விநாயகர்" சந்நிதி முதலில் தரிசித்துவிட்டு சில படிகளில் ஏறி, உயரமான மண்டபத்தின் நுழைவாயிலில் மூன்று நிலை இராஜகோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் கொடி மரத்தை வணங்கிய பிறகு மூலவரை வழிபடச் செல்ல வேண்டும். இந்த திருத்தலத்தில் மூலவராகச் சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக பிரதான சந்நிதி உயரமான அர்த்த மண்டபத்தில் அமைந்துள்ளது. கருவறை சந்நிதி முன்பு வஜ்ரம் மற்றும் சூலாயுதத்துடன் துவாரபாலகர்கள் நிற்கிறார்கள். மூலவர் சந்நிதி மீதுள்ள விமானம் ‘ஷட்கோண’ அமைப்பில் அதாவது முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.
முருகனது சந்நிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. உள் பிரகாரத்தில் விநாயகர், காசி விசுவநாதர், காசி விசாலாட்சி சந்நிதிகள் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்தில் பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை நவகிரகங்கள் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. மற்றும், அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் அருள் தருகிறார்.
ஸ்தல தீர்த்தம் – சரவணப் பொய்கை
ஸ்தல விருட்சம் - வில்வம்
ஸ்தல சிறப்பு :
திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டும் வடக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை இருவருடனும் வடக்கு நோக்கியிருக்கிறார்.
இக்கோயிலில் கருவறைக்கு வெளியே வாசலில் நின்று தரிசிக்கும்போது மூவரையும் ஒரு சேர தரிசனம் தர மாட்டார்கள். மூலவரான முருகனை மட்டுமே பார்க்க முடியும்.
ஒரு பக்கமாகப் போய் நின்று பார்த்தால் முருகன் வள்ளியுடனும், இன்னொரு பக்கமாகப் போய் நின்று பார்த்தால் முருகன் தெய்வயானையுடனும் காட்சியளிப்பார்கள். இத்தலத்து ஸ்ரீ சுப்ரமண்யரை வழிபட்டால் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
விபூதி பிரசாதம் :
இத்தலத்தில் மூலவர் சுப்பிரமணியருக்கு நடத்தப்படும் அபிஷேக விபூதிதான், தினமும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாகத் தரபடுகின்றது.
திருவிழாக்கள்:
குன்றத்தூர் முருகன் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை ஷஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, ஸ்கந்த ஷஷ்டி, திருக் கார்த்திகை தீபம், தைப் பொங்கல், தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகின்றன.
ஸ்கந்த சஷ்டி விழா இங்கு எட்டு நாட்கள் நடக்கிறது. ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடக்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்குப் பிரசித்தி பெற்ற இக்கோயிலில், முருகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்யவும், ஆசி பெறவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.
இங்கு கார்த்திகை தீபத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடி மலைக்கோயிலில் தீபம் ஏற்றப்படும்.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன் :
இத்தலத்து முருகனுக்குத் திருமணத்தடைகளை விலக்கக்கூடியவராக விளங்குகிறார் என்பதால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களது நேர்த்திக்கடனுக்காக முருகனுக்குத் திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்தும், அபிஷேகம் செய்தும் வழிபாடு செய் கிறார்கள்.
இங்கேயுள்ள அரச மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகக் கடைப்பிடித்து வரப்படுகிறது. தங்களது பிரார்த்தனை நிறைவேறியவர்கள், குழந்தையின் எடைக்கும் எடை பழம், சர்க்கரை, வெல்லம் என்று ஏதாவது காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். குழந்தைகளுக்கு வரக் கூடிய உடல் ரீதியான கடுமையான நோய்களுக்கு இங்கு வந்து, தவிடு மற்றும் வெல்லம் வழங்கி, நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00மணி வரையில் கோவில் திறந்திருக்கும். கோயில் நேரங்கள் திருவிழாவிற்கு ஏற்ப மாறுபடும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
குன்றத்தூர் முருகன் கோயில் குன்றத்தூர் முருகன் கோயில் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவிலும், குன்றத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவிலும், பல்லாவரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலும் போரூரில் இருந்து 11 கிமீ தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்பவர்கள் பல்லாவரத்தில் இறங்கி கோவிலுக்கு எளிதாகச் செல்லலாம். சென்னை பாரிஸ் கார்னரிலிருந்து குன்றத்தூருக்குப் பேருந்து வசதி உள்ளது. இந்த இடம் சென்னையின் பிற பகுதிகளுடன் பேருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
குறைகளைத் தீர்க்கும் குன்றத்தூர் முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
https://youtu.be/vj5tuawOXCk?si=hhOfF8Ed8fVk3jqE
https://youtu.be/qLw_xyjGMng
Leave a comment
Upload