தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
50 இல்லத்தரசிகளுக்கு- சரளா ஜெயபிரகாஷ்

20240207112320471.jpg

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்”

தம் பிள்ளைகளின் பிஞ்சுக்கரத்தால் பிசையப்பட்ட உணவு, அமிர்தத்தை விட மிகுந்த சுவையுடையதாகப் பெற்றோருக்கு இருக்கும் என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப பிள்ளைகள்தான் தங்களுடைய வாழ்க்கையின் மொத்த மகிழ்ச்சியாக பெற்றோர்கள் குறிப்பாக பெண்கள் நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

தங்கள் பிள்ளைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு,அந்த சூழ்நிலையை பெண்கள் மனப்பக்குவத்துடன் அணுகாமல் விட்டு விட்டால்,பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.இதில் இல்லத்தரசிகள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.பெண்கள் உடலைப்போல மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களில் பலர் நன்கு படித்திருந்தாலும், வேலைக்குப் போகாமல் குடும்பத்தினரை கவனிப்பதிலேயே தன் முழு கவனத்தையும் வாழ்நாள் முழுவதும் செலவிட்டிருப்பார்கள்.பிள்ளைகள் கல்லூரியில் படிக்கவும், வேலைக்காகவும் வெளியூருக்குப் போனப் பிறகுதான் அவர்கள் மிகவும் தனிமையில் தள்ளப்படுகிறார்கள். பிள்ளைகளுக்கும் அந்த காலகட்டம் சவாலாக இருக்கும்.புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார் படுத்தி கொள்வதில் மும்முரமாக இருப்பதால் அவர்களுக்கும் சிரமமான காலமாக உள்ளது.

அது மட்டுமல்லாமல் திருமணமாகி இருந்தால் Work-Life Balance செய்ய வேண்டும்.இப்படி அவர்களின் நேரம் அனைத்தும் இதிலே செலவிடுவதால் பெற்றோரிடம் நேரம் செலவிடுவது பெரும்பாலும் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக குறைந்துதான் போகின்றது.இதனால் தனிமை உணர்வால் பெண்கள் அதிகமாக கவலைப்பட்டுப் பாதிக்கப்படுகிறார்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு மாற்றம் வரும்.அதுபோல இந்த நிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டு,அதற்குத் தேவையானவற்றை கடைப்பிடித்தால் மகிழ்ச்சி தானாக உங்களை வந்து ஒட்டிக் கொள்ளும்.

உங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுங்கள். இப்பொழுதுதான் உங்களுக்கென்று நேரம் அதிகமாக ஒதுக்க முடியும்.உங்கள் உடல் நலனைப் பேணிக் காக்க தகுந்த நடவடிக்கைகளை முன்பை விட அதிகமாக எடுக்க முடியும். இந்த வயதில் நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருப்பதாக உணருவீர்கள்.உங்கள் கணவருடனும்,தோழிகளுடனும் அதிகமாக நேரம் செலவிட முடியும்.இந்த நிலையில் (stage) கிடைக்கும் அனைத்து நேர்மறையான விஷயங்களையும் முழுமையாக உணர்ந்து மகிழ்ச்சி அடையுங்கள்.

“வெற்றிடமான மனம் சாத்தானின் பட்டறை” (An idle mind is devil’s workshop)

என்ற பழமொழிக்கேற்ப சில பெண்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் வர நேரிடும். இந்த நிலையில் நேரம் அதிகமாக கிடைப்பதால் வீண் பேச்சு பேசுவது,சுய பச்சாதாபம் தேடுவது,தங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுவது, தங்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப்படுவது,பிள்ளைகளின் வாழ்க்கையில் சிறிய பிரச்சனை இருந்தாலும் எந்நேரமும் அதனையே நினைத்து வேதனைப்படுவது என இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களால் பெண்கள் அல்லல் படுகின்றனர்.

உங்களை ஏதாவது ஒரு நல்ல விஷயத்தில் மும்முரமாக ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் எதிர்மறையான எண்ணங்களில் இருந்து நீங்கள் மீள முடியும்.

நீங்கள்,உங்கள் குடும்ப உறவுகளுடன் மட்டுமல்லாமல் வெளி உலகத்துடனும் இணைந்து இருக்க வேண்டும்.அதுதான் உங்களை புதுப்பிக்கும்.

நிறைய குழுக்களில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் இணையதள வாயிலாக நடத்தப்படுகின்றன.உங்களுக்கு விருப்பமான துறை சம்பந்தப்பட்ட குழுவுடன் இணைந்து செயல்படலாம்.நிறைய மக்களின் நட்பு, இந்த வயதில் மனதிற்கு மகிழ்ச்சியையும் பாதுகாப்பான உணர்வையும் கொடுக்கும்.

நீங்கள் வெளியே சென்று வேலை செய்ய வேண்டும் என்பதில்லை,உங்கள் பலம் எந்த துறையில் இருக்கின்றது என்பதைப் பாருங்கள்.அந்த துறையில் உள்ள மற்றவர்களுடன் இணைந்து செயல்படலாம்.உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வாருங்கள்.எதற்குமே டூ லேட் என்று நினைக்க வேண்டாம்.

உங்களது திறமைகளை வெளிக் கொணர உங்களால் இயன்ற எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள்.உதாரணத்திற்கு உங்களுக்கு ஆர்வமுள்ள ஒரு கலையைத் தேர்ந்தெடுத்து அதனை கற்றுக் கொள்ளலாம்,புதிய மொழியை அறிந்து கொள்ளலாம்,ஏதாவது ஒரு கோர்ஸ் சேர்ந்து படிக்கலாம்.எந்த பாடத்தில் நீங்கள் வல்லுனரோ அக்கம் பக்கம் உள்ள பிள்ளைகளுக்கு அந்தப் பாட டூயூசன் எடுக்கலாம்; தவறே இல்லை.

வீட்டில் உள்ளவர்களுக்கே சமைத்து கொண்டு இருக்காமல் உங்கள் திறமைகளை வெளி உலகுக்கு காண்பியுங்கள்.இதனால் உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்தது போல இருக்கும்.

வாழ்க்கையில் நீங்களும் உயர்ந்து,மற்றவர்களையும் உயர்த்தி விடப் பாருங்கள். தன்னார்வத் தொண்டு செய்யலாம்,மற்றவர்களின் வாழ்க்கைத் தரம் உயர உங்களால் முடிந்த உதவிகளையும் உங்களது நேரத்தையும் அவர்களுக்காக செலவிடுங்கள்.இப்படி செய்ய நேரிடும் போது அது உங்களுக்குள் திருப்தி,மகிழ்ச்சி,தன்னம்பிக்கை மற்றும் பல நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.

இப்படிப் பயனுள்ள வகையில் உங்கள் நேரத்தை செலவிட்டால், எந்த வயதிலும் நீங்கள் சாதிக்கலாம்; சமூகத்தையும் உயர்த்தலாம்.

உங்கள் இளமைக்கால வாழ்க்கை மும்முரத்தில் நீங்கள் தவறவிட்ட அல்லது அதிக கவனம் செலுத்தாமல் விட்ட உங்கள் லட்சியங்களை,கனவுகளை நிறைவேற்ற உங்களுக்கு இன்னொரு சந்தர்ப்பமாக இந்தப் பருவம் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

“Life begins at 50”.அதனால் இதனை தவறவிடாதீர்கள்.