பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அந்தாதி திருநீர்மலையை குறிக்கிறது;
திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூற்றெட்டு திருப்பதி அந்தாதி
திருமலை நாயக்கர் (கி.பி. 1623 1659) ஆட்சிக் காலத்தில் வைணவ அந்தண குலத்தைச் சார்ந்த அழகிய மணவாளதாசர் எனப்படும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் வாழ்ந்து வந்தார். இவர் தமிழ் மொழியிலும் வைணவ சமயத்திலும் தீவிர ஈடுபாடு உடையவர். சிலகாலம் அரசரின் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
ஒரு நாள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது "கிருஷ்ண! கிருஷ்ண!" எனக் கூறியவாறு தனது உத்தரியத்தை உதறினார். திருவரங்கத்தில் தேரின் திரைச்சீலை பற்றிக் கொண்டதால் அதனை அணைக்க அவ்வாறு செய்த்தாக கூறினார். இச் சம்பவத்தைத் திருமலை நாயக்கருக்குத் தெரிவித்தனர். திருவரங்கத்தில் தேரின் திரைச்சீலை நீ பற்றியது உண்மை எனவும் அரசர் விசாரித்து அறிந்தார். மணவாளதாசரின் பெருமையை அறிந்து கௌரவம் செய்தார். அவர் விரும்பியவாறு திருவரங்கநாதர் கோயிலில் தங்குவதற்கு இடமும் உணவுக்குத் தளிகை பிரசாதம் அளிக்கவும் ஏற்பாடு செய்தார். திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்துமாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாதர் ஊசல் திருநாமம், திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி ஆகிய அஷ்ட பிரபந்தங்களையும் திருநறையூர் மேகவிடுதூது என்ற பிரபந்தத்தையும் பிள்ளை பெருமாள் இயற்றினார். நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் வைணவ திவ்விய தேசங்களைச் சிறப்பிக் கிறார். இதில் திருநீர்மலை பற்றிய பாடல் உள்ளது:
"இரங்கும் உயிரனைத்தும் இன்னருளாற் காப்பான்
அரங்க னொருவனுமே யாதல் - கரங்களால்
போர்மலைவான் வந்த புகழ்வாணன் காட்டினான்
நீர்மலை வாழெந்தை யெதிர் நின்று. ''
வருந்தும் உயிர்களுக்கு இனிய அருள் சுரந்து காப்பவன் திருவரங்கநாதனே ஆவான்; தனது ஆயிரம் கரங்களால் போர் புரிந்த வாணாசுரனுக்குத் தனது வலிமையைக் காட்டி அவனை வெற்றி கொண்டவனே திருமால்; இத்தகையோன் எழுந்தருளிய தலமே திருநீர்மலையாகும். (ஆயிரம் கைகளுக்குரிய வலிமையைப் பெற்ற வாணாசுரன் சிறந்த சிவபக்தன். அவனது மகள் உஷை கண்ணனின் பேரனான அநிருத்தனை விரும்பினாள். செய்தியறிந்த வாணன் அநிருத்தனைச் சிறையிலிட்டான். அநிருத்தனை மீட்கக் கண்ணபிரான் சேனைகளுடன் வாணனின் தலைநகரை முற்றுகை யிட்டார். வாணாசுரனின் வேண்டுகோளுக்குக் கட்டுப் பட்ட சிவபிரான் துணைக்கு வந்தார். கண்ணனும் சிவபெருமானுமே போர் புரிவது போன்ற மாயை உருவாயிற்று. கண்ணன் வாணனின் அளவுக்கு மீறிய ஆற்றலை ஒடுக்கினார். கண்ணனும் சிவனும் ஒரே சக்தியின் இருவேறு அம்சங்கள் என வாணன் உணர்ந்தான்.)
திருநின்றவூர் திருமலை அத்தங்கி தாதாரியர் தொண்டன் இயற்றிய நூற்றெட்டு திருப்பதி அந்தாதி
இந்நூலாசிரியரின் இயற்பெயரும் வாழ்க்கைக் குறிப்புக்களும் தெரியவில்லை. இந்நூலில் அதிக இலக்கிய நயம் காணப்படவில்லை. ஆயினும் ஒவ்வொரு திவ்விய தேசம் பற்றிய எட்டு முக்கிய செய்திகளை உள்ளடக்கிய 108 பாடல்களால் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
“பத்தி செயு தொண்டைமான் முனிவோரும் பருக்குமருள்
வைத்த மணிகர்ணிக நீரரங்க மணியிருப்பில்
கொத்தலர் மாமணி மாலிகைக் கன்பன் குணக்கிற்றுயில்
அத்தன் பொன் மாணிக்க மெல்லணை நீர்மலையங்கணகனே”
(தன்னை வழிபட்ட தொண்டைமான், மார்க்கண்டேயர், பிருகு முனிவர் தேவர்கள் ஆகியோருக்கு அருளியவர், இங்குள்ள புனிதப்புனல் மணிகர்ணிகா தீர்த்தமாகும். கோயிலில் உள்ள விமானம் அரங்கமணி எனப்படும். பிராட்டியார் பெயர் கொத்தளர் மாமணி மாலிகை; கிழக்கு நோக்கிய சந்நிதியில் சாயனத்திருக் கோலத்தில் காட்சியளிக்கும் எம்பிரானின் திருநாமம் பொன் மாணிக்கம் ஆகும். )
(தொடரும்)
தொடர்கள்
தொடர்கள்
Leave a comment
Upload