தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
புரட்சி பெண்கள்- பாகம் II தில்லைக்கரசி சம்பத்

2024020710421552.jpg

முத்துலட்சுமி ரெட்டி போலவே இன்னொரு புரட்சி பெண் மருத்துவர் தெரியுமா?

நாட்டில் ஆங்காங்கே விதவைகளை எரித்து கொன்றுக்கொண்டு, 4 வயது பெண்குழந்தைகளை திருமணம் செய்வித்து, கணவனுடனான உடலுறுவு கொள்வதற்கு மனைவிக்கு 10 வயதானால் போதும் என்ற சட்டம் போட்டிருந்த காலக்கட்டத்தில் அதாவது 1887 ஆம் ஆண்டில் தனது 22 வயதில் இந்தியாவிலேயே முதன்முறையாக தனக்கு கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் போய் நின்றவர் மும்பையில் பிறந்த ரக்மாபாய்.

இவர் இந்தியாவிலேயே மருத்துவ படிப்பில் பெல்ஜியத்தில் எம்டி படித்த முதல் பெண் மருத்துவர். அவருக்கு 11 வயதில் திருமணம் நடக்கிறது. 1887ஆம் ஆண்டில் அவருடைய கணவர் தாதாஜி பிக்காஜி, திருமண பந்தத்துக்கான உறவை அவர் செயல்படுத்த வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்கிறார். ரக்மாபாய் சிறுவயதில் தனக்கு சம்மதமில்லாமல் நடந்த திருமணமாதலால் இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடுகிறார்.

நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கும்?

“ திருமணம் செல்லும். கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும். மறுத்தால் 6 மாத சிறைதண்டனை. இரண்டில் ஒன்று “ என நீதிமன்றம் கூறுகிறது. ரக்மா எதை தேர்ந்தெடுத்தார்? நீங்கள் யூகித்தது சரியே! 6 மாத சிறைதண்டனையே மேல் என்றார் ரக்மாபாய். “என்னாப்பா? பெண்களை ஆண்கள் தானே கைவிடுவார்கள் , விவாகரத்து செய்வார்கள் . இதென்ன நாட்டில் இல்லாத பழக்கமாக ஒரு பெண் விவாகரத்து கேட்டது மட்டுமில்லாமல் “கணவன் தேவையில்லை அதற்கு சிறையே மேல்” என போவதா ?” என அடிப்படைவாதிகள் கொந்தளிக்கிறார்கள். ரக்மாபாய் தனது முயற்சியை கைவிடாது, திருமணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ராணி விக்டோரியாவுக்கு கடிதம் எழுத, அதிர்ஷ்டவசமாக ராணியும் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறார்.

அச்சமயத்தில் பாலகங்காதர திலகர்,.. தனது பத்திரிக்கையில் “இது இந்து மரபுகளின் மீது விழுந்த கறை”ரக்மாபாய் போன்ற பெண்களை திருடர்கள், திருமண உறவுக்கு வெளியே உறவு கொள்ளும் நடத்தைக்கெட்டவர்களை போல, கொலைகாரர்களைப் போல நடத்த வேண்டும்” என்றும் எழுதினார். திலகர் விசித்தரமான சில கொள்கைகளை வைத்திருந்தார். கல்வியை நில உடமை உள்ள பிராமணர்களுக்கு மட்டுமே அளிக்கப்படவேண்டும். ஏழை பிராமணர்களுக்கு கூட கல்வி அளிக்கக் கூடாது .

அத்துடன் மற்ற சாதியினருக்கும் அவரவர் குலக்கல்வி மட்டுமே பயிற்றுவிக்கப்படவேண்டும். முக்கியமாக எந்த சாதியாக இருந்தாலும் பெண்களுக்கு கல்வி வழங்கப்படவேக்கூடாது. இதனால் பெண்களுக்கு பெண்மைக்குணங்கள் நீங்கிவிடும். அவர்களுக்கு நன்னெறிகள், கைவேலைப்பாடுகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அக்காலத்தில் இந்திய நாட்டின் சில தலைவர்களும் அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றிக்கொண்டிருந்தார்கள் என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். 1890 ஆம் ஆண்டில் ஒரு கொடுமை நடந்தது. 30 வயதான கணவர் ஹரி மைத்தி என்பவர் தனது மனைவியான (!) 10 வயதான சிறுமி புல்மோனியுடன் உடலுறவு கொண்டபோது அந்த சிறுமி இறந்து போனாள். “ஏற்கெனவே மனைவியை இழந்திருக்கும் ஹரி மைத்தி மீது குற்றம் சொல்ல வேண்டாம்' என்று மக்களிடம் தன் பத்திரிக்கை வாயிலாக அக்கணவனை ஆதரித்தது திலகர் அடிப்படைவாத கொள்கைகளில் எவ்வளவு தூரம் மூழ்கி இருந்தார் என்பதை அறியலாம்

இக்கொடுமைக்கு பிறகே இந்தியாவில் 'மண ஒப்புதல் சட்டம் 1891' நிறைவேற்றப்பட்டது. இதற்கு ரக்மாபாய் வழக்கும் முக்கிய காரணமாக இருந்தது. பெண்களுக்கான திருமண வயதை, சரியாகச் சொன்னால் உடல் உறவுக்கு ஏற்ற வயதை, 10 என்பதில் இருந்து 12 ஆக உயர்த்தி சட்டம் உருவாக்கப்பட்டதால் 10 வயது குழந்தைகள் வயதான கணவர்களிடமிருந்து தப்பித்தார்கள். 12 வயது மட்டும் குழந்தை இல்லையா என்று கேள்வி கேட்க கூடிய சூழ்நிலை அன்று இல்லை.

ஆனால், 10 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணுடன் உடல் உறவு கொள்ளும் ஆணுக்குத் தண்டனை விதிக்கப்படும் என்பதை இந்த சட்டம்தான் முதன்முதலில் நிறுவியது. அந்தச் சட்டத்தை மீறினால், அது பாலியல் வல்லுறவாக கருதப்பட்டது. இன்று “பெண்உடல் அவள் உரிமை “ என முழக்கத்திற்கு அந்தநாளி்ன் ரக்மாபாயும் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம்.

“சுல்தானாவின் கனவு” என்ற ஆங்கில புதினத்தை படித்திருக்கிறீர்களா? அக்கதையில் பெண்களே நாட்டை ஆள்கிறார்கள், நிர்வாகம் செய்கிறார்கள், எல்லா பணியிடங்களிலும் பெண்கள் தான். மருத்துவர்களாக,பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, அறிஞர்களாக, அரசியல்வாதிகளாக சமூகத்தில் உலா வருகின்றனர் . அப்போ ஆண்கள்? அவர்கள் அனைவரும் வீட்டு வேலை, பிள்ளைகளை கவனித்துக்கொண்டு வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள்.

கற்பனை கதை தான். அதன் எழுத்தாளர் ருகியா சகாவத் ஹுசைன், 1880 ல் வங்காளத்தில் பிறந்தவர். கல்வி கற்க ஆசை . ஆனால் வசதியான குடும்பத்தில் பிறந்தும் பெண்ணாக இருந்ததால் பள்ளி செல்ல முடியவில்லை . இருந்தாலும் வீட்டிலேயே அவரது சகோதரர் அவருக்கு கல்வி கற்பிக்கிறார். 18 வயதில் ஒரு வயதான மனிதருக்கு மனைவி ஆகிறார். ஆனாலும் பெண்கல்வி , முன்னேற்றம்,சமூகம் குறித்தான தனது பார்வையை எழுத்துகள் மூலம் கட்டுரைகள் , கதைகளாக எழுதுகிறார்.

அவர் வாழ்ந்த காலத்தில் இஸ்லாமிய சமுதாயம் எப்படி இஸ்லாமியப்பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டி பெண்சமுதாயத்திற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், முஸ்லிம் சிறுமிகளுக்கு கல்வியின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பெண்களுக்கான கல்விக்கூடங்களை பாகல்பூரிலும், கொல்கத்தாவிலும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய முஸ்லிம்சிறுமிகளுக்கான உயர்நிலைபள்ளி கொல்கத்தாவில் இன்றும் இயங்குகிறது.

அன்று அவர் ஒரு கனவு கண்டார். அதன் தொடர்ச்சியாக 120 வருடங்கள் கழித்து இன்று தமிழ்நாட்டின் முஸ்லீம் பெண் நிகர் சாஜி இஸ்ரோவின் திட்ட இயக்குனராக, சூரியனுக்கே விண்கலத்தை அனுப்பி ருகியாவின் கனவை நினைவாக்கி சாதித்து காட்டி இருக்கிறார். புரட்சியின் விதை எங்கே விதைக்கப்பட்டாலும், ஒரு நூற்றாண்டே காத்திருந்தாலும், எவ்விடத்திலாவது பூ பூப்பது நிச்சயம் என்பதற்கு இதுவே சாட்சி.

ருகியா போன்றே இன்னுமொரு புரட்சி பெண் ஹைதராபாத் தக்காணத்தின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியராக இருந்த சுக்ரா ஹுமாயுன் மிர்சா . அவர் 1919ஆம் ஆண்டில் தய்பா பேகத்துடன் இணைந்து, அஞ்சுமன்-இ-குவாதின்-இ-டெக்கனை உருவாக்கினார். பெண்கள் கல்விக்காக அந்த இயக்கம் பணியாற்றியது. முஸ்லிம் ஆண்களின் பலதார திருமணங்களை தீவிரமாக எதிர்த்து செயலாற்றினார். தனது வாழ்நாள் முழுவதும் பெண்கல்விக்காக மட்டுமில்லாமல், பெண்களை பெற்றவர்களிடம் ஏற்கனவே திருமணமான ஆணுக்கு தங்களது பெண்ணை திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என வலியுறுத்தி வந்தார் சுக்ரா.

வரதட்சணை கொடுமைகளால் மருத்துவம் படித்த இளம்பெண்கள் கூட கணவனால் கொலை செய்யப்பட்டோ அல்லது தற்கொலை செய்து சாவது போன்றவை இன்னும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் கேரளாவில், 1935 லேயே

“பெண்களே! ஒரு பெண்ணின் உடல் ஆணிற்கு இன்பம் தருவதற்கு மட்டுமே என்ற முட்டாள்தனமான நினைத்துக்கொண்டு தாழ்வுமனப்பான்மையில் வாழாதீர்கள். இதனால் ஆண்களும் பெண்களை ஏதோ வீட்டில் உள்ள பொருளைப்போல நினைத்தும், கையாண்டும் வருகிறார்கள். சமையலறையை விட்டு பெண்கள் வெளியேறினால் குடும்ப மகிழ்ச்சி குலைந்துவிடும் என்ற எண்ணத்தில் பெண்கள் வெளியே பணி புரியக்கூடாது என்கிறார்கள். அவற்றை பொருட்படுத்தாமல் பெண்கள் கல்வி பயின்று பணிக்கு செல்வதை லட்சியமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று முழங்கினார் ஒரு பெண்மணி. அவர் தான் அண்ணா சாண்டி.

1926 இல் கேரளாவில் சட்டம் படித்த முதல் பெண் பட்டதாரி. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான “தி க்ரேட் இண்டியன் கிட்சன்” என்ற மலையாள படத்தை ஞாபகப்படுத்துகிறது அண்ணாசாண்டியின் முழக்கம்.

அண்ணாசாண்டி சிரியன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தாலும், கருத்தடை, தன் உடல் தன் உரிமை, தாய்-சேய்நலம் , திருமணபந்தத்தில் ஆண்பெண் சம உரிமை பற்றி இந்திய மகளிர் மாநாட்டில் உரையாற்றியதில் பல கிறிஸ்துவ பெண்மணிகளின் கடும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது.

திருவிதாங்கூர் சமஸ்தான திவான் , அண்ணா சாண்டியை , மாவட்ட அளவிலான சட்ட அதிகாரியாக நியமித்தார். சாண்டி , முன்சிஃப் ஆன முதல் மலையாள பெண் ஆவார்.

அவர் 1948 இல் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் 1959 ல் முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் ஆனார்.

இப்படி சரித்திரத்தில் இடம்பெற்ற பல புரட்சிப்பெண்கள், வரலாற்றில் இடம் பெறாத ஆனால் பெண்முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாய் இருந்தவர்கள் , குரல் கொடுத்தவர்கள், ஏன் நம்குடும்பத்திலேயே ஆண் ஆதிக்கத்தை எதிர்த்து சாதித்த, நம்மை சாதிக்க வைத்த பெண்மணிகள், நம் பாட்டிகள் அம்மாக்கள் என நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு காரணகர்த்தாவாக இருக்கும் அத்தனை பெண்மணிகளுக்கும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 வெறும் பெயர்தாங்கி சடங்கு நாளாக கடக்காமல் நம்மை சுற்றி வாழும் பெண்குழந்தைகள் பெண்களின் வாழ்க்கையில் சிறிதளவாவது முன்னேற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்தினால் நாமும் புரட்சிப்பெண்களே