பெண்களே..
இப்போது நாம் வாழ்கிறோம் பாருங்கள் இது தான் நமக்கு பொற்காலம் . ஆதியில் சிம்பன்ஸி காலத்திலிருந்து நடுவில் கற்கால மனிதன் , நாகரீக மனிதனாக மாறியும் பெண் இனம் இவ்வுலகத்தில் பட்டப்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
ஒரு 100, 200 வருடங்களுக்கு முன்பு கூட நம்நாட்டில் சதி என்கிற பெயரில் பெண்ணை உயிரோடு தீயில் தள்ளி எரித்து கொண்டிருந்தார்கள். அதற்கும் முந்தின காலத்தில் ஐரோப்பாவில் புரட்சி, பெண்ணுரிமை என அறிவோடு பேசிய பெண்களை சூனியக்காரிகள் என கம்பத்தில் கட்டி வைத்து எரித்துக்கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் கூட 100, 120 வருடங்களுக்கு முன்பு பெண்கள் கல்லூரியில் சேர முடியாது. மத்திய கிழக்கு நாடுகளில் இப்போதும் கேட்கவே வேண்டாம். ஓடி வந்து விடுங்கள்..
அதென்ன நம் நாட்டில் சதி என்று எல்லா பெண்களையுமா எரித்தார்கள்? ஏதோ ஒன்றிரண்டு பரவலாக எங்கேயாவது நடந்திருக்கலாம் . அதை வைத்து இப்பொது கேவலப்படுத்துவதா? என்று கேட்கலாம். நம் நாட்டில் ஆயிரம் வருடங்களாக சதி மரணங்கள் நடந்து வந்தன.
தஞ்சை கோயிலை கட்டிய இராஜராஜனின் தாய் வானவன்மாதேவி, பேரரசர் சுந்தர சோழர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர்நீத்தார் என்று கல்வெட்டு சொல்கிறது. நாட்டின் பட்டத்துராணியே சதி நெருப்பில் சாகும் போது குடிமக்கள் எவ்வளவு தூரம் சதியை பின்பற்றியிருப்பார்கள் என நாம் சொல்ல தேவையில்லை. முகலாய ஆட்சியில் அக்பர் சதியை தடை செய்திருந்தார். அவருக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் நமக்கென்ன என்று விட்டு விட்டதால் பிரிட்டீஷ் ஆட்சிக்காலம் வரை இந்த வழக்கம் தொடர்ந்தது.
அப்போது பெங்காலில் இந்தியாவின் மற்ற பாகங்களை விட அதிகளவு நடந்தன. உண்மையில் சதி தடையை அமல்படுத்த பிரிட்டீஷ் பயந்தது. இன்னும் சொல்லப்போனால் 1789, பிரிட்டீஷ் கவர்னர் ஜெனரல் லார்ட் வில்லியம் பென்டிக் லண்டனுக்கு சென்று “சதி தீக்குளிப்புத் தொடர அனுமதிக்க வேண்டும் “ என்று வாதிட்டார். ஏனெனில் சதிதடை செய்தால் இந்து மக்களிடையே இன்னும் வெறி அதிகரித்து சதி கொலைகள் அதிகரித்தால் என்ன செய்வது என்ற கவலையை பதிவு செய்தார் . மேலும் பிரிட்டீஷ் அதிகாரிகள் "பெரும்பாலான மாகாணங்களில், அனைத்து இந்துக்களும் அதன் பாரம்பரிய மத வழக்கங்களின் தொடர்ச்சியில் மிகவும் உறுதியானவர்களாக இருக்கிறார்கள்" என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
பெங்காலில் நிலைமை மிக மோசமாக இருந்ததால் பிரிட்டீஷ் நீதிமன்றம் , கற்றறிந்த உயர்சாதி பண்டிட்களை கொண்டு ஒரு குழு அமைத்து சதி விவகாரத்தை கண்காணிக்கும்படி உத்தரவு இட்டது. இதன் மூலம் பிரிட்டீஷார் இந்த விஷயத்தில் நேரிடையாக தலையிடுவதை தவிர்க்க முயற்சித்தனர்.
கிபி 1805 ல் 12 வயதுடைய ஒரு சிறுமியை மயக்கநிலையில் சதி என்ற பெயரில் தீயில் தள்ளி கொல்ல, பண்டிதர்கள் குழு இனி சதி சடங்கில் குறிப்பிட்ட விதவை பெண் தாமாகவே முன்வந்து சுயபுத்தியுடன் சம்மதித்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தனர். அத்தோடு 16 வயதுக்குட்பட்ட, சிறு குழந்தைகளைப் பெற்ற/கர்ப்பமாக இருந்த/போதையில்/எந்த வகையிலும் கட்டாயப்படுத்தப்படாத “விதவைகள் தீக்குளிப்பிற்கு” சில ஒழுங்குமுறை அறிவுரைகளை இக்குழு வழங்கியது. எப்பேர்பட்ட கருணை ( !) பாருங்கள்.
நல்லவேளை.. இதெல்லாம் வேலைக்காகாது என தீர்மானித்து வருவது வரட்டும் என்று சதி தடைசட்டம் 1829 ல் வந்தது. ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகள் துணையுடன் , கவர்னர் ஜெனரல் லார்ட் வில்லியம் பென்டிக் புண்ணியத்தில் இந்த சட்டம் அமலானதால் நமது எள்ளுப்பாட்டிகள் பிழைத்தனர். ஆனாலும் அதன்பின்னர் உயிரோடு இருந்த பெண்கள் நன்றாக வாழ்ந்தார்களா என்றால் இல்லை, இறப்பதே மேல் என்ற அளவிற்கு விதவை பெண்களின் நிலைமை அப்போதிருந்தது. அதற்கு காரணம்? கல்வி , பேச்சுரிமை, சுயமுடிவு , சொத்துரிமை போன்ற எதுவும் கிடையாது, விதவைகளுக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் தாம். பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கே தந்தை, சகோதரன், கணவன்அல்லது மகனை அண்டி பிழைக்கும் நிலைமை தான்.
இன்று பெண்கள் விமானம் ஓட்டுகிறார்கள், விண்கலம் செலுத்துகிறார்கள், நாட்டை ஆள்கிறார்கள், எல்லா துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். எப்படி 100 வருடங்களில் இப்படி நிலைமை மாறியது ? முக்கியமாக சொத்துரிமை இந்து வாரிசுச் சட்டம் 1956 ல் வந்தது. அதன்படி தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு ஆனால் பரம்பரை சொத்தில் பங்கில்லை. 1989 ல் தமிழ்நாட்டில் கலைஞர் அரசால் பெண்களுக்கு பூர்வீக சொத்திலும் பங்குண்டு என திருத்தம் செய்யப்பட்டது.
இதைப்பின்பற்றி 2005 ல் இந்தியா முழுமைக்கும் பூர்விக சொத்திலும் பெண்களுக்கு பங்கு உண்டு என மாற்றப்பட்டது. இதற்கு பின்னணியில் யார் இருந்தார்கள்? இதெல்லாம் ஏதோ ‘ஜீபூம்பா’ போட்டு மாற்றங்கள் வந்துவிடவில்லை. நம் நாட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில நெஞ்சுரம் கொண்ட பெண்கள் புரட்சி குரல்களை எழுப்பி சாதித்து அடுத்து வரும் தலைமுறைக்காக பாதை வகுத்து வைத்து சென்றிருக்கிறார்கள். அவர்களில் சிலரை பார்ப்போம்.
முத்துலட்சுமி ரெட்டி நினைவிருக்கிறதா?
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். சும்மா ஏதோ பேச்சுக்காக படிக்கவில்லை. சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையில் படித்த ஒரே இந்திய மாணவியாகவும் அவர் இருந்தார். அறுவை சிகிச்சைப் பிரிவில் முதலாவது மாணவியாக தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கமும் பெற்றார். பாடுபட்டு படித்த படிப்பை கொண்டு சமூகத்தில் பெண்ணுரிமை விஷயங்களில் கவனம் வைத்து சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை இந்து கோவில்களுக்கு அர்ப்பணிக்கக் கூடிய தேவதாசி நடைமுறையை ஒழிக்கும் சட்டம், இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற முத்துலட்சுமி ரெட்டி முன்னோடியாக இருந்தார்.
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முத்துலட்சுமி. தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் அடிப்படைவாதிகளின் கடுமையான எதிர்ப்பை மீறி 1947ல் தான் சட்டமானது. சட்டசபையில் முத்துலட்சுமி உரையாடும் போது “தேவதாசி நடைமுறையானது உடன்கட்டை ஏறுதலைவிட மிக மோசமானது,இது மதத்தின் பெயரால் நடைபெறும் குற்றச் செயல்'' என்றும் கூறினார்.
நம் பாரம்பரியம்,கலாச்சாரம், தர்மம் எல்லாவற்றையும் ஒரேயடியாக (!) இந்திய பெண்களிடமே ஒப்படைத்திருந்ததால் பெண்களுக்கு கல்வி கூடாது, சுதந்திரம் கிடையாது, சுயசார்பு கிடையாது, கணவர் இறந்தால் மனைவி உயிர் வாழக்கூடாது , எல்லா கொடுமைகளுக்கு உச்சமாக பாரதத்தின் தர்மத்திற்கு(!) தேவதாசிகளையும் நம்பி இருந்திருக்கிறது இந்திய ஆண் சமூகம். என்ன கொடுமை பாருங்கள்! தமிழகத்தில் சுமார் 77 வருடங்களுக்கு முன்னர் வரை , சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிறுமிகளை, பெண்களை தேவதாசி முறையில் ஈடுப்படுத்தி அவர்களை கடவுளின் பெயரில் ஊருக்கு ஊர் வேட்டையாடி கொண்டிருந்தனர்
அன்றைய காலக்கட்ட ஜமீன்தார்களும், நிலச்சுவான்தார்களும், முக்கிய பிரமுகர்களும், செல்வந்தர்களும். 1000 வருடங்களுக்கும் மேலான ஒரு பழக்க,வழக்கத்தை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்துவிடுவார்களா என்ன? தேவதாசி முறை ஒழிப்பிற்கு அடிப்படைவாதிகளின் எதிர்ப்புகள் ஒருபுறம், மறுப்புறம் தேவதாசிகளே இதை எதிர்த்தனர். அதை கண்டு முத்துலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
தேவதாசிகளை பொறுத்தவரை அவர்களுக்கென கோயில் சார்பில் வசிக்க வீடும் கோயில் நிலத்திலிருந்து மானியமாக நெல்லும் கொடுக்கப்பட்டு வந்தன. தேவதாசி முறையை ஒழித்துவிட்டால் வீடு மறுபடியும் கோவிலுக்கு சொந்தமாகிவிடும்,சாப்பாட்டிற்கும் வழியில்லாது ஆகிவிடும் . அதற்கு பயந்துகொண்டு அவர்களும் எதிர்த்தனர். மூவலூர் இராமாமிர்தத்தை, முத்துலட்சுமி கலந்தலோசித்து கோயில்களில் தேவதாசிகளுக்கென ஒதுக்கப்பட்ட வீடுகளையும் நிலங்களையும் அவர்களுக்கே சட்டப்பூர்வமாக உரிமையாக்க முயற்சி எடுத்ததில் வெற்றியடைந்தனர். தேவதாசி குடும்பங்களில் உள்ள பெண்குழந்தைகளுக்கு கல்வி பயில வேண்டிய கட்டாயத்தை எடுத்துரைத்தனர்.
இன்றைக்கு அந்த சமூக பெண்கள் யாரிடமும் அடிமை வாழ்வு வாழாமல் சுயகௌரவத்துடன் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு முத்துலட்சுமி போன்ற புரட்சி பெண்களே காரணம். தேவதாசி ஒழிப்பு சட்டத்தில் “இனி எந்தப் பணி செய்வதற்கென்றும் அவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் கோயிலுக்கு இறைவனை வணங்க மட்டும் வாருங்கள், ஆனால் கோயிலுக்குச் சேவை செய்கிறோம் என்கிற பெயரில் கடவுளுக்கும் எந்தவொரு மனிதனுக்கும் அடிமையாக இருக்க வேண்டாம்’ என்று கடைசியாக இந்த வரியை சேர்த்து சொல்லி நிறைவு பெறுகிறது.
Leave a comment
Upload