திருமதி நாகலட்சுமி. இந்த பெயர் பொதுவாக விளையாட்டில் ஈடுபாடு கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இரண்டு உலக சாதனையாளர்களின் தாய் - வைஷாலி, பிரக்ஞானந்தா. அதிலும் மகள் அர்ஜுனா விருது வென்றவர். எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமல் எல்லா விழாக்களிலும் ஓரமாகவே அமர்ந்து, குழந்தைகள் மேடை ஏறும் போதும், பரிசுகளும் பெறும் போதும் கண்களில் பெருமிதத்தோடு அமைதியாக அமர்ந்திருப்பர். நான் அவரை முதலில் சந்தித்தது எங்கள் கல்லூரியில். வைஷாலி எங்கள் கல்லூரி மாணவி என்பதால் அவரின் சாதனைகளை பாராட்டி போனவருடம் ஒரு விழா நடத்தப்பட்டது . பிரக்ஞானந்தா அழைக்கப்பட்டிருந்தார். அந்த மேடையில் அவர்கள் கூடவே நாகலட்சுமியும் கௌரவிக்கப்பட்டார், எந்த விருதின் கனமும் தலைக்கு ஏறாமல் இருப்பதில் கவனமாக அவர்கள் மூவருமே இருப்பதாக தோன்றியது. அன்று என்னால் என்னை அறிமுகம் கூட செய்துகொள்ள முடியவில்லை. அதன் பிறகு இரெண்டு மூன்று முறை கல்லூரிக்கு வந்த போது கூட தொலைவில் நின்று தான் என்னால் பார்க்க முடிந்தது. விகடகவியின் உலக மகளிர் தினம் சிறப்பிதழிற்காக அவரை பேட்டி எடுக்க வேண்டி வைஷாலியிடம் தொடர்பு கொண்டேன். என்னை அறிமுகம் செய்துகொண்டு பின், என் வேண்டுகோளை சொன்னேன். உடனே சரி என்று சொன்னாலும், அன்று இரவு அவர்கள் செஸ் போட்டிக்காக ப்ராக் கிளம்பிக் கொண்டிருந்தனர் என்று கேள்விப்பட்டவுடன் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. வைஷாலியிடம், "நான் கேள்விகளை அனுப்பறேன் அம்மாவிடம் இருந்து பதில் ரெகார்ட் செய்து அனுப்ப முடியுமா? என்று கேட்டேன். " கட்டாயமாக இரெண்டு நாட்களில் அனுப்பி விடுகிறேன் என்று சொல்லி சரியாக அனுப்பி வைத்தார். போட்டி எப்படி செல்கிறது என்று கேட்டதற்கு, ஆரம்பம் கொஞ்சம் சரியாக இல்லை. போகப் போக மாறலாம் என்று அழகாக பதில் சொன்னார் வைஷாலி. அத்தனை பரபரப்பிலும் என் கேள்விகளுக்கு பதிலை அனுப்பி வைத்த அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். என் கேள்விகள் வைஷாலி பிரக்ஞானந்தா பற்றி அல்ல, உங்களை பற்றி தான் என்று தான் கேள்விகளைத் தொடங்கினேன். மிகவும் எளிமையான கேள்விகளைத் தான் முன் வைத்தேன் அவர்கள் சூழ்நிலை கருதி.
1. உங்க சொந்த ஊரு எது?
என் சொந்த ஊர் சென்னை தான்.
2. எங்க படிச்சீங்க?
என் ஸ்கூல் படிப்பு first கிளாஸ் ல இருந்து +1 வரைக்கும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், +2 நுங்கம்பாக்கம் கார்பொரேஷன் பெண்கள் மேல் நிலைப் பள்ளி. என்னோட டிகிரி மெட்ராஸ் யூனிவர்சிட்டி ல கம்ப்ளீட் பண்ணினேன்.
3. உங்களுக்கு sports la ஆர்வம் உண்டா?
எனக்கு ஸ்போர்ட்ஸ் ல ஆர்வம் இருக்கு. ஆனா குடும்ப சூழ்நிலை காரணமா அதிலெல்லாம் கலந்துக்கறதுக்கு வாய்ப்பு கிடைக்கல. ஆனா அந்த வாய்ப்பை இப்போ குழந்தைங்க மூலமா என்ஜாய் பண்ணியிருக்கேன்.
4. உங்கள் வாழ்கையின் நெகிழ்ச்சியான தருணம் நிறைய இருக்கும். எதாவது ஒன்றை பகிர்ந்து கொள்ளலாமா?
என்னுடைய லைப் ல நிறைய நெகிழ்ச்சியான தருணங்களை நான் சந்திச்சு இருக்கேன். அதுல ஒண்ணே ஒன்னு உங்க கிட்ட நான் ஷேர் பண்ணிக்க விரும்பறேன். வேர்ல்ட் கப் டோர்னமெண்ட் அசர்பெய்ஜான் நாட்டுல நடந்துகிட்டு இருந்தது. அதுல என் மகன் பிரக்ஞானந்தா கலந்துக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்தான். அது நிறைய லெவல் தாண்டி தாண்டி ஒரு இருவத்தஞ்சு நாட்களுக்கு நடக்கற ஒரு போட்டி. முக்கியமான ஆறாவது ரவுண்ட ஜெயிச்சாதான் அடுத்த கட்ட போட்டிக்கு போகமுடியும். அந்த மாதிரி ஒரு போட்டி அது. மூணு நிமிஷம் நேரம் செட் பண்ணி அந்த போட்டி வைக்கறாங்க. அதுல யாரு ஜெயிக்கறாங்களோ அவங்க தான் ஏழாவது ரவுண்டு விளையாட போக முடியும். ஜெயிக்கறவங்க தான் விளையாட போக முடியும். விட்டுட்டா அந்த டோர்னமெண்ட விட்டே வெளிய வந்துறணும்.அந்த மூணு நிமிஷம் தான் வெற்றி தோல்விய நிர்ணயிக்கற அந்த நேரம். அப்போ நான் பரபரப்பா அந்த இடத்தில் இருந்தேன். அந்த மூணு நிமிஷம் எனக்கு அப்படி ஒரு டென்ஷன் ஆன நேரம். அத சொல்ல வார்த்தையே இல்ல. ஆனா பிரக்ஞானந்தா வின் பண்ணிட்டான். நாங்கஅடுத்த லெவெலுக்கு வின் பண்ணித்தான் கனடா ல நடக்குற கேண்டிடேட் டோர்னமெண்ட்ல கலந்துக்கப் போறோம். இது வார்த்தையிலே சொல்ல முடியாத ஒரு நேரம்.
5. நிறைய நாடுகள் போயிருப்பீங்க பிடித்த நாடு எது?
நிறைய நாடுகள் போயிருக்கேன். முப்பது நாப்பதுக்கு மேல வெளிநாட்டு பயணம் நான் பண்ணி இருக்கேன். ஆனா எனக்கு பிடிச்ச நாடு நம்ம இந்தியா தான்.
6. வெளி நாடுகளுக்கு செல்லும்போது உணவு பிரச்சினை வருமா? எப்படி சமாளிப்பீங்க?
வெளி நாடு போகும் போது நானே சமைச்சு சாப்படறதுனால எனக்கு பெருசா உணவு பிரச்சனை வந்தது இல்லை.
7. குழந்தைகளின் வெற்றிக்கு பின்னர் பெற்றோர் கட்டாயமாக இருப்பாங்க. ஒரு பெண்ணாக, தாயாக சாதித்ததில் எந்த தருணத்தில் போது பெருமை கொண்டீர்கள்?
ஸ்போர்ட்ஸ்க்கு குடுக்கற மிக உயரிய விருது, அர்ஜுனா விருது. அது என் பொண்ணுக்கு கிடைக்கும் போது ஒரு தாயா ரொம்ப பெருமையா நான் ஃ பீல் பண்ணினேன். அந்த சமயம் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
8. சிறு சிறு ஏமாற்றங்களுக்கே துவண்டு போகும் பெண்களுக்கு எதாவது அறிவுரை?
தோல்விலயும் நாம நல்ல பாடம் கத்துக்கலாம். நம்முடைய முயற்சியை மட்டும் நாம கை விடக் கூடாது. கண்டிப்பா நாம ஒரு நாள் ஜெயிப்போம்.
இன்னும் நிறைய கேட்டிருக்கலாம் தான். அவர்கள் சூழ்நிலை தான் கேள்விகளை நிர்ணயம் செய்தது. அவர்கள் குரலில் இருந்த தெளிவும் தன்னம்பிக்கையும் சந்தேகமில்லாமல் நமக்கு ஒரு விஷயத்தை உணர்த்தியது. தோல்வியோ வெற்றியோ சலனப்படமால், சாதனை பயணத்திற்கு தன்னை தயார் நிலையில் எப்பொழுதும் வைத்திருக்கிறார்கள் .
Leave a comment
Upload