“உனக்கு நாகரீகமே தெரியலை”- என்றாள் தேனுகா.
“அப்படியா?”- சிரித்தாள் ராஜி.
“நெத்தியில் மண்டை உடஞ்சு ரத்தம் வழியற மாதிரி பொட்டு. டிரஸ் பாரு. இன்னும்
பழைய காலம் மாதிரி பாவாடை, தாவணி.”
“எனக்குப் பிடிச்சிருக்கே.”
“காலேஜ்ல படிக்கறே. இந்தக் காலத்துக்கு எத்த மாதிரி அப்டேட் ஆக வேண்டாமா?”
“அப்டேட்னா? ஆடை அலங்காரமா?”
உதட்டைச் சுழித்தாள் தேனுகா.
கல்லூரி செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார்கள். மாணவ, மாணவியர்கள்,
வேலைக்குச் செல்பவர்களுடன் கூலி வேலைக்குச் செல்பவர்கள், காய்கறி, பழங்கள்
விற்பவர்களும் குழுமி இருந்தார்கள்.
“இவங்கெல்லாம் பின்னாடி வரலாம்ல? குளிக்காம, செய்யாம, பஸ்ஸே நாறும்.”
தேனுகாவுக்கு பதில் சொல்லவில்லை ராஜி. சில விஷயங்களில் மௌனம் உத்தமம்.
தேனுகவுக்கு நாகரீகம் என்றாலே அது ஆடை அலங்காரம்தான். அவள் நிற்கும் இடமே
கமகமவென்று பெர்ஃபியூம் மணக்கும். ஜெல் தடவி விரித்து விட்ட கூந்தல். கண்ணுக்குத்
தெரியாத சின்னப் பொட்டு. மிடி, லெக்கின்ஸ் போட்டாலும் அது இறுக்கிப் பிடித்து பிறர்
கண்ணை உறுத்தும். எப்போதும் அவள் அல்ட்ரா மாடர்ன் உடைகள்தான் அணிவாள்.
கல்லூரி என்பதால் லெக்கின்ஸ், குர்தா. மற்ற சமயங்களில் சினிமா நடிகையோ என்று வியக்க
வைக்கும் அலங்காரங்கள்.
உடை அவளது இஷ்டம் என்றாலும், மற்றவர்களைக் கிண்டல் செய்து பொது
இடத்தில் அவமானப் படுத்துவது அவளுக்குப் பிடித்தமான விஷயம். அவளைப் போலவே சில
தோழிகள், மாணவக் கும்பல் அவளைச் சுற்றி.
ராஜி பதவிசு. பாவாடை தாவணி அவளுக்குப் பிடித்த உடை. நீண்ட கூந்தலைப்
பின்னி, சின்னதாகப் பூ வைப்பாள். நெற்றியில் பளீரென்று வட்ட, சிவப்புப் பொட்டு. சின்ன
விபூதிக் கீற்று என்று பார்க்கவே மங்களகரமாக இருப்பாள். அவளைப் போலவே இருக்கும்
தோழிகள் அவளைச் சுற்றி.
“”அம்மனோ சாமியோன்னு ஆடப் போறியா?”
“ஆடிட்டாப் போச்சு.”
“நீ ஏன் நகரீகமாவே இருக்க மாட்டேங்கறே?”
“நாகரீகம்னா என்ன?”
“உனக்கு என்னடி குறைச்சல்? அழகா இருக்கே. யுனிவர்சிடி ரேங்க் ஹோல்டர்.
உங்கப்பாவும் நல்ல வேலையில் இருக்கார். இன்னும் பழம் பஞ்சாங்கமா இருக்கியே.”
“பழமை கேவலமா?”
“உலகம் அப்டேட் ஆகிட்டே இருக்கு. நீ இப்படி இருக்கறது சிரிப்பா இருக்கு.
“நேர்மையும் உண்மையுமா இருக்கிறது சிரிப்பான விஷயம்னா அப்படியே இருந்துட்டு
போகிறேன்”
ராஜியை உறுத்து விழித்தாள் தேனுகா.
அவளின் உலகம் மால், காபி ஷாப், சினிமா தியேட்டர். யாரிடமும் மட்டு மரியாதை
இல்லாமல்தான் பேசுவாள். தமிழ் தெரியாது என்று ஆங்கிலத்தில் பேசி அலட்டும் தமிழ்ப்
பெண்.
“பொட்டு என்பது மங்கலத்தை குறிக்கக்கூடியது எதிரில் இருப்பவர்களின் எதிர்மறை
எண்ணங்களை விரட்டக் கூடியது கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வைத்து என்ன செய்யப்
போகிறோம் கோவிலில் அம்பாள் சிலைக்கு அழகாக பொட்டு வைத்து மாலை போட்டு
இருப்பார்கள் அது பார்க்கும் போது மனதிற்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது?”- சக
தோழி.
“போங்கடி” என்றாள் தேனுகா. அவள் பேசும்போதே, பேருந்து ஒரு பக்கம் தொங்கிக்
கொண்டு வந்தது. ஹாய், ஹாய் என்ற விளிப்புகள். படிக்கட்டு இறங்கி வெல்கம் பேபி என்றது
தேனுகாவை. தேனுகா வேகமாக ஓடினாள். அதே நேரம் பழக்கார கிழவியும் ஏற முயல,
தேனுகா மோதியதில் கீழே விழுந்தாள். பழங்கள் சிதறி ஓடியது.
“அறிவில்லையா? மெதுவா வரலாம்ல.”- சட்டென்று சீறினாள் தேனுகா.
“ஏம்மா அந்த ஆயாவை இடிச்சு தள்ளி ஓடினது நீ”- வேறொரு ஆயா.
ராஜி ஓடிப்போய் ஆயாவைத் தூக்கி நிறுத்தினாள். அவளும், சிலரும் சேர்ந்து சிதறிய
பழங்களைப் பொறுக்கி கூடையில் போட்டு, ஆயாவைத் தூக்கி நிறுத்தினார்கள். கையில்
சிராய்த்திருந்தது. தன் கர்சீப்பால் கட்டி, ஆயாவையும், கூடையையும் வண்டியில் ஏற்றினாள்
ராஜி.
ஒருவர் எழுந்து இடம் கொடுக்க, ஆயா “நன்றி கண்ணு”- என்றபடி அங்கு
உட்கார்ந்தாள்.
“சமூக சேவை செஞ்சாச்சா”- தேனுகா மற்றொரு சீட்டில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு
எழுந்து இடம் கொடுத்தவன் பவ்யமாக அருகில் நின்றான்.
“மாதர்குல மாணிக்கம் வாழ்க.”- தேனுகா குரல் கொடுக்க. ஜால்ரா கூட்டம் வாழ்க,
வாழ்க என்றது.
ராஜி புன்னகைத்தாள். பின் அமைதியாக
“நாகரீகம்னா என்னன்னு கேட்டியே. இதான்” என்றாள்.
Leave a comment
Upload