தொடர்கள்
கதை
தாயுமானவள் - லாவண்யா மணிமுத்து

20240205163403816.jpg

காலை ஐந்து மணி. அலாரம் அடித்தவுடன் எழுந்து வீட்டு வேலைகளை பார்க்கத் தொடங்கினாள் வாணி. 7 மணிக்குள் எல்லா சமையலையும் முடித்தால் தான் ஒவ்வொருவரையும் கிளப்பி அனுப்ப சரியாக இருக்கும். எவ்வளவு முயன்றும் நினைத்த நேரத்தை தாண்டி தான் வேலை தினமும் சென்று கொண்டிருக்கிறது.

முதலில் கணவனை எழுப்பி காப்பி கொடுத்தாள். செடிகளுக்குத் தண்ணீர் விட்டு, இருவருடைய பைக்கையும் துடைத்து விட்டு, அவருடைய அலுவலகப்பை, வார இறுதியில் அயர்ன் செய்த எல்லோருடைய உடுப்புகளையும் எடுத்து பீரோவில் அடுக்கி வைத்து விட்டு, அழுக்குத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு ஓடவிட்டாள்.. குளிக்கச் சென்றாள்..

கிளம்பித் தயாராகி வந்தவருக்கு டிபன் பரிமாறி வழி அனுப்பி வைத்தாள். அதன் பிறகு மகளையும், மகனையும் எழுப்பி விட்டு பல் துலக்கி குளிக்க வைத்தாள். 10 நிமிடம் நேற்று படித்த பாடங்களை நினைவு படுத்தியவாறே சாப்பாடை கொடுத்தாள். சமர்த்தாக சாப்பிட்டு விட்டு பையன் தட்டை எடுத்துச் சென்று கழுவி வைத்தான்.

மகன் எப்பொழுதும் தன் வேலைகளை அழகாக செய்வதோடு அம்மாவிற்கும் உதவி செய்வான். தங்கைக்கு ஷூ பாலிஷ் செய்வதை பார்க்கவே இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எதையும் சொல்லிக் கொடுக்காமலேயே அவனாக எடுத்து செய்வது மிகப்பெரிய சந்தோஷத்தை அவளுக்கு கொடுத்தது.

வீட்டில் எல்லோரும் பகிர்ந்து வேலை செய்வதால் எளிதாக இருக்கிறது. இல்லையென்றால் இவள் பாடு திண்டாட்டம்தான்.

இரண்டாவது குட்டி பெண் அண்ணனை பார்த்து அவளும் கற்றுக்கொண்டு தானாக சில வேலைகளை செய்தாலும் பெரும்பாலான நேரங்களில் அம்மாவின் முந்தானை பிடித்துக் கொண்டு வளைய வந்து கொண்டிருந்தாள். அத்தையும் மாமாவும் 6 மணிக்கு எழுந்து காபி குடித்துவிட்டு நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்தனர். பிள்ளைகள் தயாராகி முடித்த போது அவர்கள் உள்ளே வந்தனர். இவர்கள் எல்லோரும் கிளம்பிய பிறகு நிதானமாக மற்ற வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்துவிட்டு ஓய்வெடுப்பர். மாலை இவர்கள் வரும் நேரம் ஆவலாக காத்திருப்பர்.

வேன் வந்தது. குழந்தைகள் இருவரும் மகிழ்ச்சியோடு கையசைத்தவாறே சென்றனர். உள்ளே வந்த வாணி அத்தைக்கும், மாமாவிற்கும் டிபனை மேசை மேல் வைத்துவிட்டு அலுவலகத்திற்கு தயாரானாள். நேரமாகிவிட்டது இன்று மட்டுமல்ல எப்போதும் இது வழக்கமான ஒன்றுதான். நின்றவாறே இரண்டு இட்லியை வேகமாக சாப்பிட்டுவிட்டு மதிய உணவையும், கைப்பையும் எடுத்துக்கொண்டு தன்னுடைய வண்டியில் அலுவலகத்திற்கு புறப்பட்டாள். தினசரி நேரம் சரியாகத் தான் இருக்கிறது. வீட்டு வேலை, அலுவலக வேலை, பிள்ளைகளின் படிப்பு என்று எப்போதும் போல நேரமில்லாமல் தான் இருக்கும்.

ஆனால், சனி ஞாயிறானால் எல்லோரும் சேர்ந்து கோயில்,திரைப்படம் பூங்கா,கடற்கரை என்று எங்கேயாவது சென்று நேரம் செலவழித்து விட்டு வருவதால் அடுத்த வாரத்திற்கான புத்துணர்ச்சி கிடைக்கும். பிள்ளைகள் படிக்கும் நேரம் மாமியார், மாமனார் பொறுப்பாக பாடங்களை சொல்லிக் கொடுத்து விடுவார்கள்.இடையே வாணி தேவையான போது கவனித்தால் மட்டும் போதும். பிறகு சிறிது நேரம் தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருப்பர்.

இந்த வாரம் அம்மா ஊரில் திருவிழா வெள்ளிக்கிழமை வந்தது நல்லதாக போய்விட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே தேதி தெரிந்ததால் பயண ஏற்பாடுகள் தயாராய் இருந்தது. வியாழக்கிழமை இரவே அனைவரும் கிளம்பி வெள்ளிக்கிழமை காலை அம்மா வீட்டிற்கு வந்து விட்டனர். குளித்துச் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்தனர். மதிய விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. உறவினர்களும் தெரிந்தவர்களும் வந்து கொண்டிருந்தனர். எல்லோரும் கலகலப்பாக பேசி மகிழ்ந்தனர். இரவு சாமி ஊர்வலம், வாணவேடிக்கை எல்லாம் சிறப்பாக நடைபெற்றது.

சனிக்கிழமை மற்ற உறவினர்கள் அனைவரும் கிளம்பிவிட்டனர். இவர்கள் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து வீட்டை ஒழுங்குப்படுத்திவிட்டு நிதானமாக சமையல் வேலைகளை செய்தனர். ரொம்ப ரிலாக்ஸாக இரண்டு நாள் ஓடியதே தெரியவில்லை. ஞாயிறு மாலை ரயிலில் முன்பதிவு செய்திருந்தனர்.

அம்மா பெரிய அட்டைப்பெட்டி நிறைய மசாலா சாமான்கள், நொறுக்கு தீனி, ஊறுகாய், வற்றல், மருந்து பொடி,குளியல் பொடி, வீட்டில் உருக்கிய நெய், கடலை மிட்டாய், எள்ளுருண்டை எல்லாம் கட்டி தயாராய் வைத்திருந்தார்கள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விடைபெறும் நேரத்தில் வாணிக்கு கண்ணீர் துளிர்த்தது.

இது எப்போதும் அம்மா வீட்டில் இருந்து கிளம்பும்போது நடப்பது தான். கண்ணீரை துடைத்தவாறு சிரித்த முகத்துடன் கிளம்பினாள். அவ்வப்போது இது போன்ற சந்திப்புகள் மனதை பலப்படுத்தி அடுத்த ஆறு மாதம் வரை நினைவுகளை நிறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பயணத்தில் இனிமையான இந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டிருக்கையில் ங்ங்ங்ங்....ர்ரர்ர்ர்ர்ர்....ம்ம்ம்ம்ம்ம என்று வித்தியாசமாய் குரல் கேட்டது மிக அருகில். சுதாரித்து எழுந்து பார்ப்பதற்குள் டொம்.. என்ற தண்ணீர் செம்பு கீழே விழுந்து தண்ணீர் சிதறி வாணியின் மேல் தெறித்தது.

திடுக்கிட்டு விழித்தவள், ஒரு கணம் எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் தவித்தாள். நள்ளிரவு நேரம். ஊர் உலகமே அயர்ந்து கொண்டிருந்தது, அப்போதுதான் புரிந்தது. அவளுக்கு தான் இவ்வளவு நேரம் கண்டது அனைத்தும் வெறும் கனவுதான் என்ற உண்மை உரைத்தது.

இவள் பிறந்த போதிலிருந்தே அம்மாவிற்கு மனநிலையில் சற்று பிறழ்வு ஏற்பட்டது. அது முதல் குழந்தையையும், தாயையும் பார்த்துக்கொண்டது அப்பாவும் பாட்டியும் ( அம்மாவின் அம்மா) தான். கொஞ்சம் வளர்ந்த பிறகு தான் வாணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக தன் குடும்ப சூழ்நிலை புரிய ஆரம்பித்தது. அதை உணர்ந்து நன்கு படித்தாள். பள்ளி, கல்லூரியில் எல்லோரும் கொண்டுவரும் விதவிதமான உணவுகள், போடும் உடைகள், தலை பின்னல்கள் பார்க்கும் பொழுது ஆசையாக இருக்கும்.

நம் வீட்டில் இப்படி ஒரு சூழ்நிலை இல்லை என்று ஏங்குவாள். ஆனால் அப்பாவும் பாட்டியும் நமக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நினைத்தவுடன் இவற்றையெல்லாம் பெரிதாக எண்ணுவதை விட்டுவிடுவாள். அம்மாவிற்கு எல்லா வைத்தியமும் பார்த்தாகிவிட்டது. அதுவாக சரியானால்தான் உண்டு என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்.

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைத்தது. இரண்டு மூன்று மாதங்களுக்குள் பாட்டிக்கும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் வாணியே காலையில் சீக்கிரம் எழுந்து வீட்டில் எல்லா வேலையும் செய்து வைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்று வந்தாள். அம்மாவிற்கு உணவு கொடுக்க பக்கத்து வீட்டு அக்கா உதவி செய்தாள். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பாட்டி இவ்வுலகை விட்டு விடை பெற்றாள்.

என்ன செய்வது என்று புரியாமல் தவித்தனர் வாணியும் அப்பாவும். பிறகு வாணி நன்றாக யோசித்து ஒரு முடிவாய் அப்பாவிடம் கூறினாள், "உங்களுக்கும் வயதாகி விட்டது, அப்பா நீங்கள் உங்கள் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருங்க", என்று பணித்தாள். "நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் ஓய்வாக இருந்து அம்மாவிற்கு மட்டும் உணவை மற்றும் சரியான நேரத்திற்கு மருந்தை கொடுத்து பார்த்துக் கொள்ளுங்கள்", என்றாள். " உனக்கு ஒரு கல்யாணத்தை பண்றதுக்கு எல்லாம் தயார் பண்ணி வச்சிருக்கேன் பாப்பா, அம்மாவை நான் பார்த்துக்கிறேன் நல்ல வரன் ஒன்னு வந்திருக்கு, நல்ல குடும்பம் , நல்ல பையன் , உன்னை நல்லா பார்த்துகுவாங்க பாப்பா", என்றார்.

" இல்ல பா, நான் உங்களை விட்டுட்டு அம்மாவ விட்டுட்டு எங்கேயும் போக முடியாது. என் வாழ்க்கையை பத்தி மட்டும் சுயநலமா என்னால யோசிக்க முடியாது", என்று திட்டவட்டமாக கூறினாள்.

"இனிமே என் வாழ்க்கையில நான் உங்களுக்காகவும் அம்மாவிற்காகவும் மட்டும்தான் வாழப் போறேன். இவ்வளவு நாள் என்னை பொக்கிஷமா நீங்க பத்திரமா அடைகாத்தீங்க, இப்போ இது என்னுடைய முறை அப்பா. உங்களையும், குழந்தை மாதிரி இருக்கிற அம்மாவையும் ரெண்டு கண் போல நான் காப்பேன். இதுதான் என்னுடைய வாழ்க்கை. திருமணத்தைப் பற்றி இனிமேல் தயவு செய்து பேசாதீர்கள் அப்பா" என்று கூறிவிட்டு, அம்மாவிற்கு சோறு ஊட்ட தயாரானாள் அந்த தாயுமானவள்.

கனவை நனவாக்க போராடும் நங்கைகளுக்கிடையே

கனவை விட கடமை தான் பெரிது

என்று தன்னையே அர்ப்பணித்து

வாழும் தாயுமானவளான அருமை சகோதரிகளுக்கு

இந்தக் கதை சமர்ப்பணம்