தொடர்கள்
தொடர்கள்
தில்லையை நினை,தொல்லையை மற! பகுதி-5 மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240207132820172.jpg

தில்லைக்காளியின் திருக்கோவில் மிகவும் பழமையானது. அகிலத்தை ஆட்சி
செய்பவள் அம்பிகை. இவள் அருட்சக்தியாக விளங்கும்போது பார்வதியாகவும்,
புருஷசக்தியாக விளங்கும் போது திருமாலாகவும், கோபசக்தியாக விளங்கும்போது
காளியாகவும், போர்சக்தியாக விளங்கும்போது துர்கையாகவும் திருக்கோலங்கொண்டு
அருளுகிறாள். இதில் காளி வடிவம் கொடியோரை வேரறுத்து, நல்லோரை
காப்பதற்கான வடிவமாகும். உக்கிர சிவனான காளனின் கனல் கண்களிலிருந்து
தோன்றியவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘காளி’ என்ற பெயர் ஏற்பட்டது.

காளி வழிபாடு ஹர்ஷவர்த்தனர் காலத்தில் தோன்றியது என்பது
வரலாறு கூறும் செய்தி. இவள் வெற்றியைத் தரும் வேதநாயகி என்பதால், பண்டைய
அரசர்கள் பலரும் போருக்குச் செல்வதற்கு முன்னரும், வெற்றிவாகை சூடிவந்த
பின்னரும், அரசு சார்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய செயல்பாடுகளின் போதும்
முதலில் காளியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

காளியின் பிறப்புப் பற்றி இருவிதமான வரலாறுகள்
கூறப்படுகின்றன.தனக்கு மரணம் சம்பவித்தால் அது ஒரு கன்னிப் பெண்ணால்
நிகழவேண்டும் என்று பிரம்மாவிடம் வேண்டி வரம்பெற்றிருந்தான் தாருகாசுரன். அந்த
அசுரனை அழிப்பதற்காக சிவனின் கனல் கண்ணிலிருந்து அவள் படைக்கப்பட்டாள்
என்றும், அசுரனை அழித்த பிறகு பிரம்மாவின் ஏற்பாட்டின்படி அவள் சிவனின் கரம்
பற்றியதாக ஒரு வரலாறு.

மற்றொரு வரலாற்றின்படி, ஒரு முறை சிவன்- சக்தி இருவருக்கும்
தங்களில் யார் சக்தி மிக்கவர் என்பதாக மோதல் ஏற்பட்டது. அதில் சிவனின்
கோபத்திற்குள்ளான பார்வதிதேவி, காளியாக சாபம் பெற்றாள் என்றும், தவறை
உணர்ந்து பிரயாச்சித்தம் வேண்டியபோது ‘உலக நன்மை பொருட்டு உன்னை
காளியாக ஆக்கினோம்.வரும் யுகத்தில் அரக்கர் குலத்தால் தேவர்கள், முனிவர்கள்
மற்றும் லட்சோபலட்சம் உயிர்களுக்கு அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை உன்
கோப சக்தியால் தடுத்து அரக்கர் குலத்தை அழித்து தேவர்களை காத்துவா’ என
சிவனால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்டவள் காளி தேவி என்கிறது அந்த வரலாறு.

வரலாறுகள் வெவ்வேறானாலும் பார்வதிதேவியே, காளி என்பது பாமரர்
வரை அறிந்த உண்மை. இறைவனின் அருளாணையின்படி ஆதிகாளி, தட்சிணகாளி,
க்ரீம்காளி, ஸ்ததிகாளி, பத்ரகாளி, மதுகைபட சம்ஹார காளி, குஹ்யகாளி, வரகாளி,
சதுர்புஜகாளி, நடனகாளி என பத்து விதமான உருமாறி அதேசமயம் கோரத்தன்மை
மாறாமல் மகிஷாசுரன், பண்டகாசுரன், தாரஹாசுரன், மதுகைபடர், சும்பநிசும்பர்
போன்ற பல அசுரர்களை சம்ஹாரம் செய்து, தேவர்கள், முனிவர்கள் மற்றும் ஏனைய
ஜீவராசி களுக்கு அபயம் அளித்தாள்.

அதன்பின்னரும் அவள் கோபம் தணியவில்லை. இதனால் உலகுக்கு
ஆபத்து நேர்ந்து விடலாம் என்பதால், சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடி காளியின்
கோபத்தை அடக்கி தில்லையில் அமரச் செய்தார்.சாந்தம் அடைந்த காளி,
தில்லைவனத்தை அடைந்து ஈசனிடம் ஐக்கியமடைய வேண்டிய தருணத்தை
எதிர்பார்த்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள மூலநாதரை பூசித்து தவம்
மேற்கொண்டாள்.

காளியின் அம்சம் முடிவுறும் வேளை நெருங்கி சாபவிமோசனம்
பெறும் நிலையில் இருந்தமையால் ‘காளி உரு இனி இல்லை, காளி உருவுக்கு இதுவே
எல்லை’ என்றாகி ‘எல்லைக்காளி’ என அழைக்கப்பட்டாள்.எல்லைக்காளியாக அவள்
தில்லையில் எழுந்தருளியமையால் ‘தில்லைக்காளி’ என்றும் பெயர் பெற்றாள்.

தில்லைக்காளியின் திருக்கோவில் மிகவும் பழமையானது.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை மற்றும் சிவஞானபுரம், மதுரை
மாவட்டம் மடப்புரம் மற்றும் முடுக்குசாலை, பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர்,
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் மற்றும் வடமட்டம், திருச்சி மாவட்டம்
உறையூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிவகங்கை மாவட்டம்
கொல்லங்குடி மற்றும் கண்டிபட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் பச்ச மடம்,
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், விழுப்புரம்
மாவட்டம் பிரம்மதேசம்,ஏனாதிமங்கலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள
காளி கோவில்களுக்கு இல்லாத சில சிறப்புகளை இக்கோவில் கொண்டுள்ளது.

இந்த ஆலயத்தில் உள்ள காளிசிலை விசுவாமித்திர மகரிஷியால்
பிரதிஷ்டை செய்யப்பட்டது. தனது யாகத்திற்கு தடையாய் இருந்த தாடகை என்னும்
அரக்கியை கொன்ற காரணத்தினால் ராமர், லட்சுமணர்களுக்கு தோஷம் ஏற்பட்டது.
அவர்களின் தோஷத்தை போக்க யாகம் செய்ய விரும்பிய விசுவாமித்திரர்,
தில்லைவனக்காடாக இருந்த இப்பகுதிக்கு ராமர், லட்சுமணர்களுடன் வந்தார்.
பின்னர் இங்கு காளிதேவியை பிரதிஷ்டை செய்து யாகத்தை நடத்தியதாக வரலாறு
சொல்கிறது.

-தில்லையின் பெருமை தொடரும்