தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
‘சங்ககாலப் பெண்ணிலையும் தற்காலப் பெண்ணியமும்....பாகம் 1 - பித்தன் வெங்கட்ராஜ்

20240209071529211.jpeg

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்

என்றான் பாரதி. இந்தியாவில் பெண்ணியம் என்னும் சொல் பிரபலமடைந்த
காலகட்டமான 1960க்குக் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு முன்னதாகவே
இப்படியொரு கருத்தை முன்வைத்திருக்கிறான் மகாகவி. புதுமைப்பெண்
என்னும் இப்பாடல் மட்டுமல்லாது, விடுதலைக்கும்மி, பாஞ்சாலி சபதம்
முதலான படைப்புகளைனைத்திலுமே பெண்விடுதலை மற்றும் பாலின
சமத்துவத்தைப் போற்றியும், பெண்ணடிமைத் தனத்தை முற்றிலுமாக
எதிர்த்துமே எழுதிவந்திருக்கிறான் பாரதி.

பெண்ணியம் அதாவது Feminism என்னும் இச்சொல் 1837 ஆம் ஆண்டு சார்லஸ்
ஃபோரியர் என்னும் ஒரு பிரெஞ்சுத் தத்துவவியலாளரால் உருவாக்கப்பட்டது
என்று அறிகிறோம். இச்சொல் உருவாக்கப்பட்டபோது இது பெண்தன்மையைக்
குறிக்கக்கூடிய ஒரு பொதுச்சொல்லாகவே இருந்துள்ளது. புழக்கத்தில்தான்
இது பெண்ணுரிமைகளுக்காகப் போராடுவோரின் கோட்பாட்டைக் குறிக்கப்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெண்ணியத்தை அவ்வளவு எளிதாக வரையறுத்துக்கூறமுடியாது என
நினைக்கிறேன். ஏனென்றால், அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று
வரை மாற்றமடைந்துகொண்டே வந்திருக்கிறது. இதுவரை நான்கு அலைகள்
ஏற்பட்டுள்ளன. முதல் அலை 19ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கான
ஓட்டுரிமை வேண்டி ஏற்பட்டது. அடுத்தடுத்த அலைகள் ஆண்களுக்கு நிகராக
அடுத்தடுத்த உரிமைகள் வேண்டி ஏற்பட்டு இப்போது அதிகார மையத்தில்
பெண்களின் செயல்பாடு, பாலினப் பாகுபாட்டை எதிர்ப்பது, பாலியல்
துன்புறுத்தல், பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பாலுறவுச் சுதந்திரம்
ஆகியவற்றை மையப்படுத்தித் தொடர்கிறது.
இந்தப் பெண்ணியச் செயல்பாடுகள் பெருமளவில்
சாதித்துள்ளன.எடுத்துக்காட்டாக, சமவேலைக்குச் சம ஊதியம், பெண்களுக்குச்
சொத்துரிமை போன்றவை, பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்
மற்றும் வன்முறைகளுக்கு எதிரான #Metoo இயக்கம் ஆகியவற்றைக்
குறிப்பிடலாம். இவற்றின் அடுத்தகட்டமாகத்தான் பாலுறவுச் சுதந்திரம்
இருக்கிறது.
பாலுறவுச் சுதந்திரம் என்பது அடிப்படையில் ஒரு பெண் தனக்குத்
தேவையான அனைத்தையும் எந்தவோர் ஆணின் துணையுமின்றியும்
செய்துகொள்ளமுடியும் என்றிருப்பது, பாலுறவு உட்பட. அப்படியே

ஆண்களுடன் பாலுறவில் ஈடுபட்டாலும் அது நிலையான உறவாக
இல்லாமல் அப்போதைய தற்காலிக உறவாக இருந்துவிட்டு, பின்னர் மீண்டும்
வேறொருவருடன் சேர்ந்துகொள்வது மற்றும் தனக்கு விருப்பமான எந்த
ஆணுடனும் உறவு கொள்ளும் சுதந்திரம் ஆகும். நிகழ்காலத்தில் இது
இன்னும் நூறு சதவிகிதம் நடைமுறைக்கு வரவில்லையென்றாலும்,
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனித சமூகம் தாய்வழிச் சமூகமாக
இருந்த காலகட்டத்தில் பெண் தன் இணையைத் தேர்வு செய்யும்
உரிமையைப் பெற்றவளாகத்தான் இருந்தாள் என்கின்றன தரவுகள்.
இயற்கையின் ஒரு தேன்கூட்டை உதாரணமாக எடுத்துக்கொண்டால்,
அதிலிருக்கும் ஆண், பெண் தேனீக்களில் பெண் தேனீக்கள்தாம்
இராணித்தேனீயாகவும், பணித்தேனீக்களாகவும் இருந்து தேனைச்
சேகரிப்பதிலும், காப்பதிலும் ஈடுபடுகின்றன. ஆண் தேனீக்கள்
இனப்பெருக்கத்திற்காக மட்டுமே தம் வாழ்வைக் கொண்டுள்ளன.
போலவே, தாய்வழிச் சமூகமான ஆரம்பகாலத்தில் பெண்ணே வேட்டையாடி
உணவுகொண்டுவரும் தலைவியாக இருந்துள்ளாள் என்பதும் ஆண்
இனப்பெருக்கத்திற்காக மட்டுமே இருந்தான் என்பதும் வரலாற்று
ஆய்வாளர்களின் கருதுகோள்களில் ஒன்றாக உள்ளது. அடுத்தடுத்த
காலகட்டங்களில் ஏற்பட்ட ஆண்/பெண் மனநிலை மாற்றங்களால் பெண்கள்
ஒடுக்கப்பட்டு அது தந்தைவழிச் சமூகமாகத் தொடர்ந்தது என்றும்
கருதுகின்றனர். இதற்குக் கூறப்படும் பல்வேறு காரணங்களில் 'பெண் ஈட்டிக்
கொண்டுவரும் உணவு முதலான செல்வங்கள் அனைத்தையும் ஆண்டு
அனுபவித்த ஆண் அச்செல்வங்களைத் தன்வழிப்பிறந்த பிள்ளைகளுக்குக்
கொடுக்கவேண்டும் என்று கருதியதும்' ஒன்றாகும். இதனைத் தாய்வழிச்
சமுகம், தந்தை வழிச் சமூகம் என்று நாம் அழைத்தாலும், அடிப்படையில்
இது பெண்ணாதிக்கச் சமூகத்திலிருந்து ஆணாதிக்கச் சமூகமாக
மாறியதைத்தான் குறிக்கிறது.
இஃது இப்படியிருக்க, தமிழ்ச்சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக
இருந்தது என்பதை நம் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம்.
திருக்குறளில் ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் ஆறாவது அதிகாரத்தில்
வாழ்க்கைத்துணை என்று மனைவியை மட்டுமே குறித்துள்ளார் வள்ளுவர்.
மனைவிக்குக் கணவனும் வாழ்க்கைத்துணைதானே!. ஆனால்,
பத்துக்குறட்பாக்களும் பெண்களையே/மனைவியையே குறிக்கின்றன.
குறிப்பாக,

'பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்'

என்று எழுதி, கற்பு என்பது பெண்மைக்குரிய இலக்கணம் என்று
குறிப்பிட்டுள்ளார். அதேசமயத்தில், ‘பிறனில் விழையாமை’ என்னும் 15ஆவது
அதிகாரத்தில் தன் மனைவியைத் தவிர பிற பெண்களின்மீது
ஆசைகொள்ளக்கூடாது என்று கணவனாகிய ஆணுக்குத்தான் வள்ளுவன்
அறிவுறுத்துகிறானேயன்றி, பெண்ணிடம் அக்கருத்தைக் கூறும்படி எக்குறளும்
இல்லை. பெண்ணுக்கு அப்படியான அறிவுரைகள் கூறும் அவசியம் அப்போது
இல்லை என்று நாம் கருதலாம் என்று நினைக்கிறேன். மேலும், மனை
என்றால் வீடு‌, மனைவி என்றால் வீட்டிலிருப்பவள் எனலாம். வீட்டிலிருக்கும்
பெண்ணுக்குப் பிற ஆடவர்களை அவர்களாகச் சென்று காணும் வாய்ப்போ,
பழக இடமோ இல்லை என்பதால் வள்ளுவர் பெண்களுக்கு
அவ்வறிவுரையைத் தவிர்த்து ஆண்களுக்கு மட்டும் அவ்வறிவுரையைப்
பிறனில் விழையாமை என்னும் அதிகாரத்தில் வழங்குகிறார். அதேசமயம்,
பெண்கள் அதாவது மனைவியர் தத்தம் கணவர்களோடு எப்படி
நடந்துகொள்ளவேண்டும் என்றுதான் வாழ்க்கைத் துணைநலம் என்ற
அதிகாரத்தில் கூறுகிறார். இது வள்ளுவர் என்னும் ஆண் கூறும் ஆண்கள்
மற்றும் பெண்களின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு குறித்த அன்றைய நிலை.
(தற்காலத்தில் கணவன் மனைவி இருவரும் இவ்விருபது குறட்பாக்களையும்
ஓதியுணர்வது நலம்பயக்கும் என நம்புகிறேன்.)
அடுத்ததாக, புறநானூற்றில் 312ஆவது பாடலாகப் பொன்முடியார் என்னும்
பெண்பாற் புலவர் பாடிய பாடலையும் இங்குக் காணலாம். அவர்,

'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே!
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே!'

என்று ஆரம்பிக்கிறார். இதன்வழி, குடும்பத்தில், சமூகத்தில் பெண்ணாகிய
தாய்க்குப் பிள்ளையைப் பெற்றுப் பாதுகாப்பாய் வளர்ப்பதுதான்
முதன்மையான கடமையாகக் குறிக்கப்பட்டுள்ளது. அப்பிள்ளையை
அறிவுடையோனாக ஆக்குவது தந்தையின் கடமை என்றும்
குறிக்கப்பட்டுள்ளது. இஃது, அக்கால ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்து ஒரு
பெண்ணாகிய பொன்முடியார் கூறியது. (தற்காலத்தில் இவ்விரண்டுமே
கணவன் மனைவி ஆகிய இருவரின் கடமையும் என்றாகிப் பல்லாண்டுகள்
ஆகின்றன)

அடுத்ததாக, 'பல்சான்றீரே' எனத் தொடங்கும் புறநானூற்றின் 246ஆவது பாடல்.
பெருங்கோப்பெண்டு என்ற பெயர்கொண்ட ஓர் அரசியார் பாடியது.
இப்பாடலின் பொருளை வைத்து நாம் அறிவது யாதெனில், அரசியின்
கணவன் அதாவது அரசன் இறந்துவிட்டான். அவன் பிணத்தைத் தீமூட்டி
எரிக்கும் சிதையின் முன் நின்று தானும் அத்தீயில் விழுந்து உடன்கட்டை
ஏறப்போவதாகப் பாடிய பாடல் என்று அறிகிறோம். இப்பாடலில், அந்நாளில்
கைம்மை நோற்ற, அதாவது கணவனை இழந்து வாழும் பெண்கள் பட்ட
துன்பங்கள் கூறப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட துன்பங்களைத் தான் அனுபவிக்க
விரும்பவில்லை என்றும், அதனால் தாம் உடன்கட்டை ஏறுவதாகவும் கூறி
எனக்கு இத்தீயும் அழகிய பொய்கையும் ஒன்றுதான் என்றும் இப்பாடலில்
கூறியுள்ளார் பெருங்கோப்பெண்டு. இப்பாடலைப் பாடியிருப்பது ஓர் அரசி
என்பதையும் நாம் கூர்ந்து நோக்கவேண்டும். அரசிக்கே இந்நிலை என்றால்
குடிமக்களின் நிலையை நாம் சொல்லித்தெரியவேண்டிதில்லை.
அக்காலத்தில் கணவனை இழந்தபிறகு கைம்மை நோற்பது அல்லது
உடன்கட்டை ஏறுவது என்பவைதாம் வழக்கமாக இருந்திருக்கக்கூடும் என்பது
இப்பாடலின் மூலம் நமக்கு விளங்குகிறது. (இந்தச் 'சதி' என்னும் உடன்கட்டை
ஏறுதல் வழக்கம் 1829 ஆம் ஆண்டு இராஜாராம் மோகன்ராய் அவர்களின்
முன்னெடுப்பில் தடைசெய்யப்பட்டது. விதவையர் மறுமணச் சட்டம் 1856ஆம்
ஆண்டு ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்பவரின் முயற்சியால்
கொண்டுவரப்பட்டது.)
மேற்சொன்ன பாடல்களை வைத்து, பெண்கள் வீட்டுவேலைகள்
செய்துகொண்டு, பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயேதான்
இருந்தார்களா என்று நாம் எண்ணும் வேளையில், அப்பெண்கள் அதனோடு
சேர்த்து சிறுசிறு தொழில்களையும் செய்து பொருளீட்டி, பொருளாதாரச்
சுதந்திரத்தோடும் இருந்துவந்த தகவல்களும் நம் சங்க இலக்கியங்களில்
கிடைக்கின்றன. அவற்றின்படி அவரவர் வாழும் நில அமைப்புக்குத் தகுந்த
தொழில்களை ஆண்கள் செய்வது போலவே பெண்களும் செய்துவந்தனர்
என்பது புலனாகிறது. அதாவது, குறிஞ்சி நிலப் பெண்கள் தினைப்புனம்
காத்தலிலும், முல்லை நிலப் பெண்கள் பால் பொருள்கள் விற்பனையிலும்,
மருத நிலப்பெண்கள் உழவிலும், நெய்தல் நிலப் பெண்கள் மீன் விற்பது
போன்ற தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இவை மட்டுமல்லாமல் ஆடை
வெளுப்பது, பூ விற்பது, அரசவையில் பணிப்பெண்களாக இருப்பது போன்ற பல
தொழில்களைப் பெண்கள் செய்ததற்கான சான்றுகள் நம் சங்க நூல்களில்
காணக்கிடைக்கின்றன.

இவை இப்படியிருக்க, கணவரை அல்லது காதலனைப் பிரிந்த பெண்கள்
மேனியில் பசலை படர்ந்து விரகத்தில் பாடும் பாடல்கள் பலவும் நம் சங்க
இலக்கியங்களில் கிடைக்கின்றன. இவை, அக்காலத்தியப் பெண்களுக்குத் தம்
பாலியல் விருப்பினை/ஏக்கத்தை வெளிப்படையாய்க் கூறும் சுதந்திரம்
இருந்ததைக் காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, குறுந்தொகையில் 27ஆவது பாடலாக உள்ள,
வெள்ளிவீதியார் என்னும் பெண்பாற்புலவர் பாடிய ‘கன்றுமுண்ணாது
கலத்தினும் படாது’ என்னும் பாடல். அப்பாடலில், 'ஒரு நலமான பசுவின்
பாலானது அதன் கன்றினால் உண்ணப்படாமலும், ஒரு பாத்திரத்தில்
சேகரிக்கப்படாமலும் வீணாகக் கீழே சிந்தி வழிந்தோடுவதைப் போலத் தன்
இளமையும் அழகும் எனக்கும் பயன்படாமல், என் தலைவனுக்கும்
பயன்படாமல் வீணாகிறதே' என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.
இதே வெள்ளிவீதியார் நற்றிணை 335ஆம் பாடலில், தன் தலைவனைப் பிரிந்த
இரவின் நிமித்தங்களைக் கூறிவிட்டு 'யாமம் உய்யாமை நின்றன்று, காமம்
பெரிதே களைஞரோ இலரே' என்று முடிக்கிறார். அதாவது, இந்த இரவு
நகரவேயில்லை. என் காமம் பெருகிக்கொண்டேயிருக்கிறது. அதனைக்
களையும் அதாவது தீர்க்கும் என் தலைவன் இப்போது என்னுடன் இல்லை'
என்கிறார். இவை போலவே பல பாடல்கள் பெண்களின் பாலியல்
விருப்பத்தை/ஏக்கத்தைக் கூறுவனவாக உள்ளன. (கணவர் எவ்வளவு

தொலைவிலிருந்தாலும் மனைவியர் இரண்டொரு ஸ்மைலிகளில் தன்
விருப்பத்தைத் தம் கணவரிடம் காட்டிவிடும் நவீன யுகத்தில்
தற்போதிருக்கிறோம்.)

இதுபோக, பெண்களின் மாதவிடாய்க்காலம் பற்றிய குறிப்பும்கூடச் சங்கப்
பாடல்களில் கிடைக்கிறது. புறநானூற்றின் 299ஆம் பாடலில் பொன்முடியார்
எழுதியிருக்கும் 'கலம்தொடா மகளிர்' என்னும் சொற்கள் மாதவிடாய்க்காலப்
பெண்களையே குறிக்கிறது என்கின்றனர் அறிஞர். அதாவது, ஒரு
சிற்றரசனுக்கும் பெருவேந்தனுக்கும் இடையில் நிகழ்ந்த போரில்
சிற்றரசனின் குதிரைகள் கடலில் நீரைக்கிழித்துக்கொண்டு முன்னேறும்
கப்பலைப் போலப் பாய்ந்து முன்னேறின‌ என்றும், பெருவேந்தனின்
குதிரைகள் கலம் தொடா மகளிரைப்போல் அதாவது மாதவிலக்கான
பெண்கள் சமையல் செய்வதற்காகப் பாத்திரங்களைத் தொடாமல்
சோர்ந்துபோய் நிற்பதைப்போல விலகிநின்றன என்றும் கூறுகிறது அப்பாடல்.
ஆக, அக்காலத்தில் மாதவிடாயின்போது பெண்கள் நடைமுறை
வாழ்க்கையினின்று‌ விலக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பது‌தெரியவருகிறது.

(இப்போது அத்தடைகளின்றி எங்கும்‌ போய்வரும் வழிவகை
செய்துதந்திருக்கிறது சானிடரி நேப்கின் எனப்படும் அற்புதமான கண்டுபிடிப்பு.)
மேற்சொன்ன குறிப்புகளிலிருந்து அக்கால ஆண்கள் மற்றும் பெண்களின்,
குறிப்பாக அக்காலத் தமிழ்ப் பெண்களின் கடமைகள், அவர்கள் செய்த
தொழில்கள், அவர்கள் மீதிருந்த கட்டுப்பாடுகள் மற்றும் சுதந்திரங்கள்
ஆகியவை வெளிப்படுகின்றன. அவற்றை ஆங்காங்கே தற்காலத்தோடு
ஒப்பிட்டும் வந்துள்ளோம். எண்ணிப்பார்க்க முடியாத அளவில் அவை மாறியுள்ளதை நாம்
காண்கிறோம்.
தொடரும்

பித்தன் வெங்கட்ராஜ்