மகளிருக்கு அதிகமாக பாதுகாப்பு உள்ள பழங்குடியினர் நீலகிரியில் உள்ள கோத்தர் சமூகம் என்பது ஆரோக்கியமான விஷயம் என்று அவர்களை சந்திக்க அந்த கிராமத்துக்கு சென்றோம் .
ஊட்டியில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோலூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கோகால் கிராமத்தினுள் நுழைந்தோம் .
அமைதியான கிராமம் அரசு பஸ் இங்கு வந்து செல்கிறது .
நம்மை இந்த கிராமத்துக்கு அழைத்து சென்ற மதி மாறன் இவர்களின் செல்ல பிள்ளை .
கோத்தர் இன மக்களின் மூத்த பெண் ராஜேஸ்வரி அம்மாவை சந்தித்தோம் .
"எங்க கோத்தர் இன பெண்கள் மிகவும் சிறப்பானவர்கள் அதிலும் பானை தயாரிப்பு என்பது எங்களின் குல தொழில் அதை முழுக்க முழுக்க எங்க பெண்கள் தான் செய்கின்றனர் .
பானை செய்ய எங்க கிராமத்தில் தான் சிறப்பு மண் கிடைக்கும் அதை மிக பக்தியுடன் எடுத்து வந்து உரலில் போட்டு இடித்து தண்ணீர் ஊற்றி பத படுத்தி தயாரிப்போம் .
அதிரசம் மாவு எப்படி இடிப்பாங்களோ அது போல தான் பானை தயாரிப்பு மண் இடித்து ரெடி செய்வோம் என்று கூறும் இவர் தற்போது பானை மட்டுமல்லாமல் விநாயகர் , குதிரை , அரசர் அரசி முகம் , கப் , டம்பளர் என்று தயாரித்து அசத்துகிறார் .
இவர்கள் சாப்பாடு செய்வது பானையில் தான் .
அதை விட எங்க ஐயனுர் அம்மனுக்கு எல்லா வழிபாடு முறைகளும் இந்த பானைகள் மூலம் தான் என்கிறார் ராஜேஸ்வரி.
எங்க பெண்களின் தயாரிப்பான பானை தான் ஒரு குழந்தை பிறந்தவுடன் பெயர் வைப்பது இந்த பானையில் ஆற்று தண்ணீரை எடுத்து வந்து அரும்புல் மூலம் தண்ணீரை குழந்தையின் நெற்றியில் ஊற்றி பெயர் வைக்கிறோம் .
அதே போல ஒருவர் இறந்தவுடன் இந்த பானையில் தண்ணீர் எடுத்து வந்து தலையை கழுவி ஈமை சடங்கு செய்வோம் என்று கூறுகிறார் .
சிலப்பதிகாரத்தில் 'கோ மக்கள் ' என்று பானை தயாரிப்பு செய்பவர்கள் தான் இவர்கள் என்று கூறுவது இந்த கோத்தர் இன மக்களை குறித்து தான் என்கிறார் மதி நம்மிடம் .
ராஜேஸ்வரி தொடர்ந்தார் ,
" எங்க சமுதாயத்தில் பெண்களை உயர்த்தி தான் வைத்துள்ளார்கள்
ஒரு ஆச்சிரியமான விஷயம் சொல்லட்டுமா என்று யத்தனிக்க ..
என்ன சொல்லுங்க? என்றோம் எங்க சமூகத்தில் வரதட்சணை வாங்குவது இல்லை
திருமணம் எங்க இனத்தில் உள்ள ஆண்கள் அவர்கள் விரும்பும் பெண்ணை பெரியோரின் சம்மதத்துடன் வீட்டிற்கு வந்து அந்த காலத்தில் நாலணா காசை பெண் பெற்றோரிடம் கொடுத்து விட்டு பெண்ணின் கழுத்தில் கருப்பு மணி மாலையை அணிவித்து தன் மனைவியாக அழைத்து செல்வார் .அது தான் திருமணம் .இப்பொழுதும் அதே முறை தான் ஒரு வித்தியாசம் நாலணாவிற்கு பதிலாக 500 ரூபாய் கொடுத்து விட்டு பெண்ணை மனைவியாக்கி கொள்கிறார்கள் .
கர்ப்பிணி பெண்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள் எங்க கிராம பெண்கள் .
என்னை போன்ற மூத்த பெண்கள் பச்சை மூலிகை காஷாயம் கொடுத்து பிரசவத்தை நாங்களே பார்த்துவிடுவோம் .இப்பொழுது தான் ஆஸ்பத்திரிக்கு போறாங்க என்கிறார் ராஜேஸ்வரி .
மற்ற ஒரு தகவல் எங்க இன பெண்கள் பத்து வயது அடைந்தவுடன் ஒரு சீர் செய்வது வழக்கம் அதுவும் வயதுக்கு வாராத சிறுமிக்கு ஜாக்கெட் பாவாடை அணிவித்து மாமன் அத்தை மகன் முறையாக பிர்ருர் இலையை கொண்டு தீட்டு செய்து ஒரு ஒத்திகை போல நடைபெறுவது வழக்கம் .
அதே அந்த பெண் வயதுக்கு வந்தால் முறையாக சீர் செய்து சடங்கு செய்வது வழக்கம் .
தீட்டு முடியும் வரை ஊரின் ஒதுக்கு புறத்தில் உள்ள அறையில் இருப்பது சகஜம் .
திருமணத்துக்கு பின் கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை என்றாலும் கணவனை மனைவிக்கு பிடிக்கவில்லை என்றால் மனைவி கணவன் கொடுத்த ஐநூறு ரூபாயை அவர்களின் பெற்றோரிடமிருந்து கணவருக்கு திருப்பி கொடுத்து விட்டால் அதுவே விவகாரத்து ஆகிவிடும் .
இருவரும் பிரிந்து மறுமணம் செய்து கொள்ளலாம்".
மற்ற ஒரு ஆரோக்கியமான விஷயம் கோத்தர்களின் சமுதாயத்தில் இன்றும் உள்ளது இளம் விதவைகளின் மறுமணம் . கணவன் இறந்து சிறிது காலம் கழித்து அந்த பெண் தான் விரும்பும் ஒருவரை மறுமணம் செய்து கொள்ளலாம் .
அதுவும் தங்களின் சமூகத்தில் இருந்து தான் .
தங்கள் இனத்தில் காதலுக்கு மரியாதை கொடுத்தாலும் அதுவே வெளி ஆளாக இருந்தால் தங்கள் இனத்துடனும் கிராமத்தினுள் நுழைய முடியாதாம் .
இதே கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஆஷகி நம்மிடம் பேசினார் ,
" பெண்கள் தின வாழ்த்துக்கள் எங்க கிராமத்திற்கு வந்த விகடகவிக்கு நன்றி எங்க இனத்தின் முக்கிய அடையாளம் மண் பானை மண்ணுக்கு நாங்கள் கொடுக்கும் மரியாதை .
எங்க பெண்கள் தாலியை விட மதித்து முக்கியத்துவம் கொடுப்பது மண்டுவுக்கு தான் என்று ஆச்சிரியப்படுத்த வைத்தார் .
அது என்ன 'மண்டு' என்று கேட்டோம் .
மண்டு என்பது ஒரு பெண் பின் தலையில் தன் சிகையை முடித்து அணிந்து கொள்ளும் சிறிய கொண்டை .
ஒரு பெண் தன் பதினாறு வயதில் ஒரு வகை மூலிகை பச்சை இலையை கூந்தலினுள் வைத்து கொண்டை அணிந்து கொள்வது தான் மண்டு .
பெண்கள் தலை விரித்துவைத்திருக்க கூடாது மண்டு அணிந்தால் அது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்கிறார் .
ஒரு பூசாரி முன் செல்வது என்றாலும் மண்டு அணிந்து தான் செல்ல வேண்டும் அதுவும் பெரியோர் மற்றும் கணவன் முன் கூட இதே பழக்கம் இன்று வரை தொடர்கிறது .
கணவன் மனைவியிடையே 'அன்பு' மட்டும் தான் சிறப்பானது .எந்த கணவனும் தன் மனைவியை அடிமையாக வைப்பது இல்லை . எந்த கொடுமைக்கும் இடமில்லை .
இருவரும் சமம்
மனைவி கணவனுக்கு கொடுக்கும் அனைத்து மரியாதையையும் கொடுப்பது அவசியம் .
அவர் தான் குடும்பத்தில் உயர்ந்தவர் என்கிறார் .
அதே சமயம் விதவை மறுமணம் செய்து வைத்து விடுவது எங்கள் சமூகத்தின் கடமை .
கணவனை இழந்த மனைவி தான் விரும்பினால் நார்மலான பின் தான் விரும்பும் நபரை கணவனாக ஏற்று கொண்டு மறுமணம் செய்து கொள்ளலாம் .
ஒரு விதவை பூவும் பொட்டும் வைத்து கொள்ளலாம் .
எல்லா நல்ல விஷயங்களில் ஒதுக்கி வைப்பது என்பது எங்க சமூகத்தில் இல்லை .
பெண்களின் கொடுமைகளுக்கு எதிரானது எங்க கோத்தர் இனம் .
என்று கூறுகிறார இந்த அழகிய கிராமத்து பெண்.
கோத்தர் கிராமங்கள் நீலகிரியில் சோலூர் கோகால் , குந்தா கோத்தகிரி , திருச்சிகடி , கொல்லிமலை , கூடலூர் கோகால் , கீழ் கோத்தகிரி மற்றும் மேல் கோத்தகிரி என்று ஏழு கோத்தர் கிராமங்கள் பெண்கள் அன்பை தங்களின் சமுதாய சின்னமாக பிரதிபலித்து கொண்டிருக்கிறார்கள் .
இந்த கிராமத்தின் பெண்களின் வேண்டுகோள் தங்களின் தயாரிப்பான பானைகளை ஊட்டி பொட்டானிக்கல் கார்டனில் காட்சி படுத்தி விற்பனை செய்ய மாவட்ட கலெக்டெர் இடம் கொடுத்தால் சிறப்பு என்கிறார்கள் கோரஸாக .
Leave a comment
Upload