தொடர்கள்
தொடர்கள்
பாலைவனப் பூ - வாரிஸ் டயரி -1 குறுந்தொடர் -இந்துமதி கணேஷ் 

20240205184316250.jpg

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதற்கேற்ப பிற விலங்கினைகளை போல் ஆதிமனிதனும் தாய்வழிச் சமூக கட்டமைப்பு முறையிலேயே வாழ்ந்து வந்தான். குழந்தை பிறப்பின் மர்மம் விளங்காத ஆதி மனிதன் பெண் தான் சந்ததிகளை உருவாக்கும் தெய்வம் என்று கருதி அவளை வழிபட தொடங்கினான். எப்போது தனது விந்தணு கலப்பதால் மட்டுமே பெண்ணால் குழந்தை பெற முடிகிறது என்று அறிந்து கொண்டானோ அப்போதே பாலின சமத்துவமின்மை தொடங்கி இருக்க வேண்டும்.

அப்போது தொடங்கிய இந்த சமத்துவமின்மை இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேவேளையில் இன்றும் பல பழங்குடிகளிடம் பெண்ணின் பிறப்புறுப்பை வழிபாடு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். மகா காமாக்யா தேவி கோவில் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

மகளீர் தினத்தை கொண்டாடும் வேளையில் பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பிற்கு எதிராக ஒரு தினம் கொண்டாட படுவது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பிப்ரவரி 6 ஆம் தேதி பல கோடி ஆப்பிரிக்க பெண்களுக்கு மிக முக்கியமான நாள். அன்றைய தினம் தான் சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation) எதிர்ப்பு தினம்.

ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் பெருவாரியாக இந்த பெண் பிறப்புறுப்பு சிதைப்பு நடந்து வருகிறது. கிட்டதட்ட 13 கோடி பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பாலின சமத்துவமின்மை, பெண்களின் பாலுணர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள், தூய்மை, அடக்கம் மற்றும் அழகு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் இந்த நடைமுறை வேரூன்றியுள்ளது . இது பொதுவாக பெண்களால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது, அவர்கள் அதை மரியாதைக்குரிய ஆதாரமாகக் கருதுகிறார்கள், மேலும் தங்கள் மகள்கள் மற்றும் பேத்திகளை வெட்டத் தவறினால் தம் வீட்டுச் சிறுமிகள் சமூக ஒதுக்கீட்டுக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சுகிறார்கள்.

இந்த முறையினை விருத்தசேதனம் என்றும் அழைப்பர். இந்த பெண் பிறப்புறுப்பு சிதைப்பை பற்றி முதல் முதலில் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தியவர் யார் தெரியுமா, அவர் தான் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் வாரிஸ் டைரி. வாரிஸ் என்றால் பாலைவன பூ என்று அர்த்தம், இந்த பேரை தன் அன்னை தனக்கு வைத்ததாக வாரிஸ் கூறுகிறார்.

மிக மகிழ்ச்சியான தினம் என்று நீங்கள் எந்த நாளை கூறுவீர்கள், பிறந்த நாள் அல்லது திருமண நாள் இப்படி ஏதாவது ஒன்றை நாம் கூறலாம். ஆனால் தன்னுடைய அறுவை சிகிச்சைக்கு பிறகு நிம்மதியாக சிறுநீர் கழித்த நாளை தான் வாரிஸ் மிக மகிழ்ச்சியான நாள் என்று கூறுகிறார். சராசரியாக ஒருவர் சிறுநீர் கழிக்க இரண்டு நிமிடங்கள் ஆகுமென்றால் வாரிஸ் போன்ற விருத்தசேதனம் செய்யப்பட பெண்களுக்கு பத்து நிமிடங்களுக்கு மேலும் ஆகும். அதனால் தான் அவருக்கு அந்த அறுவை சிகிச்சை அவ்வளவு நிம்மதியை கொடுத்தது, அதற்கு பின் இருந்த வலியும் வேதனையும் என்ன என்பதை தெரிந்து கொள்ள வாரிஸின் வாழ்க்கைக்குள் நாம் பயணிக்க வேண்டும்.

ஆப்பிரிக்காவில் சோமாலிய பாலைவனத்தில் வாழும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் வாரிஸ் டைரி. ஆடுகள், மாடுகள் மற்றும் ஓட்டங்களை மேய்த்துக் கொண்டு பாலைவனத்தில் தண்ணீருக்காக பல காத தூரம் அலைந்து திரிந்த வாரிஸ் எப்படி பிரபலமான மாடலாக மாறினார் என்பதை தன்னுடைய Desert Flower (தமிழில் பாலைவனப் பூ) என்ற நூல் மூலம் நமக்கு விவரிக்கிறார்.

ஒரு திகில் நாவலுக்கு நிகரான சம்பவங்களுடன் விரிகிறது இவரது வாழ்க்கை. ஒட்டகம் மேய்க்கும் பழங்குடி இனமான இவர்கள் ஒரே இடத்தில் தங்குவதில்லை. தங்களுடைய விலங்குகளை பராமரிக்கவும் தண்ணீர் வேண்டியும் பல இடங்களுக்கு நகர்ந்துகொண்டே இருப்பார்கள். இவர்களின் குடிசைகள் புற்களால் வேயப்பட்டிருக்கும். ஒரு இடத்தைவிட்டு மாறிச்செல்லும்போது குடிசை வேயப்பட்ட புற்கள், குச்சிகளைப் பிரித்துச் சேர்த்துக்கட்டி ஒட்டகத்தில் ஏற்றி வீட்டுடனேயே இடம் மாறி விடுவார்கள். புதிய இடத்தில் வீட்டை அமைத்துக்கொள்வார்கள். விலங்குகளின் பாலை பிரதானமான உணவாக கொள்வார்கள்.

இவர்களின் இனத்தில் ஐந்தில் இருந்து பதினைந்து வயதிற்குள் ஒரு பெண் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்தாக வேண்டும் என்பது நியதி, அப்படி செய்யப்பட்ட பெண்கள் மட்டுமே திருமணத்திற்கு தகுதியானவர்கள் என்பது அந்த இனத்து பெண்களுக்குரிய அடையாளமாகவே பார்க்க படுகிறது.

பொதுவாக பருவம் அடைந்த பெண்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பான உணவுகள், சலுகைகளை கண்டு சின்ன பெண் குழந்தைகளுக்கு தனக்கும் இதெல்லாம் நடக்க வேண்டும் என்ற ஆவல் எழும், அக்காள்களுக்கு தரப்பட்ட உணவு வகைகளையும் சிறப்பு கவனிப்புகளையும் கண்டு வாரிஸ் தனக்கும் விருத்தசேதனம் நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறாள். ஆனால் அக்காளுக்கு என்ன நடக்கிறது என்று பார்த்த பிறகு அவளுக்கு பயம் வந்து விடுகிறது. ஒரு அக்காவை இவ்வாறு இழந்த நிலையில் ஓடவும் ஒளீயவும் முடியாமல் மாட்டிக் கொள்கிறாள் வாரிஸ்.

ஐந்து வயது குழந்தையான வாரிஸிற்கு இந்த கொடூரத்தை அவளது தாயே அழைத்து போய் செய்யச் சொல்கிறார், பஞ்சு மிட்டாய் சாப்பிடும் வயதில் அந்த பிஞ்சுக்கு பிறப்புறுப்பு அறுக்கப்படுகிறது. ஆம், அவளால் விருத்தசேதனத்தில் இருந்து தப்பிக்க இயலவில்லை.

  • தொடரும்