'சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தன் சிறுவை தனில் மேவு பெருமானே...'
'சிறுவாபுரி முருகன், சிறப்பு வாய்ந்தவன் மட்டுமல்ல தன்னை நாடிவரும் பக்தருக்கெல்லாம் வரங்களை வாரிக் கொடுப்பவன். என்று அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்
இத்திருப்புகழில் “அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோளா, வடிவேலா, முருகேசா, பெருமாளே!” என ஒரு வாக்கியமாக அமைவதுபோல் வேறு எந்த ஒரு திருப்புகழிலும் அமையவில்லை.
இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. சிறுவர்கள் (லவ, குசா, பால முருகன்) வந்த இந்த இடம் சிறுவாபுரி (சிறுவர்கள் புரி) என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறுவாபுரி முருகன் கோயில் சென்னையிலிருந்து சுமார் 30-40 கிமீ தொலைவில் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில்,
தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பக்தர்கள் விரும்பியதை வழங்கும் சக்திவாய்ந்த இந்த முருகனை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர். சிந்தையில் சிறுவை முருகனை நினைத்தாலே போதுமாம்..... திருவண்ணாமலையை நினைத் தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும்.
ஸ்தல புராணம்:
திரேதா யுகத்தில் இராமர் அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்டார். அப்போது யாகப் பசுவாக அனுப்ப வேண்டிய குதிரையை ஏவிவிட்டார். அந்தக் குதிரை வால்மீகி முனிவர் ஆசிரமத்திற்கு வர, அங்கு வளர்ந்த இராமரின் பிள்ளைகள் லவனும் குசனும் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டனர். இதனை அறிந்த இராமர் உடனே லட்சுமணனை அழைத்து குதிரையை மீட்டு வரச் சொன்னார். குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை வெல்ல முடியவில்லை. இராமரே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இறுதியாய் லவனும் குசனும் தந்தையென்று அறியாது ஸ்ரீராமரிடமே போர் புரிந்துப் பின்பு பணிந்த தலம், சிறு பிள்ளைகள் இங்குப் போர் தொடுத்ததால் இத்தலம் சிறுவர் பொற் புரி என அழைக்கப்பட்டது. (சிறுவர் என்றால் குழந்தைகள், பொற் புரி என்றால் போர் நடத்துவது என்று தமிழில் பொருள்). முதலில் சிறுவர் அம்பு ஏடு (சண்டைக்காக தங்கள் அம்புகளை எடுத்த குழந்தைகள்). இவ்வாறு சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவரம்பேடு என்று வழங்கப்பட்டது. நாளடைவில் சிறுவா புரி என்று மருவியது.
முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்யச் செல்லும் வழியில் சிறுவாபுரியில் இளைப்பாறிவிட்டுச் சென்றார் என்றும் இந்த ஆலயத்தில் தங்கி அமுது உண்ட இந்திரன் மற்ற தேவர்களுக்கு வீடுபேறு கிடைக்க வேலவன் அருள் புரிந்தார் என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது.
முருகம்மை என்ற முருக பக்தை:
பல நூறு ஆண்டுகளுக்கு முன் முருகம்மை என்ற முருக பக்தர் சிறுவாபுரியில் வாழ்ந்து வந்தார்.அவர் இங்குள்ள முருகப்பெருமானின் தீவிர பக்தராக இருந்தார். இந்த அம்மையார் எப்போதும் முருகன் நாமத்தையே உச்சரித்து வந்தார். முருகனின் தீவிர பக்தராக இருப்பது பிடிக்காத இவரது கணவர், ஒருநாள் கோபத்தில் இவரின் கரத்தை துண்டித்துவிட்டார். அப்படியொரு நிலையிலும் முருகப்பெருமானையே நினைந்து, அவரின் திருநாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் பக்தியில் மகிழ்ந்த முருகப்பெருமான், அவருக்குக் காட்சி அளித்து, வெட்டப்பட்ட கைகள் சுவடே இல்லாமல் அப்படியே உடலுடன் இணைந்தது. இந்த அற்புதம் இந்தத் தலத்தில்தான் நடந்தது. இதனை தவத்திரு முருகதாச சுவாமிகள் பாடல் மூலமாக எழுதியுள்ளார்.
ஸ்தல அமைப்பு:
சிறுவாபுரி முருகன் கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோவில். இந்த கோயிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டதாக உள்ளது. உயரமான கொடிமரம், அதற்கு முன்பாக மரகதப் பச்சை மயில் வீற்றிருக்கிறது. இதைப் போன்ற பச்சைமயில் அமைப்பு வேறெங்கும் காண முடியாது. தென்மேற்கு மூலையில் மரகதக் கல்லில் சூரியன் சந்நிதியும் கிழக்கே இராஜ கணபதி மரகதக் கல்லில் காட்சி அளிக்கும் சந்நிதியும் உள்ளன. மூலவருக்கு தெற்குப்பகுதியில் அண்ணாமலையும், உண்ணாமலையும் எழுந்தருளியுள்ள நிலையில், அடுத்து வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் காட்சி தருகிறார். இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. நீண்ட காலம் திருமணம் நடக்காதவர்கள் இந்தச் சந்நிதியில் வந்து பூஜைகளும் வழிபாடுகளும் பரிகாரங்களும் செய்தால் விரைவில் திருமணம் கைகூடி வரும். கருவறையில், மூலவர் பாலசுப்பிரமணியர் நான்கரை அடி உயரத்தில், நின்ற கோலத்தில் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க, பின் வலக்கரம் ஜெபமாலை ஏந்தியிருக்க, முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோயிலின் கருவறையை நோக்கி அருணகிரிநாதர் உருவச் சிலை உள்ளது. அருணகிரிநாதர் பலமுறை இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார். மற்றும், முனீஸ்வரர் சந்நிதியும் அபிஷேக மண்டபமும் உள்ளது. பைரவர், சண்டிகேஸ்வரர் ஆகியோர்க்கும் தனிச்சன்னிதிகளும் ஈசான்ய மூலையில் நவகிரகங்களும் அமைந்துள்ளன. ஆலயத்தின் பின்புறம் அன்னதானக்கூடமும் ஸ்தல தீர்த்தமான ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்குளமும் உள்ளன.
கோயிலைச் சுற்றி வரும் வழியில் ஸ்ரீ மரகத விநாயகர் சந்நிதியும், அருகில் ஸ்தல விருட்சமான மகிழம்பூ மரமும் உள்ளன.
ஸ்தல சிறப்பு:
இந்த கோயிலில் உள்ள அனைத்து விக்கிரகங்களும் – மூலவர் பாலசுப்பிரமணியர் தவிர அனைத்து விக்கிரகங்களும் பச்சைக்கல்லால் (மரகதம்) ஆனவை.
வள்ளியை திருமணம் செய்த முருகன் இங்கே வந்து, இருவரும் திருமணக்கோலத்துடன் கைகோர்த்து நின்ற நிலையில் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. வேறு எங்கும் இந்த காட்சியைக் காண இயலாது. வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள் தொடர்ந்து ஆறு செவ்வாய்க் கிழமை வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம். சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்தால் ‘சொந்த வீடு’ கனவு நனவாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்து உள்ளது. இதனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக இங்குள்ள முருகனை நாடி வரும் பக்தர்கள் கூட்டம்தான் அதிகமாகக் காணப்படுகிறது.
திருவிழாக்கள்:
சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி பூஜை, தீபாவளி, சூர சம்ஹாரம், நவராத்திரி, கார்த்திகை தீபம் மார்கழி பூஜை. தை பொங்கல் திருவிழா, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன் :
சிறுவாபுரி முருகனை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்தக் கோயிலுக்கு ஆறு செவ்வாய்க்கிழமைகள் வந்து முருகனை மனமுருக வேண்டிக் கொண்டால் திருமணத்தடை, பிள்ளைப்பேறு, ஆரோக்கியம் மற்றும் அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்.
மற்றும் நாம் விரும்பிய அனைத்தையும் ஈடேற்றித் தருவார் என்பது ஐதீகம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
ஒவ்வொரு மாதமும் விசாகம், பௌர்ணமி, ஷஷ்டி, வாராவாரம் செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய நாள்களில் சிறப்பான வழிபாடுகளும் நடக்கும். செவ்வாய்க் கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் ஆலயம் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சென்னைக்கு வடக்கே 34 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் கும்முடிபூண்டி ரயில் மார்க்கத்தில் 39 கிலோ மீட்டர் தூரத்திலும், கவரப்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது சிறுவாபுரி. CMBT, பொன்னேரி, ரெட்ஹில்ஸ் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகியவற்றிலிருந்து உள்ளூர் பேருந்துகள் உள்ளன.
விரும்பியதை வழங்கும் சிறுவாபுரி முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
Leave a comment
Upload