தொடர்கள்
கவர் ஸ்டோரி
பாராளுமன்றத் தேர்தல் திணறும் அரசியல் கட்சிகள் -விகடகவியார்

20240116085537295.png

திமுக பாராளுமன்றத் தேர்தல் பணியில் இப்போதைக்கு முன்னிலையில் இருக்கிறது என்று சொன்னாலும் வேட்பாளர் தேர்வு தொகுதி பங்கீடு இவற்றில் முடிவெடுக்க முடியாமல் கொஞ்சம் குழம்பி தான் போய்க் கொண்டிருக்கிறது. தொகுதி பங்கீடு பொருத்தவரை கூட்டணிக் கட்சிகள் எல்லாவற்றுடன் அந்தக் குழு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. கூட்டணி கட்சிகள் இந்த முறை காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு தொகுதி வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். எங்களுக்கு ராஜ்ஜிய சபா சீட் வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கோரிக்கை வைத்திருக்கிறது. திமுக பொறுத்த வரை இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 9 இடங்களில் போட்டியிட்டது. அந்த ஒன்பது தொகுதிகளில் மீண்டும் போட்டியிட தன் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறது. காங்கிரசுக்கு இந்த முறை தொகுதிகள் குறைக்க விரும்புகிறது திமுக. குறிப்பாக திருச்சி மற்றும் கரூர் சிவகங்கை ஆகிய தொகுதிகளை அவர்களிடமிருந்து வாங்கி அந்தத் தொகுதியில் திமுக போட்டியிட விரும்புகிறது.

திருச்சியில் அமைச்சர் நேரு மகன் சிவகங்கையில் அமைச்சர் ரகுபதி மகன் ஆகியோர் போட்டியிட தலைமைக்கு அழுத்தம் தருகிறார்கள். திமுகவை பொருத்தவரை கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இரண்டு மூன்று நாளில் பேசி உங்களுக்கான தொகுதி இதுதான் என்று சொல்லிவிடுவார் என்கிறது திமுக வட்டாரம்.

திமுக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம் 19-ஆம் தேதி முதல் அறிவாலயத்தில் கிடைக்கும் என்று முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. எனவே திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் .

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தொகுதி குறைத்தால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். திருச்சியில் திருநாவுக்கரசர் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறார்கள்.

கரூர் மற்றும் சிவகங்கை தொகுதியில் அந்த தொகுதி எம்பிக்களான ஜோதிமணி மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று அந்த மாவட்ட காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடுக்கு இறுதி வடிவம் தருவார் என்கிறது சத்தியமூர்த்தி பவன் வட்டாரம்.

அதிமுகவை பொறுத்தவரை பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. அதிமுகவும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது. ஆனால், இதுவரை யாரும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவிற்கு வரவில்லை.

20240116085705808.jpg

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து கூட்டணி பற்றி தான் பேசினார். ஆனால் ராமதாஸ் சண்முகம் சந்திப்பு பற்றிய புகைப்படம் வெளியிடப்பட்டதே தவிர கூட்டணி பற்றி பேசினார்கள் என்று இரண்டு கட்சியும் எதுவும் சொல்லவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக பாமக கூட்டணி என்பது வதந்தி நம்பாதீர்கள் என்று பேட்டி தருகிறார். அதற்கு காரணம் அவர் பாரதிய ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த மாதம் ஐந்தாம் தேதி டெல்லியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ்,ஜி.கே.வாசன் சந்திப்பு நடந்தது. அப்போது ஜி.கே.வாசன் பாரதிய ஜனதா கூட்டணிக்கு வாருங்கள் உங்களுக்கு கேட்ட தொகுதி கிடைக்கும் மத்தியில் அமைச்சர் பதவிக்கு உத்தரவாதம் என்று சொன்னார். அப்போது அன்புமணி ராமதாஸ் இதை உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னிடம் நேரில் சொல்லட்டும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதே சமயம் டாக்டர் ராமதாஸ் அதிமுக கூட்டணி என்பது சட்டசபை தேர்தலுக்கும் சேர்த்து தான் பேசுகிறார்கள். அவர்களோடு கூட்டணி சேர்ந்தால் தான் நம்மை நம்பி வந்து இருக்கும் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவி என்பதற்காக நம் கட்சியை நாம் பலிக்கடா கொடுக்கக்கூடாது என்று வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்.

20240116085919944.jpg

தேமுதிகவை பொறுத்தவரை அவர்கள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் புது பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 14 தொகுதிகள் ஒரு ராஜ்ய சபா சீட் யார் தருகிறார்களோ அவர்களிடம் கூட்டணி என்று சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு நான் அப்படியெல்லாம் பேசவில்லை இதெல்லாம் மாவட்ட செயலாளர்கள் பேசியது என்று மறுத்துவிட்டு கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

பாரதிய ஜனதாவை பொருத்தவரை அண்ணாமலை பிரதமர் மோடியை வேட்பாளர் என்று யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என்று சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை யாரும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பற்றி பேச வரவில்லை சிறு சிறு லெட்டர் பேடு கட்சிகள் மட்டும் அண்ணாமலை சுற்றி வலம் வருகின்றன. பாரதிய ஜனதாவும் 40 தொகுதிகளிலும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை நியமித்து தேர்தல் பணியை செய்து வருகிறது.

சென்ற வாரம் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் நட்டா சென்னை வந்தார். அப்போது தேமுதிக பாமக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சிறு சிறு கட்சிகள் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்துவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நட்சத்திர ஹோட்டல் கூட்டணி பற்றி பேசுவார் என்ற ப்ரோக்கிராம் நடக்கவில்லை.பொதுக் கூட்டத்திற்கு வந்த நட்டா அந்தக் கூட்டத்தில் பேசிவிட்டு நேராக விமான நிலையம் போய் டெல்லி போய்விட்டார். இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் காரணம் அண்ணாமலை தான் என்று பாரதிய ஜனதாவின் ஒரு பிரிவினர் குற்றம் சுமத்துகிறார்கள்.

அண்ணாமலையின் தேவையற்ற பேச்சால் இப்போது கூட்டணி வேண்டவே வேண்டாம் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறார்கள். இதனால் தான் அமித்ஷா சென்னை வருவதை தவிர்க்கிறார். அண்ணாமலையையும் அவர் சந்திப்பதில்லை.

டெல்லி தலைமை தேர்தல் கூட்டணி மற்றும் தமிழக விவகாரங்களை நிர்மலா சீதாராமனை கவனிக்க சொல்லிவிட்டது என்கிறார்கள்.

அண்ணாமலையின் செயல்பாட்டால் கூட்டணி யாரும் வராததால் என் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி என்று டெல்லியில் பேசி அமைச்சர் முருகன் மீண்டும் ராஜ்யசபா வாய்ப்பை பிரதமரிடம் பேசி வாங்கினார் என்கிறார்கள்.

தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக பிரதமர் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து பல நல திட்டங்களை அறிவித்தார். ஆனால் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு பாரதிய ஜனதாவை பின்னுக்கு தள்ளிவிட்டார் என்பதுதான் பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து சொல்லி வரும் குற்றச்சாட்டு.

இப்போது கூட பாரதிய ஜனதாவில் போட்டி போட ஆசைப்படும் வேட்பாளர்கள் கட்சி நமக்கு கணிசமாக தேர்தல் செலவுக்கு பணம் தரும் அதை வைத்து நமது வாழ்வாதாரத்தை வசதி பண்ணிக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் தான் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறார்கள்.

20240116090120341.jpeg

டிடிவி தினகரன் ,ஓபிஎஸ் இருவரும் டெல்லி தலைமையிடம் நேரடி தொடர்பில் பாராளுமன்ற தேர்தல் பற்றி பேசி வருகிறார்கள் என்கிறார்கள். இவர்களால் நமக்கு என்ன லாபம் என்று யோசிக்கிறது டெல்லி பாரதிய ஜனதா.

எது எப்படியோ …இந்த மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகள் பற்றிய ஒரு தெளிவு நிச்சயம் வந்துவிடும் ,இப்போதைக்கு அதில் முதலிடத்தில் இருப்பது திமுக.