பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இதை சட்டபூர்வமாக அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வைத்து சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா என்ற அமைப்புகள் டெல்லி சலோ என்ற போராட்டத்தை அறிவித்தது.
முதலில் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால் பிப்ரவரி 13 முதல் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டத்தின் போது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும் போராட்டத்தை கைவிட வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் தான் நாங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டோம். அவர்கள் செய்து தருகிறோம் என்று சொன்னதைத்தான் நாங்கள் கேட்கிறோம். ஆனால், இந்த அரசாங்கம் செய்ய மறுக்கிறது என்பது அவர்கள் குற்றச்சாட்டு.
வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த நாங்கள் கேட்கிறோம். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு குறைந்தபட்ச ஆதரவு விலையை அங்கீகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. அதைத்தான் நாங்கள் நிறைவேற்ற கோரிக்கை வைக்கிறோம். அவரது பரிந்துரையை இந்த அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டு அவருக்கு பாரத் ரத்னா பட்டம் தருவதால் என்ன பயன் என்பது இவர்கள் கேள்வி.
இந்தியா முழுவதும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் அதை சாலையில் கொட்டி விட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.
இந்த முறை விவசாயிகள் தங்கள் கோரிக்கைக்கு ஒரு முடிவு வர வேண்டும் என்ற தீர்மானத்துடன் டெல்லியை நோக்கி விவசாயிகள் திரண்ட வண்ணம் இருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டம் அறிவித்ததும் டெல்லி மாநகர எல்லையில் அவர்கள் உள்ளே நுழைய விடாதபடி பாதுகாப்பை அதிகமாக்கியது டெல்லி போலீஸ்.
ஆயுதம் ஏந்திய காவலர்கள் ஆணி படுக்கைகள் பாதையில் விரித்து அவர்கள் வாகனத்தை உள்ளே நுழைவிடாமல் தடுப்பதற்கு எல்லா முயற்சிகளையும் டெல்லி காவல்துறை செய்து வருகிறது. அதையும் மீறி உள்ளே நுழைந்தவர்களை தண்ணீர் பீச்சி அடித்து ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை தடுக்க பார்க்கிறது. துணை ராணுவமும் அழைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர டெல்லி மாநகர் முழுவதும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் ஆறு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் உடைமைகளுடன் டிராக்டரில் டெல்லிக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். டெல்லி காவல்துறை குறைந்தபட்சம் 20 ஆயிரம் டிராக்டர்கள் வரும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். இது தவிர ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதை தடுப்பதற்காக அந்த ட்ரோன்களை காற்றாடி விட்டு திசை திருப்பும் வேலையிலும் பஞ்சாப் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகள் தரப்பு சொல்வது இதுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி எல்லையில் தங்கிய நாங்கள் போராட்டம் நடத்திய போது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தான் வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மத்திய அமைச்சர் விவசாயிகள் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் தந்தார். எம்.எஸ். சுவாமிநாதன் விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்காதீர்கள் என்றார். ஆனால் இப்போது இந்த அரசு அதைத்தான் செய்கிறது என்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்தை சமூக வலைத்தளம் மூலம் ஆதரவு பிரச்சாரம் நடத்துவதை தடுப்பதற்காக அரியானா மாநிலத்தை சுற்றியுள்ள ஏழு நகரங்களில் இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. இப்போது இவர்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, மம்தா பானர்ஜி ஆகியோர் ஆதரவு குரல் தரத் தொடங்கி இருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா விவசாயிகள் போராட்டத்தை ஆம் ஆத்மி அமலாக்கத்துறை சோதனை தவிர்ப்பதற்காக அரசியல் ஆக்குகிறது. தவிர காலிஸ்தான் தீவிரவாதிகள் இவர்களுக்கு நிதி உதவி செய்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள்.
இப்போது விவசாய அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முன் வந்திருக்கிறது. பாரதிய ஜனதாவின் வேளாண் சட்டம் ரத்து என்ற கோபத்தை அவர்கள் மேல்காட்டாமல் விவசாயிகள் பிரச்சனையை அணுக வேண்டும் என்பதுதான் விவசாயிகள் கோரிக்கை.
Leave a comment
Upload