தொடர்கள்
கதை
மனிதன் நினைப்பதுண்டு-கேபியெஸ்.

20240109223330268.jpeg

விழித்திருக்கிறேனா அல்லது தூங்கிக் கொண்டிருக்கிறேனா என்று தெரியாத ஒரு நிலை. என் தலை இருக்கும் இடத்தில் ஒரு பாறாங்கல் இருக்கிறதோ என்ற ஓர் உணர்வு.இன்னும் விடியவில்லை. சட்டென்று எதுவும் எனக்கு நினைவில்லாதது போல ஒரு பிரமை. நான் எப்போதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுபவன். இப்பவும் ஏறக்குறைய அதே நேரம்தான். ஆனால் இன்று வழக்கம் போல என் நடைப்பயிற்சிக்கு போக முடியுமா என்று தெரியவில்லை.
தினமும் காலை நாலு மணிக்கு எழுந்து விடுவேன். என் அருமை மனைவி உமா முந்தைய நாள் இரவே காப்பி டிகாஷன் போட்டு விட்டு தான் தூங்கப் போவாள். அவளை தொந்தரவு செய்யாமல் சமையலறை சென்று ஓர் அரை டம்ளர் காபி குடித்துவிட்டு , ஷார்ட்ஸ், டீ சர்ட்,ஷூ சகீதம் நடை பயிற்சிக்கு கிளம்பி விடுவேன்.
எனக்கு 70 வயது ஆகிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். உமாவுக்கு 68 வயது ஆகிறது என்பதை அவளைத் தவிர மற்ற எல்லோரும் நம்புவார்கள். நாங்கள் இன்றும் காதல் ஜோடிகள் தான். 45 வருட திருமண வாழ்க்கை. மகனும் மருமகளும் எங்களுடன் சேர்ந்து வசிப்பதால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
உமா ஒரு அதிசய பிறவி. பாரதி பாடியது போல உமா எனக்கு நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், அன்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகியாய், எல்லாவற்றிற்கும் மேல் என் ஆருயிர் மனைவியாய் கடந்த 45 வருடங்களாக என்னுட னேயே பயணிக்கிறாள்.
கட்டிலிலேயே எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இன்று நடை பயிற்சி வேண்டாம் என்று முடிவு செய்தேன்.ஏதோ நடக்க கூடாத ஒன்று நடக்கப் போகிறதோ? அல்லது நடந்தே விட்டதோ? கட்டிலில் உமா தூங்கிக் கொண்டிருப்பாள் என்ற எண்ணத்துடன் திரும்பிப் பார்த்தேன். உமா அங்கே இல்லை. என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. நேற்று மூட்டிய ஹோமத்தின் புகை வீடு முழுவதும் பரவி இருந்தது. நேற்று என்ன நடந்தது? என் உமாவிற்கு என்ன ஆயிற்று? அரசல் புரசலாக, அங்கும் இங்குமாக மின்னல் போல சில காட்சிகள் பட்டும் படாமல் நினைவில் தோன்றி மறைந்தன.
உமா எங்கே இருக்கிறாள்?(இருக்கிறாளா?) பயம் அடிவயிற்றை கலக்கியது. அறையை விட்டு வெளியே வந்தால் மங்கலான நைட் பல்பு வெளிச்சத்தில் சமையலறை சுத்தமாக துடைக்கப்பட்டு காலி பாத்திரங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தன. முந்தைய நாள் இரவே எனக்காக தயாராகும் காபி டிகாஷன் அங்கே இல்லை. உமாவின் சுவடும் இல்லை.
இந்த இடத்திலேயே என்னை அறியாமல் சரிந்து உட்கார்ந்தேன். என்னை மன்னித்து விடு உமா. தயவுசெய்து திரும்பி வா. நீ இல்லாமல் நான் எப்படி வாழ முடியும் உமா?
"இன்னைக்கு உங்களுக்கு பிடிச்ச சுண்டைக்காய் வத்தக்குழம்பு வைக்க போறேன்.. காலையில் வாக்கிங் போகும்போது காது இரண்டிலும் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள்.. பனி அதிகமாக இருக்குது.. இந்த கலர் டி-ஷர்டில் நீங்க ரொம்ப எடுப்பா இருக்கீங்க.. தலைவலின்னு சொன்னிங்களே இந்தாங்க,சுடச்சுட இந்த காப்பியை குடியுங்க" திரும்பத் திரும்ப உமாவின் குரல் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது...
உமாவுக்கு என்று நான் இதுவரையும் பெரிதாக எதையும் செய்யவில்லை. பொதுவாக ரிட்டையர் ஆகிவிட்டால் வீட்டில் மரியாதை குறைந்து போவது இயல்புதான். ஆனால் என் வீட்டில் இது தலைகீழ். எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடக்கூடாது என்பதில் அவள் தனி அக்கறை எடுத்துக் கொண்டாள்.
நான் உமாவுக்காக எவ்வளவோ செய்திருக்கலாமே ஏன் செய்யவில்லை? அவளுக்கும் வயதாகிக் கொண்டே வருவதை நான் ஏன் உணரவில்லை?
"உமா நான் இரவு வர லேட் ஆகும், நண்பர்களுடன் 'வெளியே'செல்கிறேன் என்று சொன்னவுடன் அவள் முகத்தில் கவலை ரேகைகள் உடனடியாக பரவும். சரி, ராத்திரிக்கு என்ன டிபன் பண்ணி வைக்கணும்?" என் முகத்தை கவலையுடன் பார்ப்பாள். இரவு படுக்கும்போது "ஏன் உமா ரொம்ப சோர்வாக இருக்கே?" என்று கேட்கும்போது மட்டும் "இரண்டு நாளா ஒரே பட படப்பாக இருக்கு" என்று சொல்வாள். 'சரி நாளைக்கு காலை டாக்டரை பார்ப்போம்' என்று சொல்லிவிட்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் தூங்கி விடுவேன். தன் உடல் உபாதைகளை அவள் என்றுமே பெரிதுபடுத்தியதும் இல்லை.நானும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. உமாவை அவ்வப்போது ஒரு நல்ல டாக்டரிடம் காண்பிக்காமல் விட்ட என்னை விட ஒரு சுயநலவாதியை எங்குமே பார்க்க முடியாது.
அவள் என் மேல் எடுத்துக் கொண்ட அக்கறையை, நான் ஏன் அவள் மீது எடுத்துக் கொள்ளவில்லை? என் மனைவி மேல் எனக்கு காதல் கடலளவு உண்டு. என்றாலும் எல்லாம் சரியாகிவிடும் என்ற என் எண்ணத்திற்கு காரணம் அலட்சியமா? இல்லை சோம்பேறித்தனமா? இல்லை என் சுயநலமா?
சமையலறையிலிருந்துஎழுந்து மெல்ல ஹாலுக்கு வந்தேன். எனக்கு மிகவும் நெருக்கமான சொந்தக்காரர்கள் ஆங்காங்கே தரையிலும் சோபாவிலும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். என் மகன் அறையினுள் எட்டிப் பார்த்தேன். மகனும் மருமகளும் அடித்துப் போட்டார்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கேயும் என் உமா இல்லை.
திரும்பவும் உமாவின் நினைவு என்னை ஆட்கொண்டது.இரண்டு நாட்கள் முன்பு கூட உமா என்னிடம்"ஏங்க என்னோட இடது கை முழுவதும் பயங்கரமா வலிக்குது" என்று சொன்னபோது நான் "தைலம் தேச்சு விடட்டுமா? ரொம்ப வலியாக இருந்தால் டாக்டர் கிட்ட போகலாம்" என்று சொன்னேன். அதன் பின் உமாவும் அதைப்பற்றி பேசவில்லை. நானும் அப்போதே ஏன் மறந்து போனேன்?
நான் வீட்டிற்காக என்னதான் செய்தேன்? காலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு திரும்பி வரும்போது பால் வாங்கி வருவது என் வேலை. சில சமயம் மளிகை சாமான்கள் அல்லது சுவாமிக்கு புஷ்பங்கள். என்னுடைய வேலை காலை ஏழு மணிக்குள் முடிந்துவிடும்.வே ளா வேளைக்கு காப்பி, டிபன், மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு சிற்றுண்டி என்று எல்லாம் உமாவின் உழைப்பில் அந்தந்த நேரத்தில் சாப்பிடும் மேஜையில் அணிவகுக்கும். எனக்கு எந்த வேலையும் கிடையாது. காலை 8 மணியிலிருந்து அலைபேசியில் பேசுவது, வாட்ஸ் அப், முகநூல், தொலைக்காட்சியில் செய்திகள், கிரிக்கெட் மேட்ச் இவற்றில் மூழ்கி இரவு 8 மணிக்கு தூங்கப் போவதையே வழக்கமாக்கி கொண்டு விட்டேன்.
உறவுகளுடன் ஒட்ட வேண்டும். பொறுப்புகளை சுமக்க வேண்டும். மற்றவர் இன்ப துன்பங்களில் பங்கு பெற வேண்டும். முக்கியமாக மனைவியின் உணர்ச்சிகளுக்கு மரியாதை தர வேண்டும். அவளது ஆரோக்கியத்தில் உண்மையான அக்கறை செலுத்த வேண்டும். புதிய மனிதனாகப் பிறக்க வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?
எப்போதோ செய்ய ஆரம்பித்து இருக்க வேண்டும். மீண்டும் துவண்டு சரிந்து உட்கார்ந்தேன்.
அப்போது என் மகனின் அறைக் கதவு மெல்லத் திறந்தது. அழுதழுது அவன் கண்கள் சிவந்து இருந்தன. மீசையை மழித்திருந்த அவனை அந்த மங்கிய ஒளியில் பார்த்த போது எதுவும் புரியவில்லை.
"அம்மா அம்மா" என்று கூப்பிடாடபடி வெளியே வந்தான். எப்படி ஆறுதல் கூறப் போகிறேன் என்று எண்ணியபடி மெல்ல அவன் பின்னால் சென்றேன் அப்போது யாரோ வீட்டிற்குள் நுழையும் காலடி ஓசை கேட்டது கையில் இரண்டு பால் பாக்கெட்டுகளுடன் என் உமா அழுது வீங்கிய கண்களுடன் மகனை கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாலள். என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை நான் அனுபவித்ததே இல்லை.
உமா உயிரோடுதான் இருக்கிறாள். அது போதும் எனக்கு.
"ஏம்மா என்ன எழுப்ப வேண்டியதுதானே" என்றான் மகன்.

உமா அழுதுகொண்டே" அவர் இருந்தவரை நான் ஒரு நாள் கூட பால் வாங்கப் போனதில்லை இப்ப என் நிலைமையை பார்த்தியா"
" நீ கவலைப்படாம இரும்மா,அப்பா இப்படி திடீர்னு நம்மளையெல்லாம் விட்டுவிட்டு போவார் என்று யாராவது நினைச்சோமா? அப்பா எப்பவும் நம்ம கூடவே தான் இருக்கார்னு நினைச்சுக்கோ. நான் கடைசி வரைக்கும் உனக்கு எந்த கஷ்டமும் வராம பாத்துப்பேன் இது சத்தியம்மா"
மகன் பேசுவதை கேட்க ஆறுதலாக இருந்தது. ஏதோ ஒரு விதத்தில் நான் உமாவுக்கு ஒரு உதவி செய்திருக்கிறேன்.
உமா வாழ வேண்டியவள்... சுதந்திரமாக... சௌகரியமாக...