காலை நேரம். பள்ளி வாகனங்களும், வேலைக்குச் செல்வோரும் வண்டியில் சர் புர் என்று ஓசை எழுப்பிக் கொண்டு, அடுத்தவரை பற்றிய பிரஞ்ஞை எதுவுமில்லாமல் பரபரத்தனர். நேரத்திற்கு சென்று விட வேண்டும் என்ற அவசரம் மட்டுமே எல்லாரிடமும் இருந்தது.
மாவட்ட ஆட்சியர் என்ற பெயர்ப் பலகை தாங்கிய கார் ஒன்று சிக்னலில் வந்து நின்றது. அன்று காலை 10 மணிக்கு நகரிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஆட்சியர் தான் அந்த வண்டியில் சென்று கொண்டு இருந்தார்.
சிக்னல் கடந்ததும் காரை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் ஆணையிட்டார். "சரி சார்", என்று சொல்லிவிட்டு சிக்னல் தாண்டி வந்து ஓரத்தில் நிறுத்தினார் ஓட்டுநர். இறங்கி சிறிது நடந்து, அந்த பேருந்து நிறுத்தத்தை அடைந்தார் ஆட்சியர். அங்கே இருந்த உடைந்த சிமெண்ட் பெஞ்சை பார்த்தார்; அதன் மேல் அமர்ந்தார். கண்ணை மூடி யோசித்தார். அவருடைய மனம் பல சிந்தனைகளை அந்த ஒரு நொடியில் நினைவூட்டியது. வலிகள் இருந்தாலும், அது தேவையாக இருந்தது அப்போது.
அவருக்கு ஆறு வயதாகும் போது நடந்த சம்பவம். ஊரில் நடந்த தீ விபத்தொன்றில் இவனை காப்பாற்றுவதற்காக வந்த பெற்றோர் இருவரும் இறந்து போயினர். பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் இவனை பராமரித்து வந்தனர். அப்போது சென்னையில் இருந்து வந்த உறவினர் ஒருவர்,”நான் பார்த்துக்கிறேன் இவனை”, என்று அழைத்துச் சென்றார். சில உடைகளும் பாதி எரிந்த நிலையில் உள்ள ஒரு போட்டோவும் தவிர எதுவும் அந்த விபத்தில் மிஞ்சவில்லை; அதை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த மாமாவோடு சென்னைக்கு வந்தான். அத்தை அவனை வேண்டா வெறுப்பாக வரவேற்று சாப்பாடு போட்டார். ஒரு வாரம் அங்கேயே இருந்தான் அத்தை அடிக்கடி மாமாவிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்.எதற்காக சண்டை என்று இவனுக்கு எதுவுமே புரியவில்லை. சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவான் இல்லை என்றால் பேசாமல் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பசித்தால் கூட கேட்க பயம் எங்கே அத்தை திட்டுவார்களோ என்று . திடீரென்று ஒரு நாள் மாமா அவனை "பையை எடுத்துக்கோ, கொஞ்சம் வெளியே போகலாம்", என்றார். . “சரி மாமா வாரேன்”, என்று அவனும் உடன் சென்றான்
அவருடைய நண்பனின் இரும்பு பட்டறையில் வேலை செய்வதற்கு அழைத்துச் சென்றார். அங்கேயே தங்கும் பையன்களுடன் இவனும் இருக்கட்டும் என்று முதலாளி சொன்னார். மாமா தன்னுடைய வீட்டு முகவரியை ஒரு அட்டையில் எழுதி அவனுடைய அப்பா, அம்மா போட்டோவில் சேர்த்து வைத்துக் கொடுத்தார். ஒரு வாரம் அங்கு வேலை பார்த்தான். ரொம்ப கடினமாக இருந்தது. ஓய்வே இல்லாமல், “அதை எடு, இதை எடு இதை செய், அதை செய் “, என்று முதலாளியும், கூட வேலை செய்பவர்களும் இவனை ஏவிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் முடியாமல் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தான். தன்னுடைய சிறிய பையை எடுத்துக் கொண்டு, அங்கே இருந்து ஓடினான். அதற்கு மேல் ஓட முடியவில்லை.
ஒரு பேருந்து நிறுத்தத்தில் படுத்து விட்டான். கண் விழித்து பார்த்தபோது அது ஒரு பேருந்து நிறுத்தம் என்று புரிந்தது. இரண்டு நாட்களாக அங்கேயே இருந்தான். எழுவான் சிறிது நடப்பான், மறுபடியும் படுப்பான்.
மூன்றாம் நாள் காலையில் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. அங்கு நின்றிருந்தவர்கள் யாருக்கும் இவனை கவனிக்க நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை.
அப்பொழுது ஒருவர் சைக்கிளில் வந்தார். அங்கேயே ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் வந்தவர் "என்னப்பா யார் நீ, இங்கே என்ன பண்ற", என்று கேட்டார். பிறகு எதையோ யோசித்தவராய், "சாப்பிட்டாயா? ", என்று கேட்டார். இல்லை என்று தலையசைத்தான். உடனே அருகில் இருந்த கடையில் இட்லி பொட்டலம் வாங்கி கொடுத்தார். அவன் இரண்டு நாளாய் சாப்பிடாமல் இருந்ததால் இது தேவாமிர்தமாய் இருந்தது. சாப்பிட்ட பின் தான் கண்கள் பளிச்சென தெரிந்தது.
"இப்போ சொல்லு ,இங்க என்ன பண்ற", என்றார். அவன் அழுது கொண்டே நடந்துவற்றை சொன்னான். "சரி என் கூட வா , நான் உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்", என்றார். சிறிது தயங்கியவன் பிறகு சரி என்று தலை ஆட்டினான்.
"வா சைக்கிள்ல ஏறு", என்றார் . அவன் சைக்கிளில் ஏறும் போது தான் கவனித்தான். அவருக்கு ஒரு கை மட்டும் தான் இருந்தது. அவனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இலாவகமாக சைக்கிளை ஓட்டிச் சென்றார். சீரான வேகத்தில் பதட்டமின்றி ஓட்டினார். அவன் பிரமிப்பில் வாயை திறந்தவன் மூடவே இல்லை.
ஒரு சிறிய வீட்டின் முன் சென்று நிறுத்தினார். உள்ளே கூப்பிட்டுச் சென்று ஒரு பெண்மணியிடம் அறிமுகப்படுத்தினார். "பஸ்டாண்டில் படுத்திருந்தான் இரண்டு நாளா, இனிமே இங்கேதான் நம்ம கூட தான் இருக்கப் போறான்",என்றார். "சரிங்க நம்ம ரெண்டு பிள்ளைங்களோட சேர்த்து இவனையும் பாத்துக்குவோம்", என்றார் அந்த அம்மா. “வா தம்பி நாங்க நல்லா பார்த்துகிறோம்”, என்று முக மலர்ச்சியோடு சொன்னது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
சாயங்காலம் பள்ளிக்கூடத்தில் இருந்து ஐந்தாவது படிக்கும் சிறுமியும் இரண்டாவது படிக்கும் சிறுவனும் வந்தனர். அம்மா," இவனும் உங்க தம்பிதான் நம்ம கூட தான் இருக்கப் போறான் உங்க கூட தான் படிக்கப் போறான்", என்றார். பிள்ளைகள் சந்தோஷமாக தலையசைத்தனர். அன்றிலிருந்து அவனும் அந்த குடும்பத்தில் ஒருவன் ஆனான்.
தன்னுடைய உடைமைகளில் ஒன்றான அந்த புகைப்படத்தை எடுத்துக் காண்பித்தான். எல்லோரிடமும் தன்னுடைய கதையை கூறினான். அம்மாவும் அக்காவும் “நாங்க இருக்கோம் பா , கவலை படாதே”, என்றனர். அண்ணா வந்து “வாடா பம்பரம் விளையாடுவோம்”, என்று அழைத்து சென்றான்.
அப்பொழுது அதில் இருந்த முகவரியை பார்த்து மாமாவிற்கு தகவல் சொன்னார் அப்பா. மாமாவும் நேரடியாக வந்து இவனை பார்த்து பேசிவிட்டு அங்கேயே இருக்குமாறு சொன்னார்.
“இந்த பையனை நீங்க பார்த்து காப்பாத்தி கூட்டி வந்ததுக்கு ரொம்ப நன்றி!! இவனோட நிலைமைக்கு நான் தான் காரணம். நல்லது செய்றேன்னு, இவன ரோடுல நிக்க வச்சிட்டேன்”, என்று அழுதார்.
“முடிந்த அளவுக்கு நான் அப்பப்போ உங்களிடம் பணம் தருகிறேன் , தயவு செய்து இவனை நல்லா பாத்துக்கோங்க, என்னோட சூழ்நிலை சரியில்ல, இவனை என்கூட வெச்சிக்க முடியல நான் முடிஞ்ச அளவுக்கு வந்து இவனுக்கு உதவி செய்கிறேன்", என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.” நான் பார்த்துகிறேன் நீங்க தைரியமா இருங்க” என்றார் அப்பா.
இருப்பதை பகிர்ந்துண்டு கிடைத்த வேலையை அப்பாவும் ,அம்மாவும் செய்து பிள்ளைகளை கஷ்ட நஷ்டம் தெரியுமாறு வளர்த்தனர். மூவரும் பொறுப்பை உணர்ந்து அரசு பள்ளியில் சிறப்பாக படித்தனர். மாமா அவ்வப்போது கொடுக்கும் பணத்தை அப்பா இவன் பெயரிலேயே வங்கியில் சேமித்து வந்தார்.
ஒரு கை தானே இருக்கிறது என்று அப்பா சோர்ந்து போனதே இல்லை. சிறு வயதில் ஒரு விபத்தில் கை போய் விட்டது. “விபத்து தான் நம்முடைய வாழ்க்கையையை மாற்றும், வலிமை தரும்”, என்று இவனிடம் கூறினார். அதனால் “எதற்கும் பயப்படாமல் நேர்மையாய் உழைத்தால் மட்டும் போதும்”, என்றும் கூறினார்.
அக்கா நன்கு படித்து நல்ல மதிப்பெண் மூலமாகவே இலவசமாக மருத்துவ படிப்பை முடித்தார். நானும் அண்ணனும் வேலை பார்த்துக் கொண்டே கல்லூரி படித்தோம். பின்னர் அண்ணன் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து முடித்து தேர்வு எழுதி தற்போது அரசுப் பள்ளியில் ஆசிரியராக உள்ளான்.
நான் குடிமைப்பணிகள் தேர்வெழுதி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
எல்லாம் இருந்தும் மனதை ஊனமாக வைத்திருக்கும் இந்த உலகில் ஒற்றை கையை வைத்துக் கொண்டு மனதில் உத்வேகத்தோடு உழைத்த அப்பா மட்டும் அன்று என்னை பார்க்காவிட்டால் என்னவாயிருக்கும் என் நிலைமை என்று யோசித்தான்.
கடவுளுக்கும், அப்பாவுக்கும் மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு, தன் அப்பாவை எப்போதும் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.
மருத்துவராக அக்கா, ஆசிரியராக அண்ணன், ஆட்சியராக இவன். மூவரும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு எப்பொழுதுமே மனதார உதவி செய்தனர்.
கடினமான சூழ்நிலையிலும் தன்னால் இயன்ற அளவு உதவி செய்த மாமாவையும் நினைத்து நன்றி கூறினான்.
மாமா கொடுத்த பணத்தை தனியாக சேமித்து வைத்திருந்தனர். அதை அப்படியே எடுத்து அனாதை ஆசிரமம் ஒன்றுக்கு அப்பாவின் பிறந்தநாள் அன்று நன்கொடையாக கொடுத்து விட்டனர்.
தான் தத்தெடுத்த பத்து குழந்தைகளுக்கும் நல்ல அப்பாவாக இருக்க வேண்டும்.
இளம் தலைமுறையினரை சிறப்பாக வழிநடத்தும் நற்சிந்தனையோடும் மலர்ந்த முகத்தோடும் புறப்பட்டான். பகிர்வதற்கு அன்பை விட சிறந்த விஷயம் வேறொன்றும் இல்லை. சரியான இடத்தில் காட்டப்பட்டால் அன்பு பெருகும் உலகம் அழகாகும்.
இந்த கருத்தை இளம் தலைமுறையினரிடம் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு காரில் ஏறி அமர்ந்தான்.வாழ்க்கை தொடங்கிய இடத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டான்.....
Leave a comment
Upload