தாகமாக இருந்தது. அன்பிற்கான தாகம்.
அவமதிப்பிற்கு ஆளான நெஞ்சம் அன்பான சொல் எனும் நீர் தேடி அலைந்தது.
நடக்க, நடக்க பெரியவர் கண்ணைத் துடைத்துக் கொண்டாலும் மீறி கண்ணீர் பெருகியது.
ரோடில் அடிக்கடி கண்ணைத் துடைத்தால் ஏன் என்ற ஒரு கேள்வி எழும்.
இன்னமும் அவர் மானத்துக்கு அஞ்சினார்.
எனவேதான் மருமகள் அந்தக் கேள்வியைக் கேட்டதும் வாய்மூடி வெளியில் வந்தார்.
“ஐஸ் வாட்டர் குடிக்கலைன்னா உயிர் போயிடுமா? எதோ சோத்தைத் தின்னோமா, படுத்துக் கிடந்தோமான்னு இல்லாம ஐஸ் வாட்டர் கொண்டா, இளநீர் கொண்டான்னு உயிரை வாங்கறீங்க.
ஏதானும் முதியோர் இல்லம் அநாதை ஆசிரமம்னு போக வேண்டியதுதானே”
நெஞ்சில் குத்தியது வார்த்தைகள். அதைவிடப் பையன் அதைக் கேட்டு ஒரு சிரிப்புடன் வெளியே போனது இன்னும் அதிகமாக.
வீட்டிற்குள் ஃபிரிஜ் இருக்கிறது. மகன் ஐஸ்கிரீம் ஃபேமிலி பேக் வாங்கி வந்து குழந்தைகளுடன் தின்றான். பெரியவர் “எனக்கும் தாயேண்டா” என்றது தப்பாகிப் போனது.
பெரியவரும் வேலை பார்த்தவர்தான். கம்பெனியிலிருந்து ரிடையர் ஆகி வந்த பணத்தை முழுவதும், மகன் வீடு கட்ட அள்ளிக் கொடுத்தார். அவர் மனைவி இருந்த வரை எதோ அவர் வாய்க்கு ருசியாகக் கிடைத்தது. அவள் போன இந்த இரண்டு வருஷமாக அவர் வேண்டாத பொருளாகிப்
போனார். வேண்டா வெறுப்பாகத்தான் கிடைக்கிறது எல்லாம்.
இந்தக் கோடை காலத்துக்கு ஏதானும் ஜில்லென்று குடித்தால் தேவலாம் என்று மனம் ஏங்குகிறது. ஆனால் கையில் பணம் இல்லை. மாதம் இரு நூறு ரூபாய் கொடுப்பான் மகன். அதையும் எதோ செலவு சொல்லி மருமகள் வாங்கிக் கொள்வாள். வெயில் கொளுத்தியது. பெரியவர் அந்த இளநீர்க் கடையில் வந்து நின்றார்.
கம்பெனிக்கு இது வழியாகத்தான் போவார். அப்போது இந்தக் கோடை காலத்தில் ஒரு இளநீர் குடிப்பது வழக்கம். அங்கு ஒரு வேப்ப மரமும் அதனடியில் ஒரு பெஞ்சும் இருந்தது. அங்கு நண்பர்களுடன் அமர்ந்து பேசி விட்டுப் போவது வழக்கம். அவர் கடையை ஏக்கத்துடன் பார்த்தபடி
பெஞ்சில் அமர்ந்தார். எதிரில் நாலு சிறுவர்கள் வெயிலில் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் பார்வை ஏக்கத்துடன் இளநீர்கள் மேல் பதிந்து மீண்டது.
“சாமி இளநீர் வேணுங்களா?”- கடைக்காரன்.
“வேண்டாம்பா”- வறண்ட உதட்டை நாவால் தடவிக் கொண்டார்.
“அட, பெரியவர் இங்கிருக்காரே”- அவர் நண்பர் ஒருவர் அருகில் வந்து அமர்ந்தார். உடன் வேறு ஒருத்தர்,
“உன்னைத் தேடித்தான் வீட்டுக்குப் போனேன்”
“என்ன விஷயம்?”
“ நீ நல்லா ஆங்கிலம் எழுதுவியே. இவருக்கு ஒரு மனு எழுதிக் கொடேன்”
பெரியவர் உற்சாகமானார். அவருக்கு ஆங்கிலப் புலமை அதிகம். மிக நேர்த்தியாக அந்த மனுவை எழுதிக் கொடுக்க அவர் நூறு ரூபாயை பெரியவர் மறுக்க, மறுக்க கையில் திணித்தார்.
“வாங்கிக்கப்பா. டெய்லி இங்க வா. உனக்கு ஒரு வேலையும் ஆச்சு. ஆங்கிலமும் வேஸ்ட் ஆகாது.” நண்பர் நகர்ந்தார். திடீரென்று வந்த ரூபாய் பெரியவரை குஷிப் படுத்தியது.
“ஏம்பா, ஒரு இளநீர் வெட்டு”- அதிகாரமாய் குரல் வந்தது.
“அண்ணே ஒரு இளநீர் என்ன விலை?”- ஒரு சிறுவனின் குரல் இடை மறித்தது.
“இருபத்தி அஞ்சு ரூபாய்”
“பத்து ரூபாய்க்கு கிடைக்குமாண்ணே. தாகமா இருக்கு. குழாயில தண்ணி இல்லை.”
“உங்க அப்பன் வீட்டு தோப்புல இருக்கும். அங்க போய்க் கேளு”
சிறுவர்களின் பார்வை இளநீர் மேலேயே இருந்தது. கிழிந்த டிரவுசரில் இருந்த காசுகளை எண்ணிப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார்கள். முகம் வாட திரும்பிப் போனவர்களை அழைத்தார்
பெரியவர்.
“பசங்களா, நில்லுங்க. ஏம்பா நாலு இளநீர் வெட்டு”- எந்த உணர்வு அவரைச் செலுத்தியது என்று தெரியவில்லை. ஆனால் குரல் நெகிழ்ந்தது. இளநீரை வாங்கி அவர்களிடம் நீட்டினார்.
ஆசையுடன் வாங்கிக் குடித்த சிறுவர்களைப் பார்த்தபோது திருப்தியாக, மனம் நிறைவாக இருந்தது. அன்பைப் பெற ஏங்குவதை விட அன்பைக் கொடுப்பது பெரிய விஷயம் என்று அந்த நிமிஷம்
உணர்ந்தார்.
காசைக் கொடுத்து விட்டுக் கிளம்பிய அவரிடம் கடைக்காரன்,
“ஏஞ்சாமி உங்களுக்கு இளநீர் வேண்டாமா?”
“வேண்டாம்பா. தாகம் அடங்கிருச்சி”- என்றவரின் நடையில் கம்பீரம் இருந்தது.
Leave a comment
Upload