சுய நிர்ணய உரிமையுடன், ஒவ்வொரு பெண்ணும், தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரத்துடன் செயல்பட்டால் மட்டுமே போதாது. கிடைத்த வாய்ப்பை, சிறப்பாகப் பயன்படுத்தி, நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிப் புத்தகங்களுடன் மட்டுமே நம் கல்வி நின்றுவிடுவதில்லை. “அதையும் தாண்டி, வேறு என்ன?” என்று கேட்கிறீர்களா? உங்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில், புத்தக வாசிப்பைத் தொடங்குங்கள்.
‘வாசிக்காதிருப்பது எனும் மாபெரும் சமூக இழிவு, பெற்றுப்போட்ட சிறு சிறு குழந்தைகள்தான், தீண்டாமை, மத வெறி, இன வெறி, ஊழல், சினிமா மோகம், போதைப் பழக்கம், இயற்கை வளங்களைச் சூறையாடுதல் போன்றவை. உண்மையான சமூக இழிவு என்பது அறியாமையே’ என்று, மிக ஆழமான கருத்தை திரு செல்வேந்திரன் அவர்கள் ‘வாசிப்பது எப்படி’ என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
எதை வாசிப்பது, எப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும்?
உங்களைச் சிந்திக்க வைக்கும் புத்தகங்களைப் படியுங்கள்.
உங்களைக் குழப்பமடையச் செய்யும் புத்தகங்களைப் படியுங்கள்.
நீங்கள் புரிந்து கொள்ள விரும்பும் புத்தகங்களைப் படியுங்கள்.
வாசிப்பு என்பது உங்கள் மூளைக்கான உடற்பயிற்சி போன்றது.
அடுத்து நாம் கண்டிப்பாக வாசிக்க வேண்டியது, நம் வீட்டில் தினசரி வீசப்படும் செய்தித் தாள். அன்றாடம் பல் துலக்குவது போல, செய்தித்தாள் வாசிப்பை (பெயரிலேயே உள்ளது போல), தினசரி மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு மணிநேரம் செய்தித் தாளை வாசித்து, மொழியில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பலர் உண்டு. ‘தினத்தந்தி படிச்சுத் தான் தமிழில் படிக்கக் கத்துக்கிட்டேன்’ என்று என் அப்பா என்னிடம் சொன்னதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.
சர்வதேசச் செய்திகளுக்கும், தேசியச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வாசிக்க வேண்டும். நம்மை சுற்றி நடக்கும் செய்திகளைப் பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. ஆனால், தெளிவு இருக்கவேண்டியது அவசியம். அடுத்தவருடன் சகஜமாகப் பேசுவதற்கான பொது அறிவையும், தன் நம்பிக்கையையும், செய்தித் தாள் வாசிப்பு பெற்றுத் தரும்.
ஒரு பெண்ணுக்குக் கல்வி அளிக்கும் போது நீங்கள் அவருக்கு விடுதலை அளிக்கிறீர்கள் என்கிறார் தொழில்முனைவோர், எழுத்தாளர், நடிகை, நிகழ்ச்சித் தொகுப்பாளர் என, பலமுகங்கள் கொண்ட ஓபரா வின்பிரே. வறுமையான வாழ்க்கையில் இருந்து வளமான வாழ்க்கைக்கு முன்னேற புத்தகங்கள் அவருக்கு உதவியிருக்கின்றன. வளரும் பருவத்தில் அவர் அதிகம் தஞ்சமடைந்த இடம் நூலகமாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனரும், கோடீஸ்வர கொடை வள்ளலுமான பில் கேட்ஸ், புத்தக வாசிப்பு தன் வாழ்க்கையை மாற்றியது என்கிறார். ஜான் ரஸ்கின் எழுதிய "கடையேனுக்கும் கடைத்தேற்றம்' என்ற நூல்தான் காந்தியடிகளின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. இப்படியாகப் பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆகையால் பெண்களே, வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்த பின், வாழ்வின் மீதான உங்கள் பார்வை மாறும். நீங்களாகவே, சிந்தித்துச் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
வாசிப்புப்பழக்கத்தை அடுத்து, நாம் மேற்கொள்ள வேண்டியது…
2. தன்னை அறிதல் :
“Chance favours the prepared mind” - Louis Pasteur
"தயாரான மனத்திற்கு வாய்ப்பு சாதகமாகும்." - லூயிஸ் பாஸ்டர்
‘தயாரான மனத்திற்கு’ என்றால், உங்களைப் பற்றிய அறிதலோடும், விழிப்புணர்வோடும், இருப்பதைத் தான் தயாரான மனது என்கிறார். நீங்கள் மனத்தளவில் உங்களை ஆராய்ந்து, உங்கள் பலம் மற்றும் பலவீனம் என்ன என்று தெரிந்து கொண்டால், வாய்ப்புகள் வரும் போது, அவற்றைச் சாதகமாக்கிக் கொள்ளலாம்.
‘To know others is wisdom, to know yourself is enlightenment’- Lao Tzu.
பிறரை அறிவது நுண்ணறிவு, தன்னை அறிதல் என்பது ஞானம்.
பிரபல எழுத்தாளர், கிளாரிஸா பிங்கோலா (Clarissa Pinkola Estes) வின் Women Who Run With The Wolves என்ற புத்தகம், ஒரு முற்றிலும் வித்தியாசமான பார்வையுடன் எழுதப்பட்டது. “ஆரோக்கியமான காட்டு ஓநாய்களும் ஆரோக்கியமான பெண்களும், ஒரே மாதிரியான சில மனநலப் பண்புகள் மற்றும் வலிமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
பெண்கள் தன்னைப் பற்றியும், தன் துணை மற்றும் அவர்களின் இனத்தைப் பற்றியும் தீவிர அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். உறுதி மற்றும் தைரியத்தில் காட்டு ஓநாய்க்கு நிகரானவர்கள். ஆனால், இருவரும் வேட்டையாடப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்களை, காட்டு ஓநாய்களுக்குச் சமமாக வலிமை பெற்றவர்கள், என்ற வரிகள், நம்மை இன்னும் அதிகமாகச் சிந்திக்க வைக்கிறது. நாம் ஒவ்வொருவரும், நம் பலம் என்ன, பலவீனம் என்ன, என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தன்னை அறிந்து, வெற்றிக் கனியைப் பறித்த சாதனைப் பெண்களைப் பற்றி, அடுத்த கட்டுரையில் தொடர்ந்து பேசுவோம்...
Leave a comment
Upload