தொடர்கள்
ஆன்மீகம்
அனகாபுத்தூரிலிருந்து அயோத்தியா சீதாபிராட்டிக்கு வாழை நார் சேலை - மாலா ஶ்ரீ

20240019112721607.jpeg

அயோத்தி ராமர் கோயிலில் நிர்மாணிக்கப்படும் சீதாதேவி விக்ரகத்துக்கு அணிவிப்பதற்காக, சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் இயற்கை நார் நெசவு குழுமம் சார்பில் 4 அடி அகலம், 20 அடி நீளம் கொண்ட அயோத்தி ராமர் கோயில் வடிவமைப்பில் பிரமாண்ட வாழைநார் புடவை விசேஷமாகத் தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து இப்புடவை கடந்த 18-ம் தேதி விமானம் மூலமாக அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அனகாபுத்தூரில் இயங்கி வரும் இயற்கை நார் நெசவு குழுமத்தின் தலைவர் சேகர் கூறுகையில், ‘‘நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக வாழை நாரிலிருந்து இதுபோன்ற புடவைகளை ஒரு குடும்பமாக நெய்து வருகிறோம். வாழைநார் மட்டுமின்றி கற்றாழை, அன்னாசி, மூங்கில் போன்ற இயற்கை பொருட்களில் இருந்து கிடைக்கும் நார்களையும் இழைத்து, அதிலிருந்து பெண்கள் அணியும் புடவை, கைப்பை, ஆண்களுக்கான பேண்ட்-சட்டை போன்றவற்றை தயாரித்து, ஆன்லைன் மூலமாக பல்வேறு வெளிநாடுகளுக்கு அதிகளவில் விற்பனை செய்து வருகிறோம்.

அயோத்தி ராமர் கோயிலில் நிர்மாணிக்கப்படும் சீதாதேவி விக்ரகத்துக்கு அணிவிப்பதற்காக முன்பே திட்டமிட்டு, எங்களது குழுமத்தை சேர்ந்த 10 பேர் கடந்த ஒரு வாரமாக இரவு-பகல் பாராமல் வாழை நார், பருத்தி இலை, பட்டு ஆகியவற்றை கொண்டு வாழைநார் புடவையை உருவாக்கினோம். அதை இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்காக, கடந்த 18-ம் தேதி சென்னையில் இருந்து அயோத்திக்கு விமானத்தில் அனுப்பி வைத்ததில் எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!’’ என்று குழுமத் தலைவர் சேகர் தெரிவித்தார்.

20240020095643821.png