தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 40-பரணீதரன்

202392621350502.jpg

சென்ற வாரத்தின் பகுதியை பரணீதரன் தொடர்கிறார்.

சில தொகைகளின் பின் மிகுந்து வரும்

வேற்றுமைத்தொகை, வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை, உவமைத்தொகை போன்ற தொகைகளின் பின் வல்லினம் மிகுந்து வரும்.

எடுத்துக்காட்டாக :

வேற்றுமைத்தொகை (வேற்றுமை உருபாகிய ‘ஐ’, ‘ஆல்’, ‘கு', ‘இன்’, ‘அது’, ‘கண்’ ஆகிய எழுத்துக்கள் அல்லது சொற்கள் மறைந்து வருவது)

குகைப்புலி - குகைக் கண் புலி. குகை புலி என்று எழுதினால் குகையும் புலியும் என்று ஆகிவிடும்.

வினைப்பயன் - வினையினது பயன். வினையின் ‘அது’ பயன். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (வேற்றுமை உருபாகிய ‘ஐ’, ‘ஆல்’, ‘கு', ‘இன்’, ‘அது’, ‘கண்’ ஆகிய எழுத்துக்கள் அல்லது சொற்கள் மறைந்து வருவது, ‘கொண்ட’, ‘உடைய' போன்ற பயனும் மறைந்து வருவது)

பணப் பை - பணத்தைக் கொண்ட பை. பணத்தை என்ற சொல்லில் உள்ள ‘ஐ’ உருபும், ‘கொண்ட’ என்ற பயனும் மறைந்து வருகிறது. பண பை என்று எழுதினால் பணமும் பையும் என்று பொருள் தரும்.

வாய்ப்பாட்டு - வாயால் பாடப்படும் பாட்டு. வாயால் என்ற சொல்லில் உள்ள ‘ஆல்’ உருபும், பாடப்படும் என்ற பயனும் மறைந்து வருகிறது. வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

குழந்தைப் பால் - குழந்தைக்கு கொடுக்க வேண்டிய அல்லது கொடுக்கப்படும் பால். குழந்தைக்கு என்று சொல்லில் உள்ள ‘கு' உருபும், கொடுக்க வேண்டிய அல்லது கொடுக்கப்படும் என்ற பயனும் மறைந்து வருகிறது. வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

பண்புத்தொகை (‘உடைய’ அல்லது ‘ஆகிய’ அல்லது ‘இன்’ என்ற பண்புக்குரிய சொல் மறைந்து வருவது)

பச்சைக் கிளி - பச்சை நிறத்தை உடைய கிளி. பச்சை கிளி என்று எழுதினால் பச்சையும் கிளியும் என்று பொருள் தரும்.

சிகப்புக் கம்பளம் - சிகப்பு நிறத்தை உடைய கம்பளம். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

வெள்ளைப் பட்டு - வெள்ளை நிறத்தை உடைய பட்டு. வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

வட்டப் பாறை - வட்டமாகிய பாறை. வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

வட்டச் செயலாளர் - வட்டத்தின் செயலாளர். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

புளிக் காய்ச்சல் - புளிப்புச் சுவையுடைய காய்ந்த கலவை. வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

எட்டுத் தொகை - எட்டு எண்களை உடைய தொகை நூல்கள். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

பத்துப் பாட்டு - பத்து எண்களை உடைய பாட்டு நூல்கள். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை (சிறப்பு பெயர் முன்னும், பொது பெயர் பின்னும் வந்து ‘உடைய’ அல்லது ‘ஆகிய’ அல்லது ‘இன்’ என்ற பண்புக்குரிய சொல் மறைந்து வருவது)

வாழைத் தோட்டம் - வாழையுடைய தோட்டம். வல்லின எழுத்து வரவில்லை என்றால் வாழ்வையும் தோட்டமும் என்று பொருள் தரும்.

சாரைப் பாம்பு - சாரையாகிய பாம்பு. வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

தைப் பொங்கல் - தையின் பொங்கல். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

மார்கழித் திங்கள் - மார்கழியின் திங்கள். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

பலாப் பழம் - பலாவாகிய பழம். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

எல்லைக் கோடு - எல்லையின் கோடு. வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

உழவுத் தொழில் - உழவாகிய தொழில். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

முருகப் பெருமான் - முருகனாகிய பெருமான். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

மல்லிகைப்பூ - மல்லிகையாகிய பூ. வல்லின எழுத்து வரவில்லை என்றால் வாழ்வையும் தோட்டமும் என்று பொருள் தரும்.

தாமரைப்பூ - தாமரையாகிய பூ. வல்லின எழுத்து வரவில்லை என்றால் வாழ்வையும் தோட்டமும் என்று பொருள் தரும்.

உவமைத்தொகை (போல, போன்ற, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன போன்ற உவமைச் சொற்கள் மறைந்து வருவது)

கமலக்கண்ணன் - தாமரையை போன்ற கண்களை உடையவன். வல்லின எழுத்து வரவில்லை என்றால் கமலமும் கண்ணனும் என்று ஆகிவிடும்.

மழைக்கை - மழை எவ்வாறு பிரித்துப் பார்த்து பெய்யாதோ அதுபோல யாரையும் பிரித்துப் பார்க்காமல் தானம் செய்யும் கையை உடையவன். வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

மரகதக் கிளி - மரகதம் போல பச்சை நிறமாய் உள்ள கிளி. வல்லின எழுத்து எழுதவில்லை என்றால் மேலே உள்ளதை போல் பொருள் தரும்.

சில விரிகளின் பின் மிகுந்து வரும்

சில வேற்றுமை விரியில் வல்லின எழுத்துக்கள் மிகுந்து வரும்.

எடுத்துக்காட்டாக :

இரண்டாம் வேற்றுமை விரி (‘ஐ’ உருபு வெளிப்படையாக வரும்)

வீட்டைக் கட்டினான். வல்லின எழுத்து வரவில்லை என்றால் வீட்டை என்ற ஒருவன் கட்டினான் என்று பொருள் தரும்.

நூலைப் படி. புத்தகத்தை படி என்று பொருள். வல்லின எழுத்து வரவில்லை என்றால் நூலை உடைய படி என்று பொருள் தரும்.

நான்காம் வேற்றுமை விரி (‘கு' உருபு வெளிப்படையாக வரும்)

அவனுக்குக் கொடுத்தான். வல்லின எழுத்து வரவில்லை என்றால் அவனுக்கு என்ற ஒருவன் கொடுத்தான் என்று பொருள் தரும்.

பள்ளிக்குப் போனான். வல்லின எழுத்து வரவில்லை என்றால் பள்ளிக்கு என்ற ஒருவன் போனான் என்று பொருள் தரும்.

மற்ற மிகும் இடங்களை வரும் வாரம் தொடர்வதாக கூறி விடை பெறுகிறார்.