நமது எண்ணம், சொல், செயல் என்பவை கர்மா. அவற்றின் விளைவு வினைப்பயன். அது நமது இன்ப துன்பங்களையும், அடுத்த பிறவி என்பதையும் தீர்மானிக்கிறது. இதுவரை நாம் பார்த்ததின் ரத்தினச் சுருக்கம் இதுவே என்று சங்கரன் கூற ஆரம்பிக்க, நாம், அப்படியானால் இந்த சுழலின் முடிவு எது? எப்போது? என்று வினவுகிறோம்.
அதற்கு அவர் கூற ஆரம்பிக்கிறார்....
சனாதன தர்மம் வாழ்க்கையை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கிறது. பழந்தமிழர் இதனை அறம், பொருள், இன்பம், வீடு என்று சொன்னார்கள். தர்மம் என்பதைச் சுருக்கமாக முன்னமே பார்த்துவிட்டோம். அப்படி அறவழி தவறாமல் சேர்க்கப் படுவது பொருள். இந்த உலகில் வாழ்வதற்குப் பொருள் அதாவது செல்வம் வேண்டும் ஆனால் அதை அறவழியில்தான் சம்பாதிக்க வேன்டும் என்பதும் ஒரு அறமாகச் சொல்லப் பட்டது.
இல்லற இயலைச் சொல்லும் வள்ளுவர் “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று தெளிவாகச் சொல்கிறாறர். அகிம்ஸை, பொய்யாமை, திருடாமை, தூய்மை, புலனடக்கம் என்று மனு சொன்ன இந்த ஐந்தைக் கடைப்பிடித்து அல்லது வள்ளுவன் சொன்ன ‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்’ – பொறாமை, பேராசை, கோபம், கடும் சொல் என்ற நான்கையும் தவிர்ப்பது அறம். அவ்விதம் நம் வாழ்க்கையை வாழ்ந்து சேர்க்கும் செல்வம் அறச் செல்வமாகும். அவ்விதம் அல்லாது, அடுத்தவர்க்குக் காட்டுவதற்காக அல்லது தன் ஆசையைத் தீர்ப்பதற்காக எந்த வழியானாலும் சரி என்று சேர்த்த செல்வம் அறச் செல்வம் அல்ல.
இவ்விதம் அறவழியில் சேர்த்த செல்வத்தை அனுபவிப்பது காமம். இந்தச் சொல்லுக்கு வெறும் உடல் இச்சை என்பது அல்ல பொருள். இல்லறத்தில் இருந்து உலக இன்பங்களை அனுபவிப்பது என்று பொருள். உடை உணவு, வீடு வாகனம் நட்பு சுற்றம் விடுமுறை பயணம் என்று நாம் வாழ்வில் சுகம் என்று கருதும் எல்லா அனுபவங்களும் இதில் அடங்கும்.
இந்த இடத்தில் சிறிது கவனம் தேவை. நாம் அறவழியில் சேர்த்த செல்வத்தை அனுபவிப்பது மட்டுமே இங்கே சொல்லப் படுகிறது. அடுத்தவர் அனுபவத்தைக் கண்டு அதுபோல இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக வேறுவழிகளை நாடுவது இங்கே சொல்லப்படவில்லை. அது அதர்மம் என்று சொல்லப் படும்.
அவன் ஆடி காரில் செல்கிறான் நான் ஆட்டோவில் போறேனே என்று பொறாமைப்படுவதில் பயனில்லை. இன்னும் அதிக முயற்சி செய்து நானும் ஆடி கார் வாங்குகிறேன் என்பது ஊக்கம். அந்த முயற்சியாலும் அது கிடைக்கவில்லை என்றால் அதுதான் எனது வினைப்பயன் என்று அந்த ஆசையை அடக்குவது புத்திசாலித்தனம். ஆடியில் போனாலும் ஆட்டோவில் போனாலும் பயணம் என்பது ஒன்றுதான். அந்தப் பயணத்தின் பயன் நல்லவிதமாகக் கிடைக்கிறதா என்பது நமது கோட்பாடாக இருக்க வேண்டும்.
விஞ்ஞானப் புரட்சி என்று நாம் இன்று காணும் பலவும் தர்மத்திற்கு எதிராக இருக்கிறது. மனிதனின் உடல் உழைப்பைக் குறைப்பதாகவும், இயற்கைக்கு எதிராக மனிதனுக்கு உடல் சுகத்தைத் தருவதாகவும், அவனது ஆரோக்கியத்திற்குத் தேவையான உடற்பயிற்சியை அன்றாட வாழ்விலிருந்து நீக்குவதாகவுமே இன்றைய விஞ்ஞான வளர்ச்சி அமைந்திருக்கின்றது. அதனாலேயே மனித குலத்திற்குப் பலவிதமான புதுப்புதுப் பிரச்சினைகள் உருவாகின்றன.
இப்படி அறமும் பொருளும் இன்பமும் ஒன்றிற்கொன்று இணைந்து இன்றைய இன்பம் நாளைய சந்ததிக்குத் துன்பம் தராததாக இருக்க வேண்டும் என்ற சமூக நோக்கோடும், அந்த இன்பம் நமது அடுத்த பிறவிக்கு வல்வினையாக அமையக் கூடாது என்ற தன்னிலை எச்சரிக்கையோடும் வாழச் சொல்வது சனாதன தர்மம்.
நிலத்தை நீரை ஆற்றை காற்றை எல்லாம் தெய்வமாக வழிபடுவது அவற்றைக் காக்கவும் அவற்றை அனுபவிக்க நமக்கு உள்ள தகுதியை நினைவூட்டுவதற்காகவும் தான். இப்படி இரட்டை நன்மைகளோடு மனித குலத்தை நீண்ட நெடுங்காலமாக வழி நடத்துவது சனாதன தர்மம்.
அகன்று விரிந்த நிலம் வளமானதாகவே இருந்தாலும் அதனை ஆழ அகல உழுது வரப்பு அமைத்து (இயற்கை) உரம் சேர்த்து செய்தால்தான் அந்த விவசாயம் நல்ல விளைச்சலைத் தரும். அதுபோல மனித இனம் உலகமெல்லாம் பரந்து உடல் வலிமையோடும் அறிவின் திறனோடும் இருந்தாலும் அதனை வழிமுறைப் படுத்தி அதில் ஒழுக்கம் என்ற உரத்தைச் சேர்த்தால்தான் மனித குலத்தின் மேம்பாடு என்பது விளையும். இல்லாவிட்டால் முன்னேற்றம் என்ற பெயரில் சுய நலமும், குழப்பமும், சமூகச் சீர்கேடும் மட்டுமே விளையும்.
அறம் பொருள் இன்பம் மூன்றும் நல்லவிதமாகக் கடந்தால், வீடு என்ற மோட்சம் எப்போது, எப்படி கிட்டும் என்று அடுத்த வாரம் கூறுகிறார்.
Leave a comment
Upload