தொடர்கள்
அழகு
விண்வெளியில் கீரை - சீனா சாதனை - மாலா ஶ்ரீ

2023928072919543.jpg

விண்வெளியில் சீனா தனக்கென 'டியாங்காங்' விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து, தனியே இயங்கி வருகிறது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் சீனாவின் ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து பறக்க விடப்பட்ட'ஷென்சோ-16' விண்கலத்தில் ஜிங் ஹைபெங், ஜு யாங்சு மற்றும் ஏரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரான குய் ஹைச்சாவோ ஆகிய 3 பேர் விண்வெளிக்கு பயணித்தனர்.

அங்கு சீனாவின் டியாங்காங் விண்வெளி ஆய்வு மையத்தில் 3 வீரர்களும் கீரைகள், சின்ன வெங்காயம், செர்ரி தக்காளி எனும் புதிய வகை காய்கறி செடிகளை பயிரிட்டு வளர்க்கத் துவங்கினர். பொதுவாக பூமியில் காய்கறி செடிகளுக்குத் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீர் இருப்பதால் எளிதில் வளரும். ஆனால், சீன விண்வெளி ஆய்வு மையத்தில் காய்கறி செடிகள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் சீன விண்வெளி ஆய்வு மையத்தில் காய்கறி செடிகள் பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை சீனா உருவாக்கியது.

இது, தாவரங்கள் வளர்ச்சிக்குத் தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவற்றை சரியான விகிதத்தில் கிடைக்கும் வகையில் சாதனம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த நவீன சாதனத்தின் மூலமாகத்தான், தற்போது சீன விண்வெளி ஆய்வு மையத்தில் காய்கறி மற்றும் கீரை வகைகளை 3 சீன வீரர்களும் பயிரிட்டு சாதனை படைத்துள்ளனர். அதன்படி, அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய நான்கும் நல்ல விளைச்சலை கண்டது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சீன வீரர்கள் அறுவடை செய்துள்ளனர்.

வருங்காலத்தில் அதிகளவு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. அப்போது விண்வெளியில் மனிதர்களுக்கு காய்கறி, கீரை உணவுகள் அத்தியாவசிய தேவையாக மாறும். இதுபோன்ற உணவுகளை பூமியிலிருந்து கொண்டு செல்வதைவிட, விண்வெளியிலேயே பயிரிட்டு உற்பத்தி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதை மனதில் வைத்துதான், விண்வெளியில் காய்கறி, கீரை மற்றும் உணவு பயிர்களை வளர்க்கும் திட்டங்களை சீனா உள்பட சர்வதேச நாடுகள் முன்னெடுத்துள்ளன எனக் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பார்க்கும் போது தான் இந்த கவிதை அசந்தர்ப்பமாக நினைவுக்கு வருகிறது.

கடைசி மரமும் வெட்டுண்டு,

கடைசி நதியும் விஷமேறி.,

கடைசி மீனும் பிடிபடும்போதுதான் உறைக்கும்,

பணத்தை சாப்பிட முடியாதென்று..!