இந்திய வானில் ஒரு ஒளிக்கீற்று தென்படுகிறது ...
முப்பதாண்டுகளாக வாக்குறுதிகளாகவும் ,விவாதப் பொருளாகவும் விளங்கிய பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு, இப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மசோதாவாக வடிவம் பெற்றுள்ளது .
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஏறத்தாழ 50% பெண்கள் இருக்கும் சூழலில் 33% எனப்படும் கோரிக்கை மேலும் வலு பெற்று உள்ளது .அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வைக்கும் துருப்புச் சீட்டு இந்த 33% இட ஒதுக்கீடு என்றாலும் , தாமதமாக கிடைத்த இந்த வெற்றி ஆனந்த அதிர்வலைகளை மக்களிடையே எழுப்பி உள்ளது. இன்றைய கணக்குபடி 542 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 78 எம்.பிகளே பெண் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.. இந்த மசோதா செயலாக்கப் பட்டால் 181 பெண்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் . இது போலவே மாநிலங்கள் அவையிலும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும் .
மாநில சட்டமன்றங்களுக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும். நாடெங்கும் பெண் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் எண்ணிக்கை மாறும். பெண்களுக்கான தொகுதிகள் அதிகமாக்கப்படும் . இவை எல்லாம் இந்த மசோதாவின் நேர்மறை சங்கதி.
அதே நேரத்தில் , இந்த மசோதாவின் ஒரு பகுதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதில் பெறப்படும் எண்ணிக்கையின் அடிப்படையில் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்படும். அதன் பின்னரே மூன்றில் ஒரு தொகுதி பெண்களுக்கென ஒதுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது .இவை நடத்தி முடிக்க குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகும். அதுவரை இந்த மசோதா காகிதத்தில் மட்டுமே இருக்கும். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இது அமல்படுத்தப்படாது என்றே நினைக்க வேண்டி உள்ளது .
இருப்பினும் இந்த மசோதா நம் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நம் விகடகவி வாசகர்கள் இருவரிடம் இது பற்றிய கருத்துக் கேட்டோம் .
நாம் முதலில் அணுகியது திருமதி .தி.பரமேசுவரி ,எழுத்தாளர் ,கவிஞர் .தணியாத ஆர்வம் கொண்டு மாணவர் உலகைச் சீரமைக்கும் தலைமை ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தின் தலைச்சிறந்த தலைவரான ம.பொ.சியின் பேத்தி .
"பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீடு எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள் ?"
" 33% இட ஒதுக்கீடு என்பது பெண்களின் குறைந்தபட்சக் கோரிக்கை. உலகம் ஆணும் பெண்ணும் நிறைந்தது இணைந்தது. எந்த செயலையும் நிறைந்து செய்கையில் அது சிறப்பாக முடியும். இரு பாலினரின் இடையில் இருக்கும் ஆதிக்க உணர்வுகளே நல்லிணக்கத்தை அழித்துவிட்டது. பெண்கள் வெளியில் இயங்குவதை விரும்பாத ஆதிக்கவுணர்வு, அதை ஒடுக்க நினைக்கிறது. அதற்கு மதம், அரசு, அதிகாரம் ஆகியவை உதவி புரிகின்றன.
பெண்களால் வெளியில் வந்து இயங்க இயலாது என்று அவளது உடல் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக் காட்டுவர். ஆனால் பெண்களின் இயல்பான இயங்குதன்மை ஆச்சர்யமூட்டுவது. உளவியலாகவும் பெண்களின் தாங்குதிறன் ஆற்றல் அதிகம். நிர்வாகத்திறனும் சிறப்பானது"
"பெண் அரசியல்வாதிகள் பெரும்பாலும் தன் கணவர், சகோதரன் போன்றவர்களைப் பின்னணியில் வைத்து அவர்களது கட்டளைப்படி இயங்குவதாக சொல்கிறார்கள் .இந்த 33% சட்டம் அமலுக்கு வந்தால் இந்த சூழல் மாறுமா ?
"இப்போதைக்கு பெண்கள் பொம்மைகள் போல் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றாலும் இச்சூழல் மாறும்போது அந்த மாற்றம் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கும். ஜெயலலிதா எனும் பெண் முதல்வர் தான் பொது இடங்களில் தாய்ப்பால் தரும் இடம் ஒதுக்கச் சிந்தித்தார். பெண் காவலர்களுக்கு ஏற்ற உடைகளைச் சீர் செய்தார். பெண் காவல் நிலையங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டன. இப்போது அரசுப்பள்ளி மாணவியர் அணியும் சீருடைகளை வடிவமைத்தது ஜெயலலிதாவின் மேற்பார்வையில்தான் .
இப்போதைக்குப் பல பெண் நிர்வாகிகள் ஆண் குரலைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தாலும் நாளடைவில் இச்சூழல் மாறும். இப்போதே, இயங்க வெளியற்று இருந்த பெண்களில் சிலர், கிடைத்திருக்கும் வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது." என்றார்.
அடுத்து நாம் சந்தித்தது திரு.தியாகமூர்த்தி, பொறியியல் வல்லுநர். டான்சானியா நாட்டில் பொறியாளராக பணியாற்றி இந்தியா வந்துள்ளார். சமூக அக்கறையும் , பொறுப்பும் கொண்டவர் .
"இந்த மசோதா பற்றி என்ன நினைக்கிறீர்கள். இதில் ஆண்களின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?"
"இது நம் நாட்டில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் . இதனால் தகுதி உள்ள பெண்கள் ஆட்சி பங்களிப்பை அளிக்க முடியும். ஆனால் இங்கு பார்க்கும் போது ,பெண்கள் பணி புரியும் இடங்களில் நிலவும் சூழல் அழுத்தம் தருவதாக இருக்கிறது. வீடு, பணி இரண்டிலும் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அதிக அழுத்தத்தை சந்திக்கிறார்கள் . இரவு எட்டுமணிக்கு மேல் பணியில் இருந்து திரும்பும் பெண்கள் அந்த நேரத்தில் காய்கறிகள் ,மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டு இருப்பதை நான் பார்க்கிறேன். பெண்களின் வேலையை ,வீட்டில் உள்ள ஆண்களும் மற்றவர்களும் இன்னும் பகிர்ந்துக் கொள்ளாத சூழலை இங்கு பார்க்க முடிகிறது .பெண்களின் வலியை புரிந்து ஆண்கள் பொறுப்புகளை பகிர்ந்துக் கொண்டால் ,பெண்கள் எல்லா இடங்களிலும் தம் முத்திரையைப் பதிப்பார்கள் .இதுவே முதலில் நாம் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் " என்றார் .
சுதந்திர இந்தியாவில் இந்திரா காந்தி முதல் பல பெண் தலைவர்கள் சீரிய முறையில் தொண்டாற்றி வந்துள்ளனர். பெரும்பாலும் அரசியல் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அவர்கள். அவ்வாறு அன்றி எளிய பின்னணி கொண்ட புதிய தலைமுறை பெண் தலைவர்கள் நம்மிடையே உருவாவார்கள்.
அவர்கள் பெண்களின் நலனை தாண்டி நாட்டின் நலத்துக்காகவும் சிந்திப்பவர்களாக விளங்குவார்கள். ஒரு புதிய சமூக மாற்றம் இங்கு நிச்சயம் விளையும் அதற்கு 33% இட ஒதுக்கீடு துணை நிற்கும்,
மனித உரிமை, பெண்ணுரிமை பேசும் அமெரிக்காவில் கூட இது வரை ஒரு பெண் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தது கிடையாது. அந்த வகையில் பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதன் மூலம் இந்தியா, உலகிற்கு ஒரு மிகப் பெரிய செய்தியை வழிகாட்டுதலை முன் வைக்கிறது.
Leave a comment
Upload