தொடர்கள்
அரசியல்
ஷரத் பவார் -  பவர்ஃபுல்லா? பவர்லெஸ்ஸா?

20230405221221428.jpeg

மே 5 2023 அண்மை செய்தியாவது, ஷரத் பவார் தனது முடிவை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இதற்கு மே 2, 2023 லிருந்து நடந்தவற்றை திரும்பி பார்த்தால் தான் புரியும்.

மும்பை YB chavan ஆடிட்டோரியம்.

ஷரத் பவார்க்கு அரசியலுக்குள் புகுந்து அறுபது வருஷம் ஆகி விட்டது.

அன்று தான் லோக் மாஜே சங்கதி என்ற தனது சுய சரிதையை வெளியிட்டார். கூடவே ஒரு குண்டையும் போட்டார். 24 வருடமாக உருவாக்கி வளர்த்து வந்த என்சிபி கட்சியில் இருந்து விலகுகிறேன் என்பது தான் அது.

தனது மனைவி மகள், சுப்ரியா சுலே, அண்ணன் மகன் அஜித் பவார் மற்றும் அனைத்து முக்கிய கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த அறிவிப்பு தொண்டர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

சிலருக்கு இந்த அறிவிப்பு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனினும், சம்ப்ரதாயப்படியே போகாதே என் கணவா என்ற நிலையில் அவரை வானுக்கு உயர்த்திப் பிடித்து நீங்கள் இல்லா கட்சி சூனியம் என்றனர். உடன் பிறப்புகள் பலர் கதறிக் கதறி அழுதனர்.

ஆளாளுக்கு மைக் பிடித்துக்கொண்டு தத்தம் கருத்துக்களையே அதாவது, பவார் பதவி விலகல் முடிவை திரும்பப் பெறவேண்டும் தெரிவித்தனர்.

அஜித் பவாருக்கு இந்த சித்தப்புவின் முடிவு சரியானதே என்றும் சில நாட்களாகவே அவர் தன்னிடம் கட்சியின் தலைமை அடுத்த தலைமுறைக்கு தந்துவிடவேண்டும் என்று சொல்லி வந்ததாகவும் கூறினார். மூத்த தலைவர்களும் 82 வயதாகும் ஷரத் பவாரின் தற்போதைய உடல் நிலை கருதி இது சரியானதுதான். எனினும் அவர் தலவர் பதவியில் இருக்கவேண்டும் இனி நியமிக்கப்படும் செயல் தலைவர் அவரின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும் என்ற தொனியில் கூறினர்.

ஷரத் பவார் 18 கட்சி பிரமுகர்கள் கொண்ட குழுவை நியமித்தார். அடுத்த தலைவரின் பெயரை பரிந்துரைக்கும்படி கேட்டிருந்தார்.

கடந்த நாலு நாள் புகைச்சல் புஸ்ஸென்று போனது. இது தான் நடக்கும் என்றே மூத்த பத்திரிகையாளர்கள் சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் ஒரு அனுமானிக்கப்பட்ட ஸ்கிட் தான் என்று. இதன் பின்னணி தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

சமீப காலமாக அஜித் பவார் பாஜகவுடன் கை கோர்க்கும் முயற்சியில் தீவிரமாக இருப்பதும் அவருக்கு உறு துணையாக எம் எல் ஏக்ககும் எம் பிக்களும் மற்ற மூத்த தலைவர்களும் இருந்து வந்தனர் என்பது வெளிப்படையான ரகசியம்.

இதற்கு காரணமில்லாமல் இல்லை. சிவ சேனையை உடைத்த ஃபட்னவிஸ், ஒரு வேளை உச்ச நீதிமன்றத்தில் எந்த நாளிலும் கட்ச் மாறிய ஷிண்டேவின் எம் எல் ஏக்கள் பதவி இழக்கும் நிலைவந்து விட்டால் அஜித் பவார் அந்த இடத்தில் அமர்த்தி விடலாம் என்ற படி வேகமாக பரவிய அதற்கேற்றார்போல் நடந்த ரகசிய சந்திப்புகள் எல்லாம் ஷரத் பவாரை எண்ண வைத்து விட்டது. 2020 ஏப்ரலில் ஃபட்னவிஸோடு துணை முதலமைச்சர் பதவியை சூரியன் வருமுன்னம் ஏற்றுக்கொண்டவர் தானே. தனது மந்தையை ஷரத் பவார் ஸ்ட்ராங்காக இறுக்கியதில் அஜித் பவார் தனிப்படுத்தப்பட்டார். எனினும் ரத்த பாசமோ தனக்கு ஒரு அடிமையோ அவரை மீண்டும் தன் கட்சியில் சேர்த்துக்கொண்டுவிட்டார். புதியதொரு முக்கூட்டு அணியை உருவாக்கவும் செய்தார். மீண்டும் மகாராஷ்ட்ரா அரசியலில் தன்னிகறற்ற தலைவரானார்.

ஆனால், ஷிண்டேவை செட் உப் செய்த ஃபட்னவிஸின் சாணக்கியத்தனத்தை பவாரால் கணிக்கமுடியாமல் தான் போய்விட்டது. இந்த செயலிக்காக அவர் வாயால் ஃபட்னவிஸை பாராட்டவும் செய்தார். கூட்டாணி ததிகிணத்தோம் போட ஆரம்பித்தது. ஷிண்டே உருவானார். ஆட்சி கை மாறியது.

சிவ சேனை தான் உடைந்தது என்றில்லாமல் நமது கட்சியும் உடையும் தருவாயில் இருப்பதைக் கண்ட ஷரத் பவார் இந்த நாடகத்தை ஆட வேண்டி வந்தது என்பதை அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எது எப்படி இருப்பினும், ஷரத் பவாருக்கு இன்று தலை வலி இல்லை என்ற நிலையே தவிர நாளை என்னவாகுமோ என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு தன் மதிப்பு எவ்வளவு என்பதை கணித்துக் கொண்டுவிட்டார். உட்கட்சியிலும் தனக்கு செல்வாக்கு இருப்பதையும் முக்கூட்டணியில் தனது பலமே ஓங்கி இருக்கவும் இந்த நாலு நாள் முயற்சி கை கொடுத்துள்ளதாக தெரிந்து கொண்டுள்ளார். ஆக தன் தலைமையில்தான் பாஜகவுக்கு எதிராக மாநிலத்தில் அரசியல் நடக்கும் என்றும் ஒரு யூகத்திற்கும் சென்றிருக்கக்கூடும்.

உடனே வரவிருக்கும் மும்பை முனிசிபல் கார்பொரஷன் எலக்ஷன், 2024 ல் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் என்று மூச்சு விடவே நேரமில்லமால் அரசியல் இங்கு கட்சிகளை பாஜகவைத் தவிர்த்து, தூங்க விடுவதாக இல்லை.