மும்பை சத்ரபதி சிவாஜி மஹராஜ் டெர்மினல் (முன்னாள் வீ.டீ ஸ்டேஷன்)
என்னோட கி(ளா)ஸ்மேட் பீட்டர் டி கோஸ்ட்டா
என்னைக் கேட்டான் மஸ்ஜித் வர்ரியான்னு
அர்ரே யார்(தோஸ்த்தை சொந்தமா கூப்படறது)
இவனோ கிரிஸ்டியன்,
என்னக் கூப்படறான் மஸ்ஜித் வர்ரியான்னு
நானோ ஹிந்து...துஷார்பாய் ஷா.
யோசிக்கத் தொடங்கினேன்....ம்ம்ம்
அப்புறந்தான் புரிஞ்சது
அவன் லோக்கல் ட்ரெய்ன்ல மஸ்ஜித் பந்தர் போகத் தான் கூப்படரான்ன்னு.
ஒடனே எனக்குள்ளே உருவானது ஒரு கவிதை
லோக்கல் ட்ரெயின்
மத பேதத்தை அழிக்குது.
இங்க
பீட்டர் போறான் மஸ்ஜித்
மூஸாபாயோ சர்ச்கேட்
கஷ்டந்தான்,
தெனமும் ட்ராவல் பண்ணறது
ஆனா,
மும்பய்க்கருக்கோ அது தானே ஜீவனாம்சம்
கஷ்டந்தான்,
ஒரு கோடியிலேயிருந்து இன்னோரு கோடி போவதென்பது
வயித்துப்பொழப்பு
இரண்டு கோடிகளையும்
இணைக்கிறான்.
தண்டவாளத்துக்குத் தான்
இந்த
அரை ஜாண் வயித்து மேல
அப்படி ஒரு வாஞ்சை.
ரயிலுன்னா
கோடி வயிறுகளுக்கு வயிறார ரொட்டி.
இதில்
நீ யென்ன நானென்ன
கோபுரமா குடிசையா
ஏறியவர்க்கு ஏற்றமுண்டு.
செகண்ட் க்ளாஸ் லோக்கல்ல
நாலாவது ஸீட்டுல
ஓ..ஹோ..ஹோ...
ஒத்தக்காலு ஒத்தத்தொடையில
ஒய்யாரமா ஒக்காந்து போனதுண்டா...
மூணாமவர் ஸீட்டை அட்ஜஸ்ட் பண்ண,
அந்த ஒத்தத்தொடையும் வழுக்கியதுண்டா...
அது ஒரு வகைய்ல,
அந்த நாலாமர் ஒரு நிகழ்த்தும் கலைஞரே (performing artist).
தலைச் சீவு சீப்பினால நின்றிருக்கும்
மின்விசிறியை
சிடுக்கி விட்டு
ஓடவிடுவது
மும்பைக்கரை யாருண்ணு நெனச்சீங்க.
அவரு ஒரு கலைஞன்.
இத்தனைக்கும் அத்தோட ஸ்விச்சி
ஆன்லத்தான் இருக்கு(ம்).
அந்த கலைஞனை க்ரஷா(crush)வர்னும் கூப்படலாமே.
பின்ன என்னவாம்.
அளவுக்கு மீறி அடைக்கப்பட்ட
லோக்கல் பெட்டியில
எம்மேல இர்க்குர வேர்வை
என்னோடதா?
இல்ல
இன்னொருத்தருதா?
தெரியாது..
க்ரஷ்டு கறிகாய் மாதிரி.
மாலை வீடு திரும்புகையில்
வேற யாரோடையதோ
வேர்வையும்,
பெர்ஃபியூமும்
என்னோடதாகி விடுகிறது.
பெர்ஃப்யூம்னா
வீட்டுக்காரம்மாவின் சந்தேகம் தொடங்கும்.
வேர்வைனா
நம்மளையே துவைக்கச் சொல்லும்..
வீட்டுலேந்து ஆபீஸுக்கும்
ஆபீஸ்லேந்து வீட்டுக்கும்
ப்ரயாணம் ஒரு தவிர்க்க முடியாத சுகம் தான்.
உடல்படும் சுகமோ அலாதி தான்.
வீட்டுலயும் பிரச்சினை
ஆபீஸ்லயும் பிரச்சினை
என்னத்தான் பண்ணுவான் மனுஷன்.
ஆபீஸ்ல
தூக்கமோ!(மா!) வருது
ஆனா
அதுக்கான ஏற்பாடோ அங்கில்ல.
வீட்டிலியோ
அதுக்கான ஏற்பாடு உண்டு.
ஆனா
தூக்கமோ வருவதில்லையே.
ஆனா
இங்க..யோ..
ஏற்பாடும் இல்ல எடமும் இல்ல.
இருந்தும்...
நித்திரை ராணியோ
துளி நேரமும் வீணாக்காது அணைத்திடுகின்றாளே.
எத்தனையோ முறை அந்தேரியில் இறங்க வேண்டிய நான்
வண்டியின் ரிடர்னில் என் ஸ்டேஷனில் இறங்கியுள்ளேன்.
இதுவே
டோம்பிவிலியில் வசிக்கும் என் நண்பன் ரமேஷைக் கேட்டால்..
ஒண்ணும் ப்ராப்ளமே இல்லை யென்பான்.
எத்தனை எக்கி முக்கிப் பிடித்தாலும்
சீட் கிடைப்பதோ துர்லபம்.
உட்காரும் சீட்டு வரிசைகளுக்குள் அடங்கிவிட்டால்
அந்த சுகமே தனிடா மச்சீ.
வண்டி பிகிலடிச்சி கெளம்புமுன்
எனக்கு எல்லா சைடிலும் ஆளுங்க இர்ப்பாங்க.
நீ எங்கயுமே புடிச்சிக்கவும் வேணாம்.
ஜாம் பேக்டு பெட்டி..
பின்ன என்ன?
கண்கள் மூடிக்கொள்ள,
அடுத்த ஒண்ணரை மணிக்கு அசால்ட்டான தூக்கம்...தான்..
என் ஸ்டேஷன்ல எறங்கும்போது ஃபிரஷ்ஷா எறங்கி வீட்டுக்கு நடைதான்.
என்ன
கொஞ்சம் ஜாஸ்த்தி தூங்கிட்டா அரக்கோணம் வந்துடும்னு அவன் போடுவான் கலாய்ப்பு.
இப்டி சொல்லி முடிக்கட்டா
எவன் சொன்னான்
செத்தப்புறமாத்தான்
தூக்க
நாலுபேர் தோள் குடுக்கறாங்கன்னு..
இங்க
மும்பய்க்கருக்கோ
இருக்கும்போதே தூங்க நாலு ஸைடும்
தோள் கொடுத்து விடுகிறார்களே.
Leave a comment
Upload