பஞ்ச மூலகங்களால் ஆன நமது உடலில், அவற்றின் பிரதிநிதிகளைப் போல இலங்கும் விரல்களைக் கொண்டு பலவித முத்திரைகளை செய்து பயன்பெற, நமது முன்னோர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள்
இம்முத்திரையைச் செய்வதற்கான பொது விதிகள் - காலை, மாலை இரு வேளைகளிலும் தரையில் விரிப்பின் மீது நம்மால் இயன்ற அமர்வில் உட்கார்ந்தபடியோ அல்லது பாதங்களை தரையில் பதித்தவாறு நாற்காலியில் அமர்ந்தபடியோ பயிற்சி செய்வது; முத்திரைகளை இரு கைகளிலும் மேல்நோக்கியவாறு தொடையின் மீது வைத்து அமைதியான மனநிலையுடன் செய்வது.
இன்று, ஆங்கிலத்தில் "ஜுபிடர் முத்ரா" என்றழைக்கப்படும் ஆகாய முத்திரையைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த முத்திரை, தைராய்டு சுரப்பியுடனும், விசுத்தி சக்கரத்துடனும், குரு அல்லது வியாழன் கிரகத்துடனும் தொடர்புடையது. ஆகாயம் என்பது பிரபஞ்ச வெளி. இதில் நல்ல மற்றும் தீய எண்ணங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்ற அனைத்தும் உள்ளன. நமது உடலில் ஆகாயத்தன்மை தேவையான அளவில் இல்லாதபோது, பலவித நோய்கள் உருவாகின்றன. இந்த முத்திரையைச் செய்வதால் அவற்றிலிருந்து தீர்வு காணமுடியும்.
இப்போது ஆகாய முத்திரையை எப்படி செய்வது என்று பார்ப்போம். ஆகாயத்தன்மையைக் கொண்ட நடு விரலின் நுனியை படத்தில் காட்டியுள்ளபடி கட்டை விரல் நுனியுடன் லேசாக அழுத்தி வைத்த வண்ணம், சுண்டு விரல், மோதிர விரல் மற்றும் ஆள்காட்டி விரல் ஆகியவற்றை நீட்டியபடி வைத்துக் கொள்ள வேண்டும்.
சிறுவயதிலிருந்தே பெண் பிள்ளைகள் இந்த முத்திரையை காலையும், மாலையும் இரண்டு நிமிடங்கள் செய்து வந்தால், மாதவிடாய் பிரச்சனை அவர்களுக்கு எப்போதும் வராது. மாதவிடாய் தள்ளிப்போவது, மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலி, அதிகமான உதிரப்போக்கு ஆகியவற்றையும் இம்முத்திரை சரிசெய்யும்.
சாதாரணமாக, ஆண்களை விட பெண்களுக்கு, குறிப்பாக வேலை செய்யும் பெண்களுக்கு பொறுப்புகளும், வேலைபளுவும் அதிகம். உடலாலும், மனதாலும் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு மாதவிடாய் சமயங்களில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பானதே. இச்சமயங்களில் காலையில் எழுந்தவுடனேயும், இரவு படுக்கப் போவதற்கு முன்னும் 2 நிமிடங்கள் இம்முத்திரையைச் செய்துவருவது நலம்.
எந்தவித செயலாக இருப்பினும். தொடக்க முயற்சியின் போது எதிர்கொள்ளும் குழப்பங்கள், தடங்கல்கள் நீங்கி உள்ளுணர்வை மலரச்செய்து வெற்றி பெறச்செய்வது மற்றும் லட்சியங்களை நிறைவேற்ற உதவுவது, இந்த ஆகாய முத்திரை என்றால் மிகையாகாது.
இது ஆகாயத்தோடு தொடர்பு கொண்டுள்ளதால், ஒலி சம்பந்தமான காது மந்தம், காது அடைப்பு போன்றவை நீங்கும். அதிர்வு சம்பந்தமான இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம் சீராகும். குருவோடு தொடர்புடையதால், இது குறுகிய எண்ணங்களை மாற்றி விசாலமானதாக்கும். நல்ல எண்ணங்கள் ஏற்பட துணை செய்யும். சிந்தனைகளில் தெளிவு வரச்செய்யும்.
இந்த முத்திரையுடன் சேர்த்து "ஆதித்யாய சோமாய மங்களாய.... எனத்தொடங்கும் நவக்கிரக தோத்திரத்தை சொல்லிக் கொண்டேவர உடல் மற்றும் மன ஆற்றல் அதிகரித்து வாழ்வில் மங்களம் உண்டாகும்.
ஆகாய சக்தி உடலில் குறையும்போது பொதுவாக அகம்பாவம் அதிகரிக்கும். இம்முத்திரை அதை சரிப்படுத்தி மன அமைதியையும், அடக்கத்தையும் கொணரும்.
இதை போன்ற பல அற்புத பலன்களைக் கொண்ட ஆகாய முத்திரையை பயிற்சி செய்து நலமுடன் வாழ்வோம்.
-தொடரும்
Leave a comment
Upload