தொடர்கள்
அரசியல்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்.

20230225092055267.jpg

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ஆம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர் என்று விமர்சித்து பேசினார். இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி சூரத் தலைமை நீதித்துறை மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மோடி என்பது ஒரு சமூகத்தின் பெயர். நம்மூரில் வன்னியர், தேவர், நாடார் போல. இது நரேந்திர மோடியை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு ஒரு ஓட்டு மொத்த சமூகத்தை திருடர்கள் என்று சொல்வது போல.

இந்திய குற்றவியல் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவின் கீழ் ராகுல் காந்தி மீது விசாரணை நடைபெற்றது. 2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் கடந்த 17-ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 23-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மேஜிஸ்ட்ரேட் ஹெச் எச் வர்மா அறிவித்தார்.

இதற்காக மார்ச் 23-ஆம் தேதி ராகுல் காந்தி சூரத் தலைமை நீதித்துறை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.அப்போது நீதிபதி தீர்ப்பை வாசித்தார் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். வழக்கு தொடர்ந்தவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டங்கள் இயற்றும் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி அவருக்கு சட்ட விதிகள் அனைத்தும் தெரியும் அவரே சட்டத்தை மீறி உள்ளார் எனவே அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் இந்த தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் வாதாடும் போது இந்த வழக்கில் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை ராகுல் காந்தி ஊழலுக்கு எதிராகத்தான் பேசியிருக்கிறார் அவர் தன் கடமையை மட்டுமே செய்தார் என்று வாதம் செய்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மேஜிஸ்ட்ரேட் வர்மா ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சார்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மேஜிஸ்திரேட் வர்மா அவருக்கு முப்பது நாள் ஜாமீன் வழங்கி அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நீதித்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு தண்டனை என்றதுமே அவரது எம்பி பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்தது. இது சம்பந்தமாக ஏற்கனவே இதே போன்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. இதன்படி குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம் பி, எம் எல் ஏக்களை தீர்ப்பு வெளியான நாளிலிருந்தே பதவிநீக்கம் செய்யலாம் என்று தீர்ப்பளித்து இருந்தது. இந்தத் தீர்ப்பின் படி தான் சமஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் அவர் மகன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். எனவே ராகுல் காந்திக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தற்சமயம் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே ராகுல் காந்தி எம்பி பதவியை பறிக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவதூறு வழக்கில் வயநாடு தொகுதி எம்பி ஆன ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து மார்ச் 23 முதல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்திருக்கிறார்.

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்ற செய்தி கேள்விப்பட்டதும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு இந்த சட்டப் போராட்டத்தில் தான் பக்க பலமாக இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் டெல்லியில் இருந்த திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலுவை தொடர்பு கொண்ட முதல்வர் சூரத்திலிருந்து டெல்லி வரும் ராகுல் காந்தியை விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்று அவருக்கு நமது ஆதரவை தெரிவியுங்கள் என்று சொல்ல அதன்படி டி ஆர் பாலு டெல்லி விமானத்தில் ராகுல் காந்தியை வரவேற்று சால்வை அணிவித்தார்.

அதேசமயம் இந்த வழக்கு தீர்ப்பு பற்றிய விஷயத்தில் இதுவரை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எந்த கருத்தும் சொல்லவில்லை

மதுபான ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை கைது போன்றவற்றை டெல்லி காங்கிரஸ் தலைவர் சரியான நடவடிக்கை என்று குறிப்பிட்டிருந்தார். ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுக்கும் எதிராக இருந்தது. ஆனால் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்றதும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் இது அரசியல் பழிவாங்கல் என்று ராகுல் காந்திக்கு ஆதரவாக முதல் முறையாக கருத்து தெரிவித்திருக்கிறார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு வாரங்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணிக்கும் அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார் அப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை என்ற தீர்ப்பு வந்ததும் பாரதிய ஜனதா கிரிமினல்களை அமைச்சர்கள் ஆக்குகிறது எதிர்க்கட்சிகளை தகுதி நீக்கம் செய்கிறது என்று ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே இது போன்ற அவதூறு வழக்கு ஊழல் வழக்குகளில் லல்லு பிரசாத் யாதவ் ஜெயலலிதா டி எம் செல்வகணபதி பாலகிருஷ்ண ரெட்டி இது தவிர பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இழந்திருக்கிறார்கள். இது போன்ற வழக்குகளில் மேல் முறையிட்டின் போது கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. இப்போதைய நிலவரம் படி ராகுல் காந்தி எட்டு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான் உண்மை நிலைமை. ஏற்கனவே இங்கிலாந்தில் ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்களுக்கு அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா சொல்லி வந்தது இப்போது அதை சூரத் நீதிமன்றம் நிறைவேற்றி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மேல்முறையீட்டில் ராகுல் காந்திக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறது. அதே சமயம் இந்த அவதூறு வழக்கு அரசியல் தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி இனிமேல் பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் பேசுவார்கள்.

எது எப்படியோ இந்த தீர்ப்பு எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரட்டி விட்டது. இதுவரை ராகுல் காந்தி வேண்டாம் என்று சொன்னவர்கள் கூட காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று சொன்னவர்கள் கூட இந்த தீர்ப்பை விமர்சித்து அரசியல் பழிவாங்கல் என்று ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அதே சமயம் எதிர்க்கட்சியில் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருந்து ஒருவர் எலிமினேட் ஆகியிருக்கிறார்.