தொடர்கள்
இசை
பாட்டும் நானே, பாவமும் நானே -டி .எம். எஸ் - மரியா சிவானந்தம்

20230224181115412.jpg

அக்குரலை யாரால் மறக்க முடியும் ?

நம் தமிழ்த் திரையுலகில் ஒப்பற்ற இசைப் பேரரசனாக, நாற்பது ஆண்டு காலம் பவனி வந்த டி.எம்.எஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டி. எம் சௌந்தரராஜனின் மந்திரக் குரல் மறக்க கூடியதா என்ன ? எத்தனை ஆயிரம் பாடல்கள், எத்தனை விதமான பாவங்கள், எத்தனை விதமான ரசங்களை தன் மாயக்குரலில் படைத்த பாடகர் அவர் .

அக்குரலில் மயங்கி, கிறங்கி, மருகி, உருகி , கண்ணீரில் கரையாதவர் யார். அவர் பாடல் நம்மை அசைத்தது , தாளம் போட வைத்தது , கல் நெஞ்சையும் கரைய வைத்தது. சிந்திக்க வைத்தது, சிரிக்க வைத்தது, பரிதவிக்க வைத்தது. அவர் பாடப் பாட, நாம் காதலில் கலந்தோம். அவர் பாடப் பாட நாம் பாசத்தில் கரைந்தோம் . இம்மண்ணை, மனிதரை ஏன் நம்மை, நாமே நேசிக்க வைத்தன அவர் பாடல்கள்.

.2023022417573109.jpg

எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற மூன்றெழுத்துக்கள் தமிழர் வாழ்வில் ஒரு அங்கம் என்றே சொல்ல வேண்டும். . நம் அரசியல் ,சமூக அமைப்பில் இருவரும் இரண்டற கலந்தவர்கள். குறிப்பாக, திரையுலகின் முடி சூடா மன்னர்களாகவே வாழ்ந்து மறைந்தனர். இருவரின் வளர்ச்சியும் டிஎம்எஸ் என்னும் மூன்றெழுத்து இசைவாணனின் பங்களிப்பின்றி நிகழ்ந்திருக்க வாய்பில்லை.

எம்ஜிஆரின் பிம்பத்தை டிஎம்எஸ் பாடிய திரைப் பாடல் வானளவுக்கு உயர்த்தியது, அரசியல் என்னும் ராஜபாட்டையில் சிவப்பு கம்பளம் விரித்து அழைத்துச் சென்றது .

20230224122425904.jpg

இந்த ஆண்டு டி எம் எஸ் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டு. இவ்வாரம் 24 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது . தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை பொறுப்பேற்று நடத்தும் இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் , சட்டமன்ற ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,தமிழ் ஆர்வலர்கள் ,பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் . அன்று மாலை கலைவாணர் அரங்கில், டிஎம்எஸ் அவர்களின் பாடல்களின் இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக , டி எம் எஸ் வாழ்ந்த இல்லம் இருக்கும் மந்தை வெளி மேற்கு வட்டச்சாலை இனி டிஎம்எஸ் சாலை என்று பெயர் சூட்டப்படும். அதற்கான பெயர்ப் பலகையை முதல்வர் திறந்து வைக்கிறார் .

டிஎம்எஸ் நம் வாழ்வோடு இணைந்த ஒரு பெயர். ஐம்பதுகளில் துவங்கிய அவரது இசைப்பயணத்தில் நாமும் அவரோடு இணைந்தே இருந்தோம் . அவரது பக்தி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகள் நம் கோயில்களிலும் ,வீதிகளிலும் முழங்கிக் கொண்டே இருந்தன. "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன் ",அழகென்ற சொல்லுக்கு முருகா ""ஓராறு முகமும் ,ஈராறு கரமும் ,:"நீ அல்லால் தெய்வமில்லை ,எனது நெஞ்சே நீ வாழும் எல்லை" போன்ற பாடல்களை கேட்க நேர்ந்தால் , கன்னத்தில் போட்டுக் கொண்டு கரம் குவிக்காதவர் யார் ?

20230224122632123.jpg

டிஎம்எஸ் பாடிய திரைப்பாடல்களில் பக்தி ரசம் சொட்ட அமைந்தவை இன்றும் நம் காதுகளில் ரீங்காரம் இடுகின்றன. அருணகிரிநாதரின் 'முத்தை திரு பத்தி திருநகை" பாடல் காலத்தால் அழியாத தேனிசை கானம். அவ்வாறே .திருவிளையாடல், திருமால் பெருமை சரஸ்வதி சபதம் , திருவருட்செல்வர் போன்ற படங்களில் அவர் பாடிய பாடல்கள் தெய்வீகம் மிக்கவை . 'பாட்டும் நானே , பாவமும் நானே' ,'தெய்வம் இருப்பது எங்கே ' "சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே, உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே , "பச்சை மாமலை போல் மேனி " ஆலய மணிக் கதவே தாள் திறவாய்' போன்ற திரைப்பாடல்கள் நம் உணர்வுகளைத் தொட்டன, உள்ளக்கதவுகளைத் தட்டித் திறந்தன ."ஊரிலேன் காணி இல்லை ,உறவு மற்றொருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி "என்று அவர் பாடும்போது உள்ளுக்குள் உடைந்து கண்ணீர் உகுக்காதவர் யார்?

2023022412250263.jpg

தமிழ்ச் சொற்களைக் கடித்து துப்பும் பாடகர்கள் ஒருபுறம், இசைக்கருவிகளின் ஆதிக்கத்தில் மேலோங்க சொற்களைச் சிதைப்பவர் மறுபுறம். இது என்ன பாடல் ? இச்சொல்லுக்கு என்ன பொருள் ?என்று தடுமாறி நிற்கும் நம் போன்றவருக்கு , டிஎம்எஸ்ஸின் படிகம் போன்ற தெளிவான உச்சரிப்பு காதுகளுக்கு இதம்.கனிவும்,கம்பீரமும் அவரது தனித்துவம். சௌராஷ்டிரா குடும்பத்தைச் சார்ந்த டிஎம்எஸ் உச்சரித்த விதத்தில் தமிழே அழகு பெற்றது .

எம் எஸ் விசுவநாதன் , கண்ணதாசன் ,டிஎம் சௌந்தரராஜன் என்ற 'காம்போ' அன்று தமிழன்னைக்கு சூட்டிய பாமலர்களால் தமிழ் வளர்ந்தது .

கம்பர் காவியம் எழுதுகையில் , தமிழ்ச் சொற்கள் அவரைச் சுற்றிக் கொண்டு ," எனை வைத்து எனை வைத்து" என்று கேட்குமாம். அதாவது "என்னை இந்த காவியத்தில் ஏற்று" என்று கேட்பதாக சொல்வார்கள் . டிஎம்எஸ் பற்றிய கட்டுரை எழுதும் நேரத்தில் அவ்வாறே என்னைச் சுற்றி அவர் பாடல்கள் "என்னை எழுது'' கேட்கின்றன ,கட்டளையிடுகின்றன? நான் தடுமாறி நிற்கிறேன், எதை எழுத ,எதை விட என்று ! அத்தனை ஆயிரம் பாடல்களும் முத்தும் , ரத்தினமும் வைரமும் அல்லவா??

டிஎம்எஸ், எம்எஸ்வி, கண்ணதாசன் காம்போ போலவே டிஎம்எஸ்- சுசிலா காம்போவும் சூப்பர் காம்போதான் . பாசமலரில் "நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே..." என்று அண்ணன் தங்கையாக பாசம் ததும்ப பாடியவர்கள் , பாலும் பழத்தில் 'சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை பொருள் என்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலைஏதும் இல்லை விலை , ஏதும் இல்லை...நான் பேச நினைப்பதெல்லாம்..நீ பேச வேண்டும்' என்று உணர்வு பொங்க பாடுவார்கள். பாகப்பிரிவினை, பார்த்தால் பசி தீரும் என்று சிவாஜி பட பாடல்களில் இருவரும் ஈடு ,இணையற்ற ராக ராஜ்ஜியத்தை நடத்தி இருப்பார்கள்.

20230224122540581.jpg

'ராஜாவின் பார்வை ,ராணியின் பக்கம், உள்ளம் என்ற கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா , மானல்லவோ கண்கள் தந்தது , ஹலோ ஹலோ சுகமா , பனி இல்லாத மார்கழியா? "என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்?" இதெல்லாம் எம்ஜியார் படப்பாடல்கள் .இன்னும் ஜெய்சங்கருக்கு, ரவிச்சந்திரனுக்கு, ஜெமினிக்கு, எஸ்எஸ்ஆருக்கு, முத்துராமனுக்கு இன்னும் மற்ற கதாநாயகர்கள் நடித்த படங்களில் இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் பற்றி எல்லாம் எழுதாமல் போனால் இக்கட்டுரை எப்படி முழுமை அடையும் .

அவரது தனிக்குரலில் பாடிய தத்துவப்பாடல்கள் நம்மைத் தேற்றி, அணைத்துக் கொண்ட கீதங்கள் அல்லவா ? கிருஷ்ண விஜயத்தில் பாடத் தொடங்கி எம்ஜிஆருக்கு .சிவாஜிக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நடிகருக்கும் அவர் குரலில் பாடிய டிஎம்எஸ் ஒரு சகாப்தம் . அவர் .எல் ராகவனுடன் தயாரித்து நடித்த 'கல்லும் கனியாகும் 'பாடலில் 'கை விரலில் பிறந்தது நாதம் ,என் குரலில் பிறந்தது கீதம்' என்று பாடுவார் . நாதமும் கீதமும் இணைந்த அந்த மந்திர இசைக்கு மயங்காதவர் இனிதான் பிறக்க வேண்டும் .

"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் ,

இசை வெள்ளம் நதியாக ஓடும்

அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்"

பொங்கி பெருகிப் பாயும் டிஎம்எஸ்சின் பாடல்கள் என்னும் பெரும் வெள்ளத்தில் சிறு சிறு துளிகளேனும் அள்ளித்தருவது என் விருப்பம் .

அடுத்த வாரமும் பகிர்வேன்

-தொடரும்