தொடர்கள்
பொது
வேனில் வாழும் தம்பதி - மாலா ஶ்ரீ

2023002106511193.jpg

பிரான்ஸ் நாட்டின் நான்ட்ஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யானிக் . அந்நாட்டு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி சில்வியனா , மகள்கள் லுனா , மையா , மகன் லியாம்ஆகியோர். 2019-ம் ஆண்டு துவக்கத்தில் ஒரு சொகுசு வேனில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் உலகை சுற்றிவர யானிக் திட்டமிட்டார். இதற்காகத் தான் ஆன்லைன் மூலமாக வேலை செய்வதற்கு நிறுவனத்தின் அனுமதி பெற்றார்.

பின்னர் ஒரு பழைய வேனை வாங்கி, அதில் தனது குடும்பம் வசிப்பதற்கு தேவையான படுக்கை குடில்கள், நவீன சமையலறை, மின் உற்பத்திக்கு சோலார் சிஸ்டம், குழந்தைகள் படிக்க, சாப்பிடுவதற்கு போல்டிங் டேபிள்-சேர், உணவுப் பொருட்கள் மற்றும் குழந்தைகள் கல்வி பெறுவதற்கான நெட்வொர்க் உள்பட பல்வேறு அத்தியாவசிய சொகுசு வசதிகளுடன் யானிக் மாற்றியமைத்தார். பின்னர் 2019-ம் ஆண்டு முதல் தனது குடும்பத்துடன் யானிக் சொகுசு வேனில் சுற்றிவர ஆரம்பித்துவிட்டார்.

முதல் கட்டமாக ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், மொராக்கோ, போர்ச்சுக்கல், துருக்கி, ஜார்ஜியா, அர்மேனியா, இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, கடந்த 3 மாதங்களாக இந்தியாவின் உத்தரப்பிரதேசம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களை யானிக் குடும்பத்தினர் வேனிலேயே சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். தற்போது விசாகப்பட்டினம், ஓங்கோல் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையின் சுற்றுலா நகரான கோவளத்துக்கு வந்து சேர்ந்தனர்.

20230021065610713.jpg

இந்த வேனை கணவர் யானிக், மனைவி சில்வியனா ஆகிய இருவரும் மாறி மாறி ஓட்டி வந்துள்ளனர். இரவு நேரங்களில் தங்களின் சொகுசு வேனில் அமைக்கப்பட்ட படுக்கை அறையில் 3 குழந்தைகளுடன் ஓய்வெடுப்பார்கள். இதுகுறித்து தகவலறிந்ததும் பிரான்ஸ் நாட்டு தம்பதி யானிக்-சில்வியனா தம்பதியை நேரில் சந்தித்து பேசினோம்.

நம்மிடம் பிரான்ஸ் தம்பதிகள் கூறுகையில், " வேனிலேயே உலகை சுற்றத் துவங்கிய நாங்கள், இதுவரை 13 நாடுகளைச் சுற்றி பார்த்துவிட்டோம். தற்போது இந்தியாவில் தாஜ்மஹால், அமிர்தசரஸ் பொற்கோயில் போன்றவற்றை பார்த்து வியந்தோம்.

எங்களிடம் மத்தியப் பிரதேச மாநில மக்கள் பேசத் தயங்கினர். எனினும், ஆந்திரா மற்றும் தமிழக மக்கள் நட்புரிமையுடன் நெருங்கி பழகுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழ்நாடும் அம்மாநில மக்களின் பழகும் தன்மையும் ஆங்கிலப் பேச்சு திறனும் சிறப்பாக உள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்தவரை போகக்கூடாத நாடுகள் பட்டியலில் இரான், இராக், துருக்கி, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் பட்டியலில் இருந்தன. ஆனால், இங்கு வந்தபிறகுதான் இந்தியா எவ்வளவு அருமையான நாடு என்பதைப் புரிந்து கொண்டோம்.

ராஜஸ்தானில் கோட்டைகளை பார்த்து பிரமித்துவிட்டோம். இந்தியாவைப் பற்றி நாங்கள் கற்றது வேறு, இங்கு நேரில் அறிந்தது வேறு. இந்திய மக்கள் 'ஏதாவது உதவி வேண்டுமா?' எனக் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். பிரான்ஸ் நாட்டின் பிரபல வேனை, நாங்கள் பயண வசதிக்காக சிறிது மாற்றிக் கொண்டோம். எனது மனைவி எழுத்தாளரும்கூட! அவர், ஆன்லைன் தளங்களில் பல்வேறு கதை, கட்டுரைகளை எழுதி வருவாய் ஈட்டி வருகிறார். நானும் ஆன்லைன் மூலமாக வேலை பார்த்து வருகிறேன்.

எங்களுக்கு கிடைக்கும் வருவாயைக் கொண்டு, வேனில் உலக நாடுகளை குடும்பத்துடன் சுற்றி வருகிறோம். எங்களின் 3 குழந்தைகளுக்கு பிரான்ஸ் நாட்டுக் கல்வியை ஆன்லைனில் கற்றுத் தருகிறோம். அவர்களுக்கு புத்தகத்தில் இருப்பதைவிட, இந்த உலக சுற்றுலா மூலமாக ஏராளமான அனுபவம் கிடைக்கிறது. இதனால் அவர்களின் கல்வியும் பாதிக்கவில்லை. வீடு, ஊர், மாத ஊதியம் ஆகியவற்றில் இருந்து தற்காலிக விடுதலை பெறவே, இந்த உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இரவு நேரங்களில் எங்காவது பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, வேனை வீடாக மாற்றி, நாங்கள் அனைவரும் ஓய்வெடுப்போம். அங்கு சில நாட்கள் தங்கி, முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கிய அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு, அடுத்த ஊருக்கு கிளம்பிவிடுவோம். நாங்கள் முட்டை உள்பட சுத்த சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவோம். எனினும், எங்களுக்கு துருக்கி, பாகிஸ்தான் நாடுகளில் சைவ உணவு கிடைக்கவில்லை. இதனால் எங்களிடம் இருந்த ரொட்டி, பிஸ்கெட் போன்றவற்றை வைத்து சமாளித்தோம்.

இந்தியா உள்பட 13 நாடுகளிலும் எங்களின் பாதுகாப்பில் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. எப்போது, எங்கு முடிப்போம் எனத் தெரியாது. எங்களுக்கு இதுவரை பயணம் போரடிக்கவில்லை. நாங்கள் சந்தித்த பல்வேறு நாட்டு மக்கள், பலவகை உணவுகள் என வேறுபாடுகளுடன் பயணித்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு பணம் ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை. நல்ல மனிதர்களை சந்தித்த திருப்தி.

இந்தியாவில் உணவு காரமாக இருக்கும் என படித்திருக்கிறோம். ஆனால், பஞ்சாப்பில் ரொட்டியுடன் பச்சை மிளகாயை கடித்து சாப்பிடுகின்றனர்.

அது எங்களால் முடியாது. மற்றபடி, இந்திய உணவுகள் செம டேஸ்ட்! இம்முறை எங்களால் கோவா, மங்களூர், கேரளா செல்ல முடியாது. அடுத்த முறை கோவா செல்வோம். இதுவரை எந்தவொரு நாட்டின் தலைவர்களையும் சந்தித்தது இல்லை. அதற்கு பதிலாக, அந்தந்த நாட்டு மக்களை சந்தித்து பேசி வருகிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்!" என பிரான்ஸ் தம்பதி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அதான உள்ளூர்ல ஓட்டு இல்ல. இவர்களை எந்த அரசியல் தலைவர் சந்திப்பார் ?????

பயணங்கள் எப்போதுமே அலாதியானவை. அதிலும் இப்படிப்பட்ட வித்தியாசமான உலகப் பயணம் ரொம்பவே அலாதியானது.

எல்லோருக்கும் இப்படி கொடுப்பினை அமைவதில்லை. !!!