தொடர்கள்
பொது
சர்வ கட்சி கல்யாண அழைப்பிதழ் பேனர். - மாலா ஶ்ரீ

20230021063200574.jpg

தமிழகத்தில் பொதுவாக கல்யாணம், காதுகுத்து, பெயர் சூட்டு விழா, மஞ்சள் நீராட்டு விழா உள்பட பல்வேறு முக்கிய கட்சி நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்கள் தொடர்பான விளம்பர பேனர்களில் அந்தந்த கட்சி தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் உருவங்கள் இடம்பெறும். ஒருசிலர் தங்களுக்கு பிடித்த நடிகர்-நடிகைகளின் போட்டோக்களை வைத்து பேனர் அடிப்பார்கள்.

சில சமயம், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் போட்டோக்களை போட்டு நிரப்பிவிடுவர். அம்மாதிரி பேனர்களில் நண்பர்களின் மனக்கோட்டைகளில் புதுசு புதுசாக யோசித்து மலர்ந்த வசனங்கள் காண்போரை திக்குமுக்காட வைத்துவிடும். கடந்த சில வருடங்களாக, இந்த பிளக்ஸ் பேனர் வைப்பதிலும் புதுமையும் வித்தியாசமும், ரகம் ரகமாக வாசகங்களை சிந்தித்து, அதில் பதிவிடுகின்றனர்.

இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக, கடந்த 2 நாட்களுக்கு முன் நெல்லை, பேட்டை பகுதியில் நடைபெறவிருக்கும் திருமணத்துக்கு வரவேற்பு தெரிவித்து, நெல்லை பேருந்து நிலையம் அருகே மறைந்த மற்றும் இந்நாள் அரசியல் தலைவர்களை ஒருங்கிணைந்து நிற்கும் ஒரு பிரமாண்ட பிளக்ஸ் பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

அந்த பேனரில், முதலாவதாக மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி, அதற்கடுத்து வரிசையாக இந்நாள் அரசியல் தலைவர்கள் சுப்பிரமணியன் சுவாமி, ராகுல்காந்தி, பிரதமர் மோடி, தயாநிதி மாறன் எம்.பி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, சோனியாகாந்தி, சந்திரலேகா, வைகோ எம்.பி, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, அவரை ஒட்டியபடி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வரவேற்று பிளக்ஸ் பேனரில் அச்சிடப்பட்டுள்ளது.

அதன்கீழ் 'திருமண விழாவுக்கு வருகை தரும் அனைத்து தலைவர்களையும் வருக வருக வருக என வரவேற்கிறோம்' என்று கோ.மா.காளிதரண், கோ.ம.காளிச்சரண் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், மணமக்களின் பெயர், திருமணம் நடைபெறும் தேதி, கிழமை, நேரம் மற்றும் திருமண மண்டபத்தின் பெயர், விலாசம் போன்ற தகவல்கள் 'மிஸ்ஸிங்'! ஒருவேளை, பிரமாண்ட வரவேற்பு பேனரில் அதற்கு இடமில்லையோ?

இந்த பிளக்ஸ் பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகும் பரவியதைத் தொடர்ந்து, தற்போது 'தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தி.க. தலைவர் வீரமணி, நாம் தமிழர் சீமான், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட ஒருசில முக்கிய தலைவர்களின் படங்களை ஏன் போடவில்லை?' என அனைத்து டீக்கடைகளிலும் ப(வெ)ட்டிமன்ற விவாதங்கள் நடத்தி பலர் 'பிளக்ஸ் பேனர்' சூடு ஏற்படுத்தி வருகின்றனர்.

கலகலப்ரியன்

என்பவர் பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது..

காளிதரண் நிஜமாகவே எந்த கட்சியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.. ஆனால், அனைத்து கட்சி தலைவர்களையும் ஒரே பேனருக்குள் கொண்டுவந்து 'நிறுத்தி', பலரையும் மலைக்க வைத்துள்ளார்.. 'அனைத்து கட்சி கூட்டம் கேள்விப்பட்டுள்ளோம், இதென்ன அனைத்து கட்சி கல்யாணம்? என்று காண்போர் வியந்து பார்க்கிறார்கள்.. ஆனால், பொண்ணு, மாப்பிள்ளைதான் யார் என்று தெரியவில்லை.. அவர்களின் போட்டோவும் அந்த பேனரில் காணப்படவில்லை.

இணையத்தில் இந்த பேனர் வரவேற்பை பெற்று வந்தாலும், சிலர் இந்த போஸ்டரை பார்த்துவிட்டு, ஐயோ, என் தலைவன் சீமான் எங்கே? தினகரன் எங்கே? டாக்டர் ஐயாவை காணோமே? எங்க கேப்டன் இல்லாமல் கல்யாணமா? என்று உரிமையுடன் கேட்டு அந்தந்த கட்சிக்காரர்கள் தங்கள் தலைவர் குறித்து கேட்டு வருகிறார்கள். உரிமையுடன் தொண்டர்கள் கேட்கும் இந்த கேள்விக்கு, கல்யாண வீட்டுக்காரர் காளிதரண்தான் பதில் சொல்ல வேண்டும்..!!!!

யாருப்பா அந்த காளிதரண் ????