தொடர்கள்
ஆன்மீகம்
பாரதத்தின் மலைக் கோவில்கள் ! - 12 உரவபாறா மலை, கேரளா!! பிறவிப் பயன் தரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஆரூர் சுந்தரசேகர்.

உறவபாறா மலை

பாரதத்தின் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா அருகே உள்ள ஓலமட்டத்தில் மலையாள பழனி (கேரள பழனி) என்று அழைக்கப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி (150 மீ) உயரத்தில் ஒரு பெரிய பாறையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான் 'பால சுப்பிரமணியர்' வடிவில் இருக்கிறார். இங்குள்ள சிலை சுயம்புவாக ஸ்வயம்புவாக உருவானது என்று புராணம் கூறுகிறது
பழமையான இந்த கோயிலில் தேவர்கள், சித்தர்கள் இங்கு வந்து பூஜைகள் மற்றும் சடங்குகளைச் செய்ததாக நம்பப்படுகிறது.

ஸ்தல வரலாறு:

உறவபாறா மலை


பாண்டவர்கள் வனவாசத்தின் போது பாண்டவர்களும் அவர்களது மனைவி திரௌபதியும் பன்னிரண்டு ஆண்டுக்காலம் இங்குத் தங்கியிருந்ததாகவும், தருமர் இங்கு சிவபூஜை செய்ததாகவும் நம்பப்படுகிறது. மலை மேல் மூன்று பெரிய கற்பாறைகள் உள்ளன, அவை அவர்களின் சமையலறையின் அடுப்பின் மூன்று கால்கள் என்று கூறப்படுகின்றது. இவர்கள் இங்கு இருக்கும்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும், அப்போது பாண்டவர்களிடையே வலிமை வாய்ந்த பீமன், கடினமான பாறையின் மீது தனது கால்களை வலுவாகத் தேய்த்து, ஒரு நீரூற்றை உருவாக்கினார். அதுவே பீம பாத தீர்த்தம் என்ற சிறிய குளமாகும். பீமனின் படைப்பால் உருவான குளமே உரவப்பாறை என்றும் கூறுகின்றனர். மேலும் சிலர் பாறைகளில் இருந்து பாயும் அபிஷேக தீர்த்தம் என்பதாலேயே இக்கோயிலுக்கு உரவப்பாறை என்று வந்ததாக சொல்கின்றனர்.

உறவபாறா மலை

கோயில் சிறப்பு:
பல ஆண்டுகளுக்குப் பிறகும், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள், உரவபாறா சுப்பிரமணிய சுவாமியை உபாசனமூர்த்தியாகக் கருதி, கோயில் திருவிழாவின் போது மலையில் ஏறித் திரும்புவது இன்றும் தொடர்கிறது. திருவிழாக் காலங்களில், பக்தர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த உதவும் பொருட்களைப் பிரசாதமாகச் சமர்ப்பிப்பார்கள்
விழாவையொட்டி இங்குக் கலசம், காவடி, சிறப்புப் பூஜைகள், அபிஷேகம் போன்றவை நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் முக்கியமான பிரசாதமாக உப்பு மற்றும் மிளகு அளிக்கப்படுகின்றது

கோயில் அமைப்பு:

உறவபாறா மலை


இந்த உரவபாறா சுப்பிரமணிய சுவாமி கோயில் பாரம்பரிய கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை அடைய இரண்டு வழிகள் உள்ளன.
1.பாறைகள் வழியாக, நல்ல உடல் நிலையில் இருந்தால், கீழே இருந்து பாறைகள் வழியாக நடக்கலாம், பிடித்துக்கொள்வதற்குப் பாறை நடுவில் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
2.ஒரு குறுகிய சாலை வழியாக, இந்த குறுகிய சாலை வழியாக இரு சக்கர வாகனம், கார்கள் செல்லலாம். சூரிய உதயத்தையும் சுற்றிலும் உள்ள மூடுபனி மலைகளையும் காண அதிகாலையில் இங்குச் செல்ல சிறந்த நேரம். மேலும் அந்த நேரத்தில் மிகவும் குளிராக இருக்கும், பின்னர் சூரியன் உதிக்கும் போது அது மிகவும் சூடாக இருக்கும். இக்கோயிலில் ஶ்ரீ சுப்பிரமணியர் பிரதான சந்நிதியும், தர்மசாஸ்தா, கணபதி மற்றும் பிரம்மராட்சதர் ஆகியவர்களுக்குத் தனி சந்நிதி உள்ளன.

உறவபாறா மலை

திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆண்டுதோறும் மகரமாதம் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறும். விழாவையொட்டி கலச, காவடி ஊர்வலம், சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடக்கிறது.

கோயில் திறக்கும் நேரம்:
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
காலை 06:30 முதல் காலை 09:30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்
ஞாயிற்றுக்கிழமை: காலை 06:00 முதல் காலை 10:00 வரை. விசேஷ நாட்களில் மட்டுமே நீண்ட நேரம் திறந்திருக்கும்.

கோயிலுக்குப் போவது எப்படி:
அருகிலுள்ள பேருந்து நிலையம் - தொடுபுழா
அருகிலுள்ள இரயில் நிலையம் - தொடுபுழா
அருகில் உள்ள விமான நிலையம் - கொச்சி
தொடுபுழாவிலிருந்து உரவபாறா மலை 3 கி.மீ தூரத்தில் உள்ளது
தொடுபுழா கொச்சி மாநகரில் இருந்து 58 கி. மீ தூரத்தில் உள்ளது

முகவரி:
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில்.
ஒலமட்டம், தொடுபுழா, இடுக்கி , கேரளா - 685584, இடுக்கி, கேரளா, இந்தியா

பிறவிப் பயன் தரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை
வழிபட்டு அருள் பெறுவோம்!!