காசி என்றதும் நினைவுக்கு வருவது விஸ்வனாதர், அதாவது சிவன். அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றே நமது தமிழகத்தில் தோன்றி தமிழ் வளர்த்த நால்வரான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் முதலாய் சிவனோடே ஒன்றிய ஒரு அறுபத்து மூன்று நாயன்மார்கள் உணர்ந்துய்த்து கொண்டாடினர்.
சிவன் தான் தமிழைத் தோற்றுவித்தவர்.
அவரே முதல் தமிழ் சங்கத்தின் தலைவனும் .
தென்னக கல்யாணங்களில் காசி யாத்திரை என்ற ஒரு சடங்கும் ஒன்று உண்டு.
தமிழ் பிராமணர்களின் திருமணச் சடங்குகளில் மிகவும் பிரபலமானது இதுஅங்கு மணமகன் மேற்படிப்புக்காக காசிக்குச் செல்கிறார், மணமகளின் தந்தை தனது மகளைத் திருமணம் செய்து க்ரஹஸ்த்தனாகக் குடியேறும்படி அவரை வேண்டிக்கொள்கிறார். அதன் பிறகுதான் திருமணச் சடங்குகள் தொடங்கும். இது காசி யாத்திரை என்று அழைக்கப்படுகிறது, உயர்கல்விக்கான இடமாக காசி மீது தமிழர்கள் கொண்டிருந்த மரியாதைக்கு சான்றாக இன்றும் நிற்கிறது.
இந்தியர்களிடையே ஒரு வழக்கம் தொன்று தொட்டு வருவது, ஒருவரது வாழ் நாளில் ஒரு முறையேனும் காசி-ராமேஸ்வரம் யாத்திரை சென்று வருவது. அதிலும் இது தமிழக மக்களிடையே மிகவும் ஆணித்தரமாக உள்ள ஒன்று.
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பை நமது இலக்கியங்கள் என்ன கூறுகிறது ?
காசியை பனாரஸ் மற்றும் வாரணாசி என்றும் குறிப்பிடுவதுண்டு. பல நூற்றாண்டு காலமாகவே காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு வரலாறு, வழிபாடு, பண்பாடு மற்றும் மொழி ரீதியிலான தொடர்புகள் உள்ளன.
தலைவி - தோழி உரையாடலில் வாரணாசி
சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில் கபிலர் எழுதிய பாடல் ஒன்றில் வாரணாசி பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது.
எட்டுத்தொகை நூல்கள் கி.மு காலகட்டத்தைச் சேர்ந்தவை.
கலித்தொகையில் 60ஆம் பாடலில் தலைவி தன் தோழியிடம் கூறுவது போல பின்வரும் வரிகள் உள்ளன.
''தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு நீ
வாரணவாசிப் பதம் பெயர்த்தல் ஏதில
நீ நின்மேல் கொள்வது எவன்?''
இந்தக் குறிஞ்சித் திணை பாடல் தலைவியும் அவளது தோழியும் தலைவன் குறித்து பேசும் ஒரு காதல் தன்மையுள்ள பாடல்தான். ஆனால், 'வாரணாசி செல்வோர்க்கெல்லாம் முக்தி கிடைப்பதைப் போல' என்று பொருள்படும் வகையிலான ஓர் உவமை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'வாரணவாசி' எனும் இந்தச் சொல் வாரணாசி / காசியைக் குறிக்கிறது.
திருநாவுக்கரசரின் வாரணாசி பயணம்
நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தமிழ் உலகில் சைவ சமயம் சார்ந்த பக்தி இயக்கத்தை பரப்பிய சிவனடியார்களுள் முக்கியமானவர். சைவர்களின் கடவுளான சிவபெருமானே வாரணாசியில் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் வணங்கப்படுகிறார்.
12ஆம் நூற்றாண்டில் சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரிய புராணம் திருநாவுக்கரசரின் வரலாற்றைப் பற்றிக் கூறும்போது காசியை 'வாரணாசி' என்ற பெயரில் குறிப்பிடுகிறது.
அன்ன நாடு கடந்து கங்கை
அணைந்து சென்று வலம் கொளும்
மின்னு வேணியர் வாரணாசி
விருப்பினோடு பணிந்து உடன்
பின் அணைந்தவர் தம்மை அங்கண்
ஒழிந்து கங்கை கடந்து போய்
மன்னு காதல் செய் நாவின்
மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார்
''கங்கையாறு வந்து சென்று வலமாக வரும், ஒளி நிறைந்த சடையுடைய சிவ பெருமான் எழுந்தருளிய வாரணாசியை விருப்பத்துடன் வணங்கிவிட்டு, தம்முடன் வந்த அடியவர்களை அவ்விடத்தில் விட்டுவிட்டு, கங்கைக் கரையைக் கடந்து, பொருந்திய காதல் செய்யும் திருநாவுக்கரசர், கல் நிரம்பிய மலைக் கானல்களைக் கடந்தார்,'' என்று திருநாவுக்கரசரின் பயணத்தை இந்தப் பாடல் விவரிக்கிறது.
முருகனைப் போற்றிய திருப்புகழில் 'காசி'
தமிழ்நாட்டில் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ், தமிழ் மொழியில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்களில் மிகவும் முக்கியனவற்றுள் ஒன்று.
‘’கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறை
மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்
பங்கப் படமிசை யேபனி போல்மதம்
வந்துட் பெருகிட வேவிதி யானவ’’
என்ற பாடலில் 'காசி' குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்புகழ் முருகக் கடவுளைப் போற்றி எழுதப்பட்ட இலக்கியம். இதில் முருகனின் பிறப்பைப் போற்றும் அருணகிரிநாதர், 'காசியில் முதன்மையாக அமர்ந்திருக்கும் கடவுளும் அவரது மனைவியும்' பெற்றெடுத்த மகன் என்று முருகனைப் பற்றிக் குறிப்பிடும்போது முருகனின் தந்தையாகக் கூறப்படும் சிவன் இருக்கும் ஊராக காசியைக் குறிப்பிட்டுள்ளார்.
பத்தாம் நூற்றாண்டு சித்தர் பாடல்
பதினெண் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் கி.பி. பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்தவர். அவர் எழுதிய பாடல்களின் தொகுப்பான சிவவாக்கியம் எனும் நூலில் காசி குறிப்பிடப்பட்டுள்ளது.
''ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம் வெளியதான சோதிமேனி விசுவநாத னானவன் தெளியுமங்கை யுடனிருந்து செப்புகின்ற தாரகம் வெளிதோர் ராமராம நாமமிந்த நாமமே.''
ஒளி நிறைந்த காசி நகரில் உள்ள விஸ்வநாதன் என்று சிவபெருமானைப் போற்றி சிவவாக்கியர் இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
'சித்தர் வாக்கு; சிவன் வாக்கு' என்றே தமிழில் ஒரு பிரபலமான சொல் இருக்கிறது. அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவரே சிவன் குறித்து பாடிய பாடலில் காசியைச் சுட்டியுள்ளார்.
தேவாரத்தில் வாரணாசி
வாரணாசி அப்பர் மற்றும் சுந்தரர் தேவாரத்தில் வைப்புத் தலமாக குறிப்பிடப்பட்டுள்ள தலமாகும். ஒரு குறிப்பிட்ட தலத்தைப் பற்றிப் பாடாமல், பாடல்களுக்கு இடையே சுட்டப்படும் தலங்கள் வைப்புத் தலங்கள் எனப்படுகின்றன.
சம்பந்தரின் 2ஆம் திருமுறையில் 39ஆம் பதிகத்தில் 7-வது பாடலில் காசி பற்றிய குறிப்புள்ளது.
''மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும்
கோட்டூர் திருவாமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திருக் குணவாயில்.''
எனும் பாடல் சிவ பெருமானுக்கு கோவில் உள்ள ஊர்களில் வாரணாசியும் ஒன்று எனக் குறிப்பிடுகிறது.
திருநாவுக்கரசரின் 6ஆம் திருமுறையில் 70ஆம் பதிகத்தில் வாரணாசி பற்றி குறிப்பிடப்படுகிறது. எந்தெந்த ஊர்களில் கயிலாயநாதன் என்று அழைக்கப்படும் சிவபெருமானைக் காணலாம் என்று கூறப்படும் பட்டியலில் தேவாரம் வாரணாசியையும் குறிப்பிடுகிறது. அந்தப் பாடல் கீழ்வருமாறு.
''மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே.''
இங்கே தொகுக்கப்பட்டுள்ளவை பரவலாக அறியப்பட்ட சில இலக்கியச் சான்றுகள் மற்றும் புராணத் தகவல்கள் மட்டுமே. வேறு பல இலக்கியங்களில் காசி / வாரணாசி பற்றிய குறிப்புகள் உள்ளன.
அடுத்த இதழில் வரலாற்றுப்பின்னணி...
Leave a comment
Upload