தொடர்கள்
பொது
21ம் நூற்றாண்டின் பெரும் அவமானம்....– ஆர் .ராஜேஷ் கன்னா

சென்னையில் IPAB முதன்மை தீர்ப்பாயம் கலைப்பு ஏன்?!

20210316143020376.jpg

அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட 9 மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள், அவசர சட்டம் மூலம் மத்திய அரசு அதிரடியாக கலைத்துவிட்டது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகம் பிடித்துள்ள நிலையில், மத்திய அரசின் அவசர சட்டம் முலம் 9 தீர்ப்பாயங்கள் கலைக்கப்பட்டது பலவிதமான கேள்விகளை, கல்வியாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களிடையே எழும்பியுள்ளது.

இந்தியாவின் புராதன பொருட்கள், காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தமிழகத்தின் பாரம்பரிய தயாரிப்புக்கள், வணிக சின்னம் என பலவும் காப்புரிமை பெற்றுள்ளது.

வணிக சின்னங்கள், காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இந்தச் சின்னங்கள் மற்றும் காப்புரிமை பெற, அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயங்களை அணுக வேண்டும். இந்த தீர்ப்பாயங்கள் எல்லா மாநிலத்திலும் செயல்படுகிறது. இந்த தீர்ப்பாயங்கள் அளிக்கும் தீர்ப்பினை, மேல்முறையீடு செய்ய... சென்னை மற்றும் மும்பாய் தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வந்தது.

20210316143046645.jpg

அறிவு சார் சொத்துரிமை தீர்ப்பாயத்தில் பதிப்புரிமை, காப்புரிமை, வர்த்தக முத்திரைகள் மற்றும் வர்த்தக ரகசியங்கள்(Copyrights, Patents, Trademarks, and Trade Secrets) - நான்கு வகையான அறிவுசார் பண்புகள் (Intellectual Properties) வழக்குகளை விரைவாக விசாரிக்க மாற்றுமுறை, வேகமான நீதி பரிபாலனம் மூலம், எளிதாக தீர்வு கிடைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்டதுதான் இந்த அமைப்புகள்.

அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (Intellectural Property Appeals Board – IPAB) வழக்குகளை நீதித்துறை உறுப்பினர்கள், தொழில்நுட்ப உறுப்பினர்கள் இணைந்து விசாரித்து தீர்ப்பளிப்பார்கள் என்பதால் சர்வதேச அளவில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முக்கியதுவம் பெறுகிறது.

2003,செப்டம்பர் 15, வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமை (intellectual property Act) வழக்குகளை விசாரிக்கும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு சென்னையில் அமைய, அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன் பெரும் முயற்சி மேற்கண்டார். அதைத் தொடர்ந்து, இந்த முதன்மை அமர்வு, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் உத்திரவின் பேரில் திறக்கப்பட்டது.

கடந்த ஆண்டு…. சென்னை, அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வால் வழங்கப்பட்ட ஓரு வழக்கின் தீர்ப்பின் மேல்முறையீடு, டெல்லி உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு சென்றது.

சென்னையில் இயங்கி வரும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்ப்பாயத்துக்கு சென்று வாதாட யாரும் விரும்பவில்லை. அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்ப்பாயம் அமர்வை, நிர்வாக ரீதியாக அமைப்பதற்கு சென்னை உகந்த இடமில்லை, எனவே சென்னையில் தற்போது இயங்கும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்பாயத்தினை, நாக்பூர், ஜபல்பூர், போபால் என ஏதாவது மத்திய நகரில் ஏன் இந்த அமர்வை மாற்றி அமைக்கக் கூடாது... அல்லது இந்த நகரங்களில் புதிய அமர்வையாவது அமைக்க வேண்டும் என்று வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு, அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலை பார்த்து கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது, சென்னையில் இயங்கும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்ப்பாயம் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் சொல்லும் இடங்களுக்கு மாற்ற முடியாது, அரசியல் சாசன உயர்மட்ட அமர்வுகள் சென்னையில் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த அமர்வின் தலைவராக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஓருவரை நியமிக்கலாம் என அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் உச்சநீதிமன்ற அமர்விடம் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலின் பதிலில் நீதிபதிகள் திருப்தியடையடையவில்லை. மேலும் விசாரணையில், சென்னையில் இயங்கும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்ப்பாயத்திற்கு தலைவராக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஓருவரின் பெயரை இரண்டு வாரங்களுக்குள் பரிந்துரைக்குமாறு அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலுக்கு உச்சநீதிமன்றம் மற்றொரு ஆலோசனையை வழங்கியது.

சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால், சென்னையில் இயங்கும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் பெயரை உச்சநீதிமன்றத்திற்கு, அரசு உரிய காலத்திற்குள் பரிந்துரைக்கவில்லை என்ற அரசல் புரசலான செய்தி வெளியாகியது.

ஓரு வருடம் முழுவதுமாக கடந்தும், சென்னையில் இயங்கும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்ப்பாயத்தின் தலைவராக யாரும் நியமிக்கபடவில்லை. இதனால் தீர்ப்பாயத்தின் பணி வெகுவாக பாதித்து இருந்தது. தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்து இருந்தவர்கள், விரைவில் தீர்ப்பாயத்தின் தலைவர் நியமிக்கபடுவார் என்ற நம்பிக்கையில் காத்து இருந்தனர்.

இந்த மாதம் ஏப்ரல் 4 தேதி, செயல்படாமல் இருக்கும் 9 தீர்பாயங்கள் கலைக்கப்படுவதாகவும், அதில் சென்னையில் இயங்கும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்ப்பாயமும் ஓன்று என மத்திய அரசின் அறிவிப்பு வெளியானது.

நாடு முழுவதும் விரைவாக வழக்குகளை முடிக்க மாற்று முறை நீதிப்பரிபாலனத்தில், தீர்ப்பாயங்கள் துவக்கி வைக்கபட்டு பல்வேறு வழக்குகள் வேகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இயங்கும் அறிவுசார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்ப்பாயத்தில், கடந்த ஒரு வருடமாக காலியாக இருக்கும் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கிடைக்கவில்லை என்ற காரணம் மத்திய அரசால் சொல்லப்பட்டது. அத்துடன் வழக்கு நடத்தும் முறை பற்றியும், வழக்காடிகள் குறைசொல்லி, புகார் அனுப்ப ஆரம்பித்தனர் என்ற மற்றொரு காரணம் சொல்லப்பட்டது.

சென்னை மற்றும் மும்பையில் இயங்கி வந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை அடியோடு கலைத்து, இதில் நடக்கும் வழக்குகளை அருகிலிருக்கும் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும், லோக் சபா மசோதா முன்மொழியப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலொடு அமலுக்கு வந்தது. தீர்ப்பாயங்கள் கலைக்கப்பட்டால், நாட்டிலுள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரித்து தேங்கிவிடும் அபாயம் உள்ளது என சட்ட வல்லுநர்கள் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவிக்கிறார்கள்.

20210316143154327.jpg

மத்திய அரசின் 9 தீர்ப்பாயங்கள் கலைக்கப்படுவது பற்றி பிரபல வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமுர்த்தியிடம் கேட்டோம்...

அவர்… “உயர்நீதிமன்றங்களின் வேலையை குறைத்து, விரைவாக நீதிபரிபாலனம் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டது. Intellectural Property act, Income tax Act, company Law என்பது domain. இதில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க தான் தீர்ப்பாயம் செயல்படுகிறது. மும்பை மற்றும் சென்னையில் இயங்கும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்ப்பாயம் செயல்பட்டு வந்தது. சென்னையில் இருக்கும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் மேல்முறையீட்டு (ஐ.பி.ஏ.பி.) முதன்மை அமர்வு தீர்ப்பாயத்துக்கு தகுதியான தலைவரை நியமிக்க முடியவில்லை என்று கூறுவது 21ம் நூற்றாண்டின் பெரும் அவமானம்.

வெளிநாடுகளில், ஒரு பதவியில் இருப்பவர் பதவி காலம் முடியும் முன்பே, அந்தப் பதவியை வகிக்க தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து நியமித்து கொள்வார்கள். இந்தியாவில், இந்த நடைமுறை இல்லாதது வேதனையான விஷயமாக உள்ளது. வெளிநாடுகளில் ஒரு பதவிக்கு தகுதியான ஆட்களை நியமிக்க முன்று முறைகளை கடைபிடிக்கிறார்கள். Proactive என்பது வருவதற்கு முன்பு செயல்படுதல், reactive வந்தபின் செயல்படுதல், inactive வருமுன்னும் காக்காமல், வந்தபின்பும் காக்கமாட்டார்கள். இதில் இந்தியா, inactive முறையில் தகுதியான நபர்களை உரிய பதவிக்கு நியமிக்காமல், இங்கு நடக்கும் வழக்குகளை மீண்டும் உயர்நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பினால், காலதாமதம் ஏற்பட்டு தீர்வு கிடைக்க அதிக நாட்கள் ஆகும். இதனால் ஊழல் தலைவிரித்தாடும் நிலை ஏற்படும். மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில், question of lawவை தான் நீதிமன்றம் சீர்தூக்கி பார்க்கும். மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள், சட்டவல்லுநர்களாக இருப்பதால், எளிதாக நீதிபதிக்கு தெளிவான சட்ட நுணுங்களை சொல்லி, வழக்கை விரைவில் முடிக்க ஏதுவாக இருக்கும். தற்போது தீர்பாயங்கள் கலைக்கப்பட்டதால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தீர்ப்பாயம் பழையப்படி செயல்பட வழக்கு தொடுக்கலாம்.

9 தீர்ப்பாயங்களை மத்திய அரசு கலைப்பதற்கு பதில், மேலும் பல தீர்ப்பாயங்களை நாடு முழவதும் வேகமாக போர்க்கால அடிப்படையில் கூடுதலாக அமைத்து கொடுத்தால், நிலுவையிலுள்ள வழக்குகளெல்லாம் கூட, வேகமாக தீர்ப்பளிக்கப்பட்டு முடிக்கப்படும் நிலை வரும்.

சினிமாட்டோகிராப் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதும் தவறானது. சிறிய பிரச்சனைகலுக்கெல்லாம் தீர்ப்பாயத்தில் எளிதாக தீர்வு கண்டு விடலாம். தீர்பாயங்கள் கலைக்கப்பட்டு, மீண்டும் உயர்நீதிமன்ற விசாரணைக்கு சென்றால், நகத்தை வெட்ட கொடாரி கொண்டு தாக்குவது போல் ஆகிவிடும். மொத்தத்தில் நீதி பரிபாலனத்தினை, இது போன்ற தீர்ப்பாயங்கள் கலைக்கப்படுவதால்... வழக்காடிகளுக்கும், உயர்நீதிமன்றங்களுக்கும் தான் அதிக சிரமம் ஏற்படும் என்றார்.

கடந்த பிப்ரவரி 4, 2020, எம்.பி. வை.கோ. - சென்னையிலுள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சிகள் நடக்கிறதா என மாநிலங்கவையில் கேள்வி எழுப்பினார்.

சென்னை, அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தலைமையிடத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் மத்திய அரசிற்கு இல்லை என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் வை.கோ-வின் கேள்விக்கு பதிலளித்தார்.

அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்பட 9 முக்கியத் தீர்ப்பாயங்களை அவசர சட்டத்தின் மூலமாகக் கலைத்துவிட்ட மத்திய பாஜக அரசு, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது என்று வை.கோ. வருத்தத்துடன் தெரிவித்தார்.

20210316143308538.jpg

தமிழகத்தில் தேர்தல் முடிந்த கையோடு... தமிழகத்தின் மீதுள்ள எரிச்சலில் மத்திய பாஜக அரசு, சென்னையில் இயங்கி வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீடு முதன்மை தீர்ப்பாயம் உட்பட இன்னும் பல தீர்ப்பாயங்களை கலைத்துள்ளது. மத்திய அரசின் முர்க்கதனமான, நிர்வாக நடவடிக்கையையே இது வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் - தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்களின் மீதும் உள்ள எரிச்சலில், சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்தது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சினிமாட்டோகிராப் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், வருமான வரிச் அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையகம், இந்திய விமான நிலைய மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், தாவர வகை மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்ட பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், காப்புரிமைகள் (patents), வர்த்தக முத்திரைகள் (trademarks), புவியியல் அறிகுறிகள் (geographical indications) ஆகிய மேல்முறையீட்டு 9 தீர்ப்பாயங்களை, அவசர கோலத்தில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து கலைத்துள்ளது. எதற்காக, யாரைத் திருப்திபடுத்த இதெல்லாம் நடக்கிறது என்பதே சட்டவல்லுநர்களின் கேள்வியாக உள்ளது.

தீர்ப்பாயங்கள் கலைக்கப்பட்டது, எந்தவித நீதிமன்ற தலையீடும் இல்லாமல்... தனியார் கோடீஸ்வர தொழிலதிபர்கள், தொழில் செய்யவே மத்திய அரசின் அவசர சட்டம் இயற்றப்பட்டதா என்பதே பலரது கேள்வியாக உள்ளது. ஆங்கிலேயர்கள் கூட, மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் நீதிமன்றங்களை கலைக்கவில்லை என டெல்லியில் உள்ள முத்த எம்.பி நம்மிடம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் தமிழகத்திற்கு வரும் போது தமிழின் பெருமைகளை பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் சொல்லும் செயலும் தமிழகத்துக்கு நன்மை பயக்குமா என்ற எண்ணம் தமிழக மக்களிடையே பரவலாக பேசும் பொருளாகிவிட்டது!