தொடர்கள்
சோகம்
நெஞ்சு பொறுக்குதில்லையே... - மரியா சிவானந்தம்

20210316084727687.jpg

சில ஆண்டுகளுக்கு முன் நான் இலாகா பயிற்சிக்காக திருவனந்தபுரத்துக்குச் சென்று, சில வாரங்கள் தங்கி இருந்தேன். அப்போது ஏற்பட்ட அனுபவம், இன்னும் என் மனதை விட்டு மறையாமல் இருக்கிறது.

வழக்கம் போல் அந்தப் பயிற்சி மையத்தின் முகப்பில் உள்ள படிப்பறையில் அமர்ந்து நாங்கள் செய்தித்தாள்கள் மற்றும் வாரப் பத்திரிக்கைகளைப் படித்துக் கொண்டிருந்தோம். அப்போது காட்டன் சேலையில் கம்பீரமாக வந்த ஒரு பெண், மலையாள செய்தித்தாள்களைப் படிக்க தொடங்கினார். பின்னர் மலையாள மொழியிலேயே அங்கிருக்கும் பெண் அலுவலர்களிடம் உரையாடினார். அவர்கள் பேசுவது முழுவதுமாக புரியா விட்டாலும், அன்றைய அரசியல் நிலவரம் பற்றி பேசுகிறார்கள் என்று புரிந்தது. நான் அவரைக் கூர்மையாக கவனித்துக் கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில், அவர் கையில் பக்கெட்டும், துடைப்பமும் எடுத்துக் கொண்டு கழிவறையைச் சுத்தம் செய்து, தன் வேலையைத் தொடர்வதைக் கண்டேன்.

முழுமையான கல்வி அறிவு பெற்ற ஒரு மாநிலத்தில், ஒரு துப்புரவு பணியாளர் படிப்பதையும், ஆர்வமுடன் அரசியல் பேசுவதையும் காணும் போது மனதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. கல்வி அறிவு தரும், நிமிர்வும், நம்பிக்கையும், சுடர் விடும் அப்பெண்ணின் முகம் இன்னும் என் மனதில் இருந்து அகலவில்லை. கேரளா மட்டுமல்ல... தென் மாநிலங்களில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுவதும், பெண்கள்.. மன, உடல் நலத்துக்காக, மாநில அரசுகள் பெரு முயற்சி மேற் கொள்வதும் நாம் காண முடிகிறது. அதனால், பெண்கள் எழுச்சி மலர்ந்திருப்பதை உணர முடிகிறது. கல்வித்துறை, மருத்துவம், சமூகநலத்துறை போன்ற அரசின் துறைகள் நம் தமிழகத்தில் முழுமையாக செயல்பட்டு, கிராமச் சுகாதாரம், கிராமப் பொருளாதாரம் மேம்பட பல செயல்திட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

ஆனால், வடமாநிலங்களில் பெண்களின் நிலைமை மிகவும் வேதனைக்குரியது. சமீபத்தில் செய்தித்தாள்களில் படித்த செய்தி ஒன்று நம்மைத் திடுக்கிட செய்தது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில், வேலைக்குச் செல்லும் கிராமத்துப் பெண்கள், தாம் செய்யும் வேலைக்கு மாதவிடாய் இடையூறாக இருப்பதால் தங்கள் கருப்பையை அகற்றி விடுகிறார்கள் என்ற அச்செய்தி நமக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பீட் (Beed) மாவட்டம், மிகவும் பின்தங்கிய வறட்சி மிக்க மாவட்டம். அங்கு கல்வி அறிவு அற்ற பெண்கள் ஏராளம். இவர்கள் கரும்புத்தோட்டங்களில் கூலி வேலைக்குப் போகிறார்கள். அங்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு, வலி இவர்களின் வேலைத்திறனைக் குறைப்பதாக இருப்பதாலும், பெண்கள் கழிவறைகள் இல்லாத காரணத்தாலும், பெண்கள் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இப்பெண்களில் பலருக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிலேயே திருமணம் முடிந்து விடுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாய்மை அடைகிறார்கள். இருபது வயதில் கருப்பையை அகற்றி விட்டு, கரும்புத் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்று விடுகிறார்கள். மாதவிடாய் தொல்லைகளில் இருந்து விடுபட்ட உணர்வுடன் தங்கள் பணியைத் தொடர்கிறார்கள்.

20210316084805231.jpeg

உண்மையில் கருப்பை அகற்றப்பட்டபின், பெண்களின் உடல்நிலை, மனநிலையில் ஏற்படும் மாறுதல்கள், பின் விளைவுகள் பற்றிய புரிதல் இப்பெண்களுக்கு இல்லையா அல்லது இச்செயலைச் செய்ய அவர்கள் நிர்ப்பந்திக்கப் படுகிறார்களா என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

கரும்புத்தோட்டங்களில் பெண்கள் ஒப்பந்தக்காரர்கள் வழியாகவே அமர்த்தப்படுகிறார்கள். வருட ஊதிய ஒப்பந்தத்தில் கணவனும், மனைவியும் ஒன்றாகவே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டு மனைவி வேலைக்கு வராத போது சம்பளத்தில் பிடித்தம் செய்வதுடன், அபராதமும் உண்டு. கருணை இல்லாத ஒப்பந்தக்காரர்கள், பெண்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு வரவழைத்து, கடுமையாக வேலை வாங்குவார்கள். மாதவிடாய் தொல்லை கொண்ட நடுத்தர வயது பெண்கள் மட்டுமல்ல, இளம் பெண்களும் இதனால் கருப்பையை அகற்றி விட்டு உழைக்கச் செல்லும் கொடுமை அங்கு நடக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் அதிகமான உதிரப்போக்கைக் காரணம் காட்டி, புற்றுநோய் பயத்தை ஏற்படுத்தி, கருப்பையை அகற்றி விடும் சம்பவங்களும் நடக்கின்றன. மருத்துவர்களும் இதற்கு துணை போகிறார்கள் என்பது மிகப்பெரிய வேதனை. உண்மையில் சாதாரண மருந்து, மாத்திரை சிகிச்சையில் குணமாகக் கூடிய கருப்பை பிரச்சனைகளுக்கும், அறுவைச் சிகிச்சை செய்து பணம் பார்க்கிறார்கள் அந்த மருத்துவர்கள். ஒப்பந்தக்காரர்கள், பெண்களுக்கு இந்த சிகிச்சைக்கு முன்பணம் தருவதும், மருத்துவர்களுடன் உடன்பாடு செய்துக் கொண்டு கருப்பையை அகற்றுவதும் செய்தித்தாளில் வெளி வந்துள்ளன.

20210316084841247.jpg

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்சினை ஊடகத்தில் வெளியாகி, புழுதியைக் கிளப்பியது. பின்னர் டாக்டர் நீலம் கார்கே தலைமையில் ஏழு பேர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டு, கள ஆய்வு நிகழ்த்தியது. அந்த ஆய்வில் பீட் மாவட்டத்தின் 82,309 பெண்கள் பரிசோதிக்கப்பட்டதில் 13,861 பெண்கள் தங்கள் கருப்பையை அகற்றி இருப்பது உறுதியானது.

இவர்களில் 35-40 வயது கடந்த பெண்கள் மட்டுமல்ல... 25 வயது பெண்களும் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. டாக்டர் கார்கே 140 பக்கங்கள் கொண்ட தன் குழுவின் அறிக்கையை, அரசுக்கு சமர்ப்பித்துள்ளார். ‘குறைந்த வயது திருமணம், வறுமை, உடல்நிலைக் குறித்த போதிய விழிப்புணர்வின்மை, தண்ணீர் பஞ்சம், சுகாதாரமற்ற சூழல், பணி இடங்களில் கழிப்பறைகள் இல்லாமை, மாதவிடாய் காலங்களில் வேலைக்குச் செல்லாத போது ஏற்படும் ஊதியக் குறைப்பு’ போன்ற குறைகளை அந்தக் குழு இந்த ‘மாஸ் ஹிஸ்ட்ரெக்டமி’க்கு காரணங்களாக எடுத்துக் கூறியது.

20210316084922901.jpg

இப்போதும் தொடரும் இந்த அவல நிலை குறித்து ‘இந்து பிசினஸ் லைன்’ இதழ் செய்தி வெளியிட்டதை அடுத்து, இந்த வாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிராவின் தலமைச் செயலருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இது ‘பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை’ என்று கண்டித்துள்ளது. இந்த கிராமப்புற பெண்களின் வேதனைகளை, இனியும் தொடர முடியாது என்று ஆவேசமாக கண்டித்துள்ளது.

இளம் வயதில் கருப்பை அகற்றப்பட்டால் ஏற்படும் பின் விளைவுகள் இப்பெண்களின் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். அறுவை சிகிச்சைக்கு பின்னர், இவர்கள் போதிய ஓய்வு எடுக்க இவர்களின் சூழல் ஒத்துழைப்பதில்லை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கரும்புத் தோட்டத்தில் இவர்கள் உழைக்க வேண்டிய கட்டாயம்.

இவர்களை முன்னிறுத்தி வருட முதலில் பணம் வாங்கிக் கொள்ளும் இவர்களின் கணவர்களும், இப்பெண்களின் உடல்நிலையைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மூட்டு வலி, கால்சியம் குறைபாடு, எலும்புகள் தேய்தல் என்று பல்வேறு தொந்தரவுகளுடன், ஒரு கரும்பு வெட்டும் இயந்திரமாக இப்பெண்கள் வாழ்கிறார்கள். கருப்பையுடன், ஓவரிகளையும் சேர்த்து அகற்றப்பட்டால்... ஹார்மோன் குறைபாடுகள் ஏற்பட்டு, அவர்களின் மனநிலையிலும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

சமூக நலத்திட்டங்கள், நகர்ப்புறங்களை விட கிராமங்களுக்கு அதிகம் தேவையாக உள்ளன. இன்னும் கல்வியும், செழுமையும் எட்டிப் பார்க்காத சிற்றூர்களில், நிலப்பிரபுத்துவ அடிமைத்தனம் தொடர்கிறது. வறுமைக்கு ‘வாக்கப்பட்டு’ச் செல்லும் இப்பெண்களின் துயர் நெடுங்கதையென தொடர்கிறது. அதன் விளைவு இந்தக் காலியான கருவறைகள் (Empty Wombs).

பாரதியார் பிஜித்தீவின் கரும்புத்தோட்டங்களில் வாடும் இந்தியப் பெண்களைப் பற்றி எழுதிய பாடல், இன்று ‘பீட்’ மாவட்ட பெண்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
எண்ணம் இரங்காதோ? - அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார்,
(அந்தக் கரும்புத்தோட்டத்திலே)

‘ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்’ என்பது பழமொழி. இந்த ஏழைப் பெண்களின் கண்ணீர் ‘படை’ கொண்டு திரண்டு வரும் போது இந்த நிலப்பிரபுக்களின் சாம்ராஜ்ஜியங்கள் தவிடு பொடியாகும்.

அந்நாள் விரைவில் வந்திடும்...