சென்னையில் இருந்து 35 கிமீ தூரத்தில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஆண்டார்குப்பம் கிராமம்.... இங்கு மிகப் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது.
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நின்ற கோலத்தில் இருக்கும் முருகப்பெருமான் எந்தவித ஆயுதங்கள் இன்றி காட்சி தருகிறார். நின்ற கோலத்தில் இருக்கும் முருக பெருமானை பார்த்து அருணகிரிநாதர் மனமுருகி திருப்புகழ் பாடியதாக வரலாறு உண்டு.
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நின்ற கோலத்தில் இருக்கும் முருகப்பெருமான் காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞராகவும், மாலை நேரத்தில் வயோதிக தோற்றத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பிரம்மா அவசர பணி நிமித்தமாக, சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலைக்கு முருகன் சன்னதி வழியாக சென்றார் .
தன்னை கவனிக்காமல், பிரம்மா செல்வதை கவனித்த முருகப்பெருமான் கோபம் கொண்டார்.
பிரம்மாவை அழைத்த முருகன்… நீங்கள் யார்? என்ற அதிகார தோரணையில் கேட்டார்.
நான் படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா. நான் அவசர வேலை நிமித்தமாக, கைலாயம் சென்று ஈசனை சந்திக்க செல்வதால் தங்களை கவனிக்காமல் சென்று விட்டேன் என்று சொன்னார்.
கோபமான முருக பெருமான், பிரம்மனை நோக்கி... ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்திற்கு சரியான அர்த்ததினை சொல்லிவிட்டு, இங்கிருந்து நகருங்கள் என்று முருக பெருமான் தன் இடுப்பிலே இரு கரங்களையும் வைத்து கொண்டார்.
பிரம்மா, ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாமல் திருதிருவென விழித்தார்.
கோபமடைந்த முருகப்பெருமான், பிரம்மாவின் தலையில் ஓரு குட்டு வைத்து அங்கே இருந்த ஒரு கருங்கல்லில் சங்கிலியால் கட்டிப்போட்டு சிறை வைத்துவிட்டார்.
ஆண்டார்குப்பம் திருத்தலத்தில் முருகபெருமான் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் விழித்த பிரம்மாவை, சங்கிலியால் கட்டிப்போட்டு சிறைவைக்கப்பட்ட செய்தி அறிந்த சிவபெருமான், முருகப்பெருமானிடம் வேண்டி பிரம்மாவை விடுவிக்க செய்தார். பிரம்மாவும் தன் தவறை உணர்ந்து முருகனிடம் வருத்தம் தெரிவித்ததால் விடுவிக்கப்பட்டார் என்ற ஐதிகம் உண்டு.
பிரம்மாவிடம் அதிகாரத் தோரணையில், தனது இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து கேள்வி கேட்ட முருகன், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகார முருகனாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
ஆண்டார்குப்பம் முருகன் சந்நிதிக்கு வரும் பக்தர்கள் கொடிமரத்துக்கு அருகில் பிரம்மா சங்கிலியால் கட்டி சிறைவைக்கப்பட்ட கருங்கல் இன்றும் அப்படியே உள்ளது. கோயில் தூணில் இந்த நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளது.
இடுப்பில் கைவைத்து அதிகார தோரணையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் முருக பெருமான், ஆண்டார்குப்பம் திருத்தலத்தை தவிர வேறு எங்கும் கிடையாது என்பது சிறப்பாகும்.
தனக்கு உயர் பதவி வேண்டும், புத்திரபாக்கியம் வேண்டுமென்று ஆண்டார்குப்பம் முருகனிடம் வேண்டினால் நிச்சயமாக அவர்களுக்கு முருகன் அருள் பாலிப்பார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
ஒரு சமயம் முருகப்பெருமான் இத்தலத்தில் இருப்பதை அறிந்து, அவரை காண ஆண்டிகள் சிலர் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்யலாம் என குளத்தை தேடினர். நீராட எங்கும் குளம் இல்லை.
அப்போது வயோதிகர் வேடத்தில் வந்த முருகப்பெருமான், அங்கு நின்றிருந்த ஆண்டியர்களை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றார். தன் கையில் இருந்த வேலால் அருகிலிருந்த தரையில் குத்தினார். அப்போது அங்கு நீர் பொங்கியது. ஆண்டியர்கள் மகிழ்ச்சியுடன் நீராட தொடங்கினர். அங்கு நீராடிக் கொண்டிருந்த ஆண்டியர்களுக்கு, ‘முருகன் சிறுவனாக’ காட்சி கொடுத்ததால்... முருகனுக்கு பாலசுப்பிரமணியர் என்ற பெயரும் வந்தது. ஆண்டியர்களுக்கு காட்சி கொடுத்து, நீராட திருக்குளத்தை முருகன் அமைத்து கொடுத்ததால், இத்திருத்தலம் ஆண்டார்குப்பம் என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டார்குப்பம் முருகன் கோயில் வழியாக சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுல்தான் ஒருவர் தனது படைகளுடன் அடுத்த நாட்டின் மீது போர் புரிய சென்றார். அங்கிருந்த பக்தர்களிடம் தன் வெற்றிக்காக முருகனிடம் வேண்டிக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றார்.
சுல்தான் போரில் வெற்றி பெற்று மீண்டும், ஆண்டார்குப்பம் வழியாக தனது படைகளுடன் வந்தார். வெற்றி பெற்றதற்கு முருக பெருமானின் அருள் தான் காரணம் என்று ஊர் மக்களிடம் பெருமையாக சொன்னவர், முருகன் கோயில் கட்ட, இடமும் அதற்கான பொன்னும், பொருளும் கொடுத்து விட்டு சென்றதாக வரலாறு உண்டு.
ஆண்டார்குப்பம் முருகனுடன் மயிலும் ,சிம்ம வாகனமும் இருக்கிறது. சிம்ம வாகனம், தனது தாயார் பார்வதியின் வாகனம் என்பதால் பார்வதி தேவியும் வந்து சென்றதாக ஐதீகம் உள்ளது. முருகன் அருகில் இருக்கும் சிம்ம வாகனம், மயில் வாகனத்தை தாங்கியபடி இருப்பது இந்த கோயிலின் சிறப்பாகும்.
ஆண்டார்குப்பம் முருகன் கோவிலை சுற்றி குடிநீர் சுவையாக உள்ளது. சம்வர்த்தனர் என்ற தன் பக்தர் வேண்டுதலுக்காகவே முருக பெருமான் ஆண்டார்குப்பத்தில் கோயில் கொண்டார் என்றும் தன் பக்தன் மனம் குளிர, பாலநதி தீர்த்த குளத்தினை ஏற்படுத்தினார் என்று தலபுராண வரலாறு உள்ளது.
இது தவிர, முருக பெருமான் தன்னுடைய வேலால் தரையில் குத்தியதால் வந்த தீர்த்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் இன்று வரை குடிநீர் சுவையாக உள்ளது என்று இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பரணி நட்சத்திர நாளன்று, ஆண்டார்குப்பம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரவு முழவதும் தங்கி, அங்கு நடைபெறும் அபிஷேக – ஆராதனைகளை பார்த்து தங்கள் வேண்டுதல்களை நிவர்த்தி செய்து கொண்டு செல்கின்றனர்.
ஆண்டார்குப்பம் முருகன் கோயிலின் மூலவராக அதிகார முருகன், காசி விசுவநாதர், விசாலாட்சி, நடராஜர் என தனித்தனி சன்னதிகள் உள்ளது.
ஆண்டார்குப்பம் முருகனுக்கு சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் விழா வருடம்தோறும் நடக்கிறது. வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, குமார கந்த சஷ்டி, பங்குனி உத்திர விழாக்கள் சிறப்புற இங்கு நடைபெறுகிறது.
ஆண்டார்குப்பம் முருகனிடம் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் பாலாபிஷேகம் மற்றும் சந்தன காப்பு செய்து தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
மனிதர்களின் வாழ்க்கையில், சிறுவயதில் குழந்தையாகவும், நடுவயதில் இளைஞராகவும், முதுமையில் முதியவராக மாறுவதே காலசக்கரத்தின் பணி என்பதால்... அதனை போன்று இத்திருத்தலத்தில் காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞராகவும், மாலையில் முதியவராகவும் மூலவர் முருகபெருமான் காட்சி அளிப்பது உலகில் இங்கு தவிர வேறு எங்கும் இல்லை என்பது இத்திருக்கோயிலின் சிறப்பு.
ஆண்டார்குப்பம் அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12. 30 மணி வரையும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 30 மணி வரையும் பக்தர்களுக்காக திறந்திருக்கும்.
Leave a comment
Upload