நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி...ஹி ஒட்டு) கேட்ட உரையாடல்கள்...
சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு குடும்பத்தினர்...
“ஏங்க நம்ம பையன் எதோ புக் கேட்குறான், காசப் பாக்காம வாங்கிக்குடுங்க..”
“ஏண்டி புக்குக்கு என்ன, நான் எதுக்குமே காசப் பாக்கறது இல்லேன்னு உனக்கே தெரியும், இப்ப எதுக்கு சீன் போடற?”
“அது.. உங்களுக்கு பின்னால நம்ம பக்கத்துக்கு வீட்டு பரிமள மாமி புடைவை மாதிரி தெரிஞ்சுது, அதான் சொன்னேன். இப்போ தான் திரும்பவும் பாத்தேன், அது அவுங்க இல்ல. நீங்க வாங்கி குடுக்கலேன்னாலும் பரவாயில்லை.”
“இப்படி திடீர் திடிர்னு இங்கிலாந்து இந்தியா மேட்ச் அம்பயர் மாதிரி மாத்திக்கிட்டே இருக்க..”
“நம்ம எடப்பாடி எல்லாம் உன்கிட்ட கத்துக்கணும்டி.. மனைவியை புகழ்ந்து கொண்டே செல்கிறார்......”
ராமகிருஷ்ணன், பெரம்பூர்.
இப்ராஹிம் பூங்காவில் வாக்கிங் போகும் இருவர்...
“என்னப்பா, உங்க சின்னம்மா அரசியல்லேர்ந்து விலகுறேன் அப்பிடின்னு அறிக்கை விட்டுட்டாங்க...”
“அங்க தான் இருக்கு சூட்சமமே, அந்த அறிக்கையை நல்லா படிச்சு பாரு புரியும், நல்லா பாரு..”
“புரியல, என்னப்பா இது திருவிளையாடல் சிவன் மாதிரி...”
“புரியல, ஒதுங்கிக்கறேன்னு தான் சொல்லி இருக்காங்க. அரசியலை விட்டே விலகுகிறேன், அப்படின்னு சொல்லலை... இப்போ திமுகாவை தோக்கடிக்கறது ரொம்ப முக்கியம். அது புரியாம இந்த டிடிவி முதலமைச்சர் ஆவணும்னு மல்லுக்கட்டுறான். அவனை அடக்கறது, அப்புறம் EPS, OPS இவங்க ரெண்டு பேரையும் சேத்தால் நிறைய நல்லது நடக்கும்னு நினைக்கறாங்க..”
“எப்பா ஒரு அறிக்கையிலே இவ்வளவு அர்த்தம் இருக்கா?”
நடை பயிற்சியை தொடர்கின்றனர்.
ராமன், ஸ்ரீரங்கம்.
தாமிரபரணி குறுக்குத்துறையில் இருவர்...
“என்ன வே, வோட்டிங் ஏப்ரல் 6, ஆனா கவுன்டிங் மே 2 ஆம் தேதின்னு தள்ளி வெச்சுட்டாங்களே.”
“அந்த ஒரு மாச கேப்புல இவன்னுங்க அடிச்சுகிட்டு சேது, மிச்சம் இருக்கறவன் முதலமைச்சரா செலக்ட் பண்ணிக்கலாம்னு நெனைக்கிறாங்களோ என்னமோ.”
“அப்படி இருக்கவும் வாய்ப்பு இருக்கு.”
இருவரும் குளிக்க இறங்குகின்றனர்.
பிரபு, திருநெல்வேலி.
சைதாப்பேட்டை மசூதி தெருவில் ஒரு வீட்டு வாசலில்...
“ஏன்பா, என்ன 835 ரூபா கேக்குற, போன தடவை கூட 750 ரூபா தானே கொடுத்தேன்..”
“அதெல்லாம் நீங்க மோடியை கேக்கணும், 125 ரூபா ஏறி இருக்கு. சரி எங்க போடணும்னு சொல்லுங்க.”
போட்டுவிட்டு காசை எண்ணுகிறார். என்னம்மா சரியா 835 கொடுத்திருக்கீங்க. ஏதாவது கொடுங்கம்மா, ரெண்டு மாடி ஏறி போட்டுருக்கேன்..”
“டெலிவரி பண்ண தனியா காசு கொடுக்கவேண்டாம், தனியா காசு கேட்டா புகார் பண்ணுங்கன்னு கோர்ட் உத்தரவு போட்டுச்சே பேப்பர்ல படிக்கலையா..”
“ஏம்மா வில ஏறினது தெரியலன்னு சொல்றீங்க, இது மட்டும் கர்ரக்ட்டா தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே, நல்ல வெவரம்மா நீங்க...”
சிரித்துக்கொண்டே மேலும் காசு கொடுக்கிறார்..
சுந்தரி, சைதாப்பேட்டை.
கார்பொரேஷன் பார்க்கில் இருவர்...
“என்ன டா, திடீர்னு வந்துருக்கே, ஜனவரி முடிஞ்சதுக்கப்புறம் உன்ன காணலையே..”
“ஆமாம்டா டாக்டர் சொன்னாரு, வாக்கின் போனா உங்களுக்கு ரொம்ப நல்லது, அவசியம் போங்கன்னாரு, சரின்னு new year resolutionல சேத்துக்கிட்டேன்.”
“அப்புறம் ஏன் நிறுத்தின..”
“அட போடா, இருக்குற டயர்டுல, இன்னும் கொஞ்சம் தூங்குனா தேவலைன்னு தோணுது, அதன் வரல..”
“சரி, இன்னிக்கு என்ன திடிர்னு..”
“ஊர்லேர்ந்து ஒரு இன்டெர்வியூவுக்காக சுஜி வந்துருக்கா, நேத்திக்கு எதேச்சையா நான் எழுதி வெச்சிருந்த டயரிய பாத்துட்டு, வாக்கிங்க்லாம் போறீங்களா அத்தான், அப்படின்னு கேட்டா... எப்படியோ சிரிச்சு சமாளிச்சுட்டேன், இன்னிக்கு காலைலயே எழுப்பி விட்டுட்டா, அதான்”
வழிகிறார்.....
“ஆகா, ஒய்ப், பிரண்ட் யார் சொன்னாலும் கேக்காத நீ, மச்சினி சொன்னவுடனே கேட்டுட்டே, விளங்கிடும்.”
வெக்கப்பட்டு சிரித்துக்கொண்டே போகிறார்.
சீர்காழி, சதீஷ்.
ராயபுரம் பஸ் ஸ்டாண்டில் இருவர்...
“ஒரு வழியா உங்க தலைவர் உண்மைய ஒத்துக்கிட்டார் போல...”
“என்ன உண்மை..”
“கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டார் பத்தியா, அறுபது வயசுக்கு மேல இருக்கறவுங்க எல்லாம் போட்டுக்கலாம்னு சொன்னப்புறம்..”
“அதையும் ஆம்ஸ் தெரிய போட்டோ எடுத்து, தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துறதெல்லாம், வேற லெவல் மச்சி..”
“யாரு மோடியை சொல்றியா?”
“நான் நம்ம ஆழ்வார்பேட்டை ஆண்டவர சொல்றேன்.”
“சரிதான் பாபநாசம் 2 உண்டு, பிக் பாஸ் 5 ம் உண்டு, பின்ன கல்லா கட்டுனா தான கட்சியை நடத்த முடியும்..”
அதுவும் சரி தான்.....
இருவரும் சிரித்துக்கொண்டே நடக்கின்றனர்..
குமார், ராயபுரம்.
Leave a comment
Upload