தொடர்கள்
Daily Articles
உலகம் சுற்றும் விகடகவி - அழகு சாதனங்களுக்கு பின்.... ! ராம்.

20201019183748428.jpg

உலகம்

20201019191058909.jpg

ஃபைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி 95 சதவிகித வெற்றியை தருகிறது என்று அறிவித்திருக்கிறது.

ஃபைசர் நிறுவனமும் பயோடெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த தடுப்பு ஊசிக்கு அடுத்த மாதம் அமெரிக்காவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலதரப்பட்ட வயதினரிடம் இந்த தடுப்பூசி வேலை செய்கிறதாம். குறிப்பாக 65 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கும் இந்த தடுப்பூசி வேலை செய்கிறதாம்.

இது பெரிய ஆறுதல் ஏனெனில் இந்த வயதினருக்குத் தான் கரோனாவால் ஆபத்து அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இவர்களுக்கே இது வேலை செய்தால் மற்ற வயதினருக்கு நிச்சயம் செய்யும் என்று நம்புகிறார்கள்.

எஃப்.டி.ஏ என்று சொல்லப்படும் food and drug Administration என்ற அமெரிக்க மருத்துவத் துறை இதற்கு அவசரகால முறையில் அனுமதி அளித்தால் டிசம்பரின் இறுதியில் இது கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

ஃபைசர் நிறுவனம் சொல்கையில் எல்லாம் நல்லபடியாக நடந்தால் இந்த வருட இறுதிக்குள் ஐந்து கோடி தடுப்பூசி தயாரிக்க முடியும், அடுத்த வருடத்தில் அதுவே பதிமூன்று கோடி தடுப்பூசி தயாரிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்களுள் ஒருவர் மைக் ரயான் சொல்கையில் இன்னும் ஆறு மாதங்களாவது ஆகும் தடுப்பூசி பரவலாக உலகம் முழுவதும் சென்றடைய என்கிறார்.

இதனிடையா ஃபைசர் நிறுவனத்தின் பங்குகள் விலையேறியிருக்கிறதாம்.

உலகப் பணக்கார மனிதர் வாரன் பஃவட் கூட ஆப்பிள் நிறுவனத்திலிருந்து தன் பங்குகளை விற்று விட்டு மருந்து நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறாராம்.

உலக சந்தைகளில் பணம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் பங்குச் சந்தையில் மருந்து கம்பெனி மீது கவனம் வைத்திருக்கிறார்கள்.

எவன் எப்படியாவது செத்தால் என்ன, பணம் பண்ணனும் அது தானே பணக்காரர்களின் ஒரே குறிக்கோள்.

ஐரோப்பா

இங்கிலாந்து

2020101919114185.jpg

2030 க்குள் இங்கிலாந்தில் பெட்ரோல் டீசல் கார்களை தடை செய்ய உத்தேசித்திருக்கிறது பிரிட்டன் அரசு.

2050க்குள் சுத்தமான எரிசக்தி மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்று முடிவு கட்டியிருக்கிறது.

பிரிட்டன் பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் “ இது தான் நேரம். உயர் திறன் வேலைகளை உருவாக்கி மக்களுக்கு இந்த நாட்டை சுத்தமானதாக மாசு இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்”

20201019191318378.jpg

சுஜாதா ஒரு முறை பெட்ரோல் பற்றி எழுதும் போது 2020 வரைக்கும் தான் எண்ணெய் கிணறுகள் தாங்கும் அதற்குள் மாற்று எரிபொருளை யோசிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

2020 தாண்டியும் எண்ணெய் கிணறுகள், எண்ணெய் தருகின்றன. ஆனால் இன்னும் 20 வருடங்கள் வரை தாங்குமா தெரியவில்லை.

நம் தலைக்கு மேல் அபார சக்தியாக எரிந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய பந்து சூரியன். அதன் ஆற்றலை மட்டுமே நம்மால் உறிந்து கொள்ள முடிந்தால் இன்னும் பல மில்லியன் வருடங்களுக்கு எரி சக்தி போதும்.

அதற்குத் தான் உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது.

டெஸ்லா கூட மின்சாரத்திலிருந்து எரிகலனை சார்ஜ் செய்து கொண்டு ஓடுகிறது என்றாலும் இதுவுமே சூரிய சக்தி கிடையாது. கார்கள் மாசில்லாமல் ஓடும் என்றாலும் இந்த மாற்று சக்தி, மின்சாரமும் 100 சதவிகிதம் மாசு இல்லாமல் தயாரிக்கப்படுவதல்ல.

எப்படியோ விரைவில் இந்தியாவிலும் பாட்டரி கார்கள் வந்து விடும்.

எதற்கும் பெட்ரோல் கார்கள் வாங்குவதற்கு முன்னால் நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் இன்னமும் 20 வருடங்கள் தான் அதை ஓட்ட முடியும்.

அமெரிக்கா

737 மாக்ஸ் விமானங்கள்.

20201019191345877.jpg

நினைவிருக்கிறதா ?? போயிங் நிறுவனத்தின் 737 MAX விமான வகைகளை உலகம் முழுவதும் தடை செய்திருந்தார்கள்.

இந்தோனேசியாவிலும் எத்தியோப்பியாவிலும் சில மாத இடைவெளிக்குள் இரண்டு விமான விபத்துக்கள் நடந்து நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.

இதற்கு காரணம் டேக் ஆஃப் ஆனதும் ஏற்பட்ட மென் பொருள் கோளாறு என்று சொல்லப்பட்டது.

2020101919141632.jpg

இப்போது 20 மாதங்கள் கடந்ததும் போயிங் நிறுவனம் இதை ஆதியோடந்தமாக நன்றாக பரிசோதித்து விட்டோம் மென்பொருளையும் சரி செய்து அப்டேட் செய்து விட்டோம் என்று அவர்கள் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க விமானத் துறை இந்த வகை விமானங்களுக்கு தடையை நீக்கியிருக்கிறது.

கரோனா தொற்று காலத்தில் யாரும் பறக்க வில்லை என்றாலும், இது போயிங் நிறுவனத்திற்கு பெரிய வரம்.

அமெரிக்காவின் யு.எஸ். ஏர்லைன்ஸ் தான் இதை மீண்டும் உபயோகத்திற்கு கொண்டு வரப் போகிறார்கள்.

இந்த செய்தி கேட்டவுடன் எத்தியோப்பியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

எங்கள் குடும்பங்களில் தீராத சோகத்தை ஏற்படுத்திய இந்த வகை விமானங்கள் பறக்க அனுமதி கொடுக்கவே கூடாது என்று குமுறுகிறார்கள்.

மென்பொருள் பிரச்சினையென்றால் மொபைல் போனோ, கம்ப்யூட்டரோ அணைத்து விட்டு மீண்டும் ஆன் செய்தால் ஒரு வேளை சரியாகும். சரியாகாமல் போகும். ஒரு முயற்சி எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் விமான டேக் ஆஃபின் போது இந்த சான்ஸ் எடுக்க முடியுமா ??

என்னவோ போங்க. இனி விமானம் ஏறு முன் என்ன வகை விமானம் என்று ஒரு முறை பார்த்துக் கொள்வது அவசியம். அப்படியும் கூட நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. கடைசி நேரத்தில் ஏறமாட்டோம்னா சொல்ல முடியும்.

என்ன கொஞ்சம் உபரியாக பிரார்த்தனை செய்து விட்டு பறக்க வேண்டியது தான்.

ஆப்பிரிக்கா.

சோமாலியா

20201019191545781.jpg

ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த டேவிட் பீஸ்லி என்பவர் ஏற்கனவே கலங்கி போயிருக்கும் கரோனா உலகத்தில் இன்னொரு குண்டைத் தூக்கி போட்டிருக்கிறார்.

அதாவது 2021ம் ஆண்டு உலகத்தில் கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு உணவு பஞ்சம் ஏற்படும் என்பது தான் அது.

அசோசியேடட் பிரஸ் என்ற பத்திரிகை நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இந்த வருடத்தை விட அடுத்த வருடம் மிகக் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று சொல்லியிருக்கிறார்.

20201019192308559.jpg

இதற்கு முக்கிய காரணம் ஐக்கிய நாடுகளிடம் பணம் தீர்ந்து போவது தான்.

ஆப்பிரிக்கா போன்ற பஞ்சம் ஏற்பட்டுள்ள நாடுகளில் ஐக்கிய நாடுகள் ஏராள சேவை செய்து வருகின்றன.

அதற்கு நிறைய பொருளுதவி தேவைப்படும்.

உலக நாடுகள் பொருளாதார உதவி செய்வதால் 2020 தப்பித்து விட்டது.

ஆனால் அடுத்த வருடம் இது இருக்காது என்று சொல்லியிருக்கிறார்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை எரித்திடுவோம் என்றான் பாரதி.

ஆஸ்திரேலியா

20201019191647307.jpg

வெளிநாட்டு மாணவர்கள் தற்போது பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வரும் வாய்ப்பு இல்லை என்று அரசு அறிவித்திருக்கிறது.

ஹாங்காங் போன்ற வளர்ந்த நாடுகளில் பல்கலைக்கழகம் இடம் கிடைக்காதவர்களுக்கு, அல்லது மருத்துவ படிப்பு படிக்க ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்கள், வெளிநாடுகளில் சென்று படிக்க வேண்டும் என்று நாடிச் செல்லும் மாணவர்கள் இப்படி பலரும், கரோனா காலத்தில் கடும் சிரமத்தில் ஆஸ்திரேலியாவில் இருக்க முடியாமல் ஊர் திரும்பியுள்ளனர்.

இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பல்கலைக் கழகங்களை திறப்பதால் திரும்ப பெறுகிறது ஆஸ்திரேலியா.

2020101919234548.jpg

ஆனால் இதில் முதல் முன்னுரிமை உள்ளூர் மாணவர்களுக்குத் தான். வெளியூர் மாணவர்களுக்கு இப்போதைக்கு வர முடியாது என்று சொல்லியிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு.

பிரதம மந்திரி ஸ்காட் மாரீசன் இதை தெரிவித்திருக்கிறார்.

பெரிய வரிசை காத்திருக்கிறது திரும்ப வர. அதில் முதலில் இருப்பது உள்ளூர் மாணவர்கள் தான் என்று சொல்லியிருக்கிறார்.

மார்ச் முதல் மூடப்பட்டிருக்கும் கல்லூரி பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கத் துவங்கியிருக்கின்றன.

உள்ளூர் மாணவர்கள் என்னத்துக்கு வெளி நாடு போனார்கள் என்று மாரீசனிடம் கேட்கத் தோன்றுகிறது. எப்படிக் கேட்பது ???

தென் அமெரிக்கா

பிரேசில்

20201019192019683.jpg

பிரேசில் அதிபர் போல்சனோரா.

பிரேசில் நாட்டில் ஒரு சிஸ்டம் இருக்கிறது. அதாவது தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒரு புனைப் பெயர் அல்லது செல்லப் பெயர் வைத்துக் கொள்ளலாம். இது வாக்காளர்களிடையே அவர்களை சுலபமாக தேர்ந்தெடுக்க ஏதுவாக இருக்கும் என்பதனால் போலும்.

உதாரணத்திற்கு சந்தான கோபால கிருஷ்ணன் என்று பெயர் இருந்தால் சுருக்கமாக சகோகி. என்று வைத்துக் கொண்டு கூட போட்டியிடலாம். அல்லது பெயரை சேர்த்துக் கொண்டு சந்தானம், நரேந்திர மோடி என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

பிரேசிலில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போதைய பிரேசில் அதிபர். போல்சனோரோவின் பெயரை தங்களுக்குப் பின் சேர்த்துக் கொண்டு, அடில்சன் போல்சனோரோ, அல்டோ போல்சனோரோ, ஃபெர்னாண்டோ போல்சனோரோ, ஜூனியர் போல்சனோரோ, வெஸ்லீ போல்சனோரோ, இப்படி. ஒரு 70 பேர் போல்சனோரோவின் பெயரை சேர்த்துக் கொண்டு போட்டியிடுகிறார்கள்.

நம்மூர் அரசியலிலும் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் கற்பனையில் விரியும் வேட்பாளர்கள் பட்டியல் இப்படி இருக்குமோ ??

ஸ்டாலின் காமராஜ், தயாநிதி கக்கன், பழனிச்சாமி எம்.ஜி.ஆர் இன்னமும் பல பெயர்களை சேர்க்க தேடிக் கொண்டிருக்கிறேன் அகப்படவில்லை……

ஆசியா

இந்தோனேசியா மற்றும் மலேசியா

எத்தனை பெண்கள் லோரியல்,யூனிலீவர், ஜான்சன் & ஜான்சன், பிராக்டர் & காம்பிள் ஏவான் நிறுவன அழகு சாதன பொருட்களை உபயோகிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

20201019192439238.jpg

அத்தனை அழகு சாதன பொருட்களிலும் உற்பத்திக்கு அவர்களுக்குத் தேவை பாமாயிலும் அதன் இதர உபரி உற்பத்தி பொருட்களும். மூலக் கூறான இதை தருவிப்பதற்குப் பின் ஒரு கண்ணீர் தோய்ந்த கதை இருக்கிறது.

அழுகையும் சோகமும் ஏராளமாக இருக்கிறது.

இந்தோனேசியா மற்றும் மலேசிய பாமாயில் தோட்டங்களில் வேலை பார்க்கும் பெண்களின் துயரம் அந்த நீண்ட நெடிய மரங்களுக்கு மட்டுமே தெரிந்தவை. அவர்களின் அலறல் சத்தம் அந்த மரங்களை தாண்டி வெளியே கேட்பதில்லை.

அசோசியேடட் பிரஸ் இந்த பெண்களின் துயர் பற்றிய ஒரு கட்டுரையை நீண்ட ஆழமான ஆராய்ச்சிகளுக்குப் பின்வெளியிட்டிருக்கிறது. அந்த புலனாய்வு கட்டுரையின் படி அந்த தொழிலாளர்களின் சோகம் தாங்க முடியாதவை.

குழந்தை தொழிலாளர்களும், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் இந்த பாமாயில் தோட்டங்களில் நடைபெறுகிறது என்று இந்தோனேசிய அமைச்சக ஆளே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பதினைந்து வயது பெண்களையும் ஏறக்குறைய சிறுமிகளையும் இந்த பாமாயில் தோட்டத்தில் வன்புணர்வு செய்து விஷயம் வெளியே தெரிந்தால் கழுத்தை அறுத்துவிடுவோம் என்று சொல்லி வேலை வாங்குகிறார்கள்.

20201019192516555.jpg

21 வயதான இந்திய வம்சாவளி பெண் ஒருவரும் இப்படியான ஒரு கொடுமைக்கு ஆளானவர் தான். பத்திரிகையில் வந்த கட்டுரை இப்படி சொல்கிறது. அவர் வன்புணர்வு செய்யப்பட்டு ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டார். சுருக்கங்களுடன் ஆரோக்கியக் குறைவாக பிறந்த அந்தக் குழந்தை வீறிட்டு அழுவதைக் கூட பொருட்படுத்தாத ஒரு வெறித்த பார்வையுடன் அந்தப் பெண் அமர்ந்திருக்கிறாள் என்று எழுதுகிறார்கள்.

தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் மருந்து அடிக்க, 13 கிலோ எடையுடன், தினமும் சுமார் 300 லிட்டர் பூச்சி மருந்து தெளிக்க வேண்டுமாம். இவ்வளவு கடுமையான வேலை செய்யும் பெண்களுக்கு கர்ப்பப்பையே பிரச்சினையாகி யாருக்கும் சரியான குழந்தை கூட பிறப்பதில்லையாம்.

20201019192536122.jpg

அந்தக் கட்டுரை படிக்கப் படிக்க இப்படியும் கொடுமைகள் வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் நடக்கிறதா என்று நெஞ்சு வலிக்கிறது.

அடுத்த முறை அழகு சாதனப் பொருட்கள், வாசனாதி திரவியங்கள் ஏதேனும் உபயோகிக்கும் போது, அந்த பாமாயில் தோட்டத்தில் மெளனமாக வதைக்கப்படும் பெண்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

நம்மால் அதை தவிர வேறென்ன செய்ய முடியும் ????

ராம்