குழப்பம் வேண்டாம்...
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் காம்ரேட்ஸ்’ என்ற ஆங்கில கட்டுரை 2017 முதல் ஆங்கில முதுகலை பட்டப்படிப்பில் மூன்றாவது செமஸ்டரில் காமன்வெல்த் பாடப்பிரிவில் உள்ளது. தற்போது அதற்கு அகில பாரதிய வித்யா பரிஷத் என்ற பாரதிய ஜனதா ஆதரவு மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன் பல்கலைக்கழக சிண்டிகேட் கூடி அருந்ததி ராய் எழுதிய அந்த கட்டுரையை பாடத்திட்டத்திலிருந்து நீக்க முடிவு செய்து, உடனே நீக்கவும் செய்தது. மாவோயிஸ்டுகள், நக்சல்கள் பற்றிய பாடம் மாணவர்களுக்கு கற்பிப்பது தவறு என்று அந்த மாணவர் அமைப்பு ஆட்சேபனை செய்ததாம், அதனால் அந்தக் கட்டுரை நீக்கப்படுகிறது.
இதை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளது. எழுத்தாளர் அருந்ததிராய் ‘எழுதுவது தான் என் வேலை. அதை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கியதை எதிர்த்து போராடுவது என் வேலை இல்லை’ என்று குறிப்பிடுகிறார். அதே சமயம் சில ஆண்டுகளாகவே அது பாடத்திட்டத்தில் இருந்ததே’ என்றும் சொல்லியிருக்கிறார். எல்லா கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்து கட்டாயம் இருக்கும். தேசப்பிதா காந்திக்கு கோட்சே இருந்ததுபோல் கூட அது இருக்கலாம். ஆனால், அந்த மாற்றுக் கருத்தையும் நாம் தெரிந்து கொள்வது நல்லது.
எழுத்தாளர் அருந்ததிராய் கட்டுரை, ஏதோ ஐந்தாம் வகுப்பு பாடதிட்டத்தில் சேர்க்கப்படவில்லை. எது சரி, எது தவறு என்று புரிந்து தெரிந்து கொண்டு படிக்கக்கூடிய முதுகலை பட்டப்படிப்பில், அந்தக் கட்டுரை சேர்க்கப்பட்டிருந்தது. நக்சல்களின் முகத்தை அவர்கள் தெரிந்து கொண்டால், அதில் என்ன தவறு?! இதனை ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பு சொல்லியது என்பதற்காக நீக்க வேண்டிய அவசியம் என்ன? மாற்றுக் கருத்து வேண்டாம் என்பது கூட மோசமான ஜனநாயகம்தான். பெரும்பான்மை வேறு... ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்பது வேறு... எல்லாவற்றையும் போட்டு குழப்ப வேண்டாம்.
Leave a comment
Upload